July 2019

கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளியாக இருந்தார்களா? அல்லது மனிதரா?மற்றும் அவர்கள் வெளிச்சத்தில் இருந்தாலும் அவர்களுக்கு நிழல் என்பது இருக்கவில்லை என்பது உண்மையா?
பதில் : நமக்கு அனுப்பப்பட்ட தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதமுடைய பிள்ளைகளில் தலைமையானவர் மற்றும் அவர் ஆதமுடைய சந்ததிகளிலுள்ள ஒரு மனிதர், (அவர் ஒரே) தாய் தந்தையிலிருந்து பிறப்பிக்கப்பட்டார், உணவு உண்டார், பெண்களை திருமணம் செய்தார், பசி இருந்தது இன்னும் நோய்வாய்ப்பட்டார், சந்தோஷமடைவதுடன் கவலையும் அடைந்தார், அத்துடன் மனிதத் தன்மையின் வெளிப்பாடுகளில் ஒன்றான உயிர்கள் மரணிப்பதைப்போன்று அவர்களையும் அல்லாஹுத்தஆலா மரணிக்கச் செய்தான். என்றாலும் நபித்துவம், தூதுத்துவம், வஹீ போன்றவைகள் தான் அவர்களை சிறப்பித்தது.
அல்லாஹுத்தஆலா கூறுகிறான் :
{قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ} (الكهف/110)
“(நபியே!) நீர் கூறுவீராக; நிச்சயமாக நான் உங்களைப்போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது.” (அல்கஃப் – 110)
மேலும், மனிதத் தன்மையில் அனைத்து நபிமார்களினதும், இறைத்தூதர்களினதும் நிலைமையைப்போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நிலைமையும்.
அல்லாஹுத்தஆலா கூறுகிறான் :
{وَمَا جَعَلْنَاهُمْ جَسَداً لا يَأْكُلُونَ الطَّعَامَ وَمَا كَانُوا خَالِدِينَ} (الأنبياء/8)
“அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை. மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை.”(அல்அன்பியா -08)
றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனிதத்தன்மையில் ஆச்சரியப்பட்டவர்களை அல்லாஹுத்தஆலா நிராகரிக்கின்றான்.
அல்லாஹுத்தஆலா கூறுகிறான் :
{وَقَالُوا مَالِ هَذَا الرَّسُولِ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِي فِي الأَسْوَاقِ} (الفرقان/7)
“மேலும் அவர்கள் கூறுகின்றனர் ; இந்தத் தூதருக்கென்ன? அவர் (மற்ற மனிதர்களைப் போன்றே) உணவு உண்ணுகிறார். இன்னும் கடைவீதிகளில் நடக்கிறார்.” (அல்புர்கான் -07)
எனவே, குர்ஆனில் நபியவர்களின் தூதுத்துவம், மனிதத்தன்மையில் எந்த விடயங்களைக் தீர்மானமாகக் கூறியுள்ளதோ அவற்றுக்கு அப்பால் நாங்களாகவே வர்ணனை செய்வது கூடாது. அந்த அடிப்படையில் நபியவர்கள் ஒளியானவர் அல்லது அவருக்கு நிழல் கிடையாது அல்லது அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என்றெல்லாம் வர்ணிப்பது கூடாது. மாறாக இவைகளெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட மிதமிஞ்சிய செயற்பாடுகளாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : மர்யமின் புதல்வர் ஈஸா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் செல்லுங்கள்” என்றார்கள். (ஆதாரம் : புஹாரி-6830)
மலக்குமார்கள் தான் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என்றும், ஆதமுடைய சந்ததிகளில் எவரும் ஒளியினால் படைக்கப்படவில்லை என்றும் நபியவர்களின் கூற்று சான்று பகர்கின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். ‘ஜின்’கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போனறு (களிமண்ணால்) படைக்கப்பட்டார். (ஆதாரம் : முஸ்லிம்-2996)
இமாம் அல்பானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது “அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா” (458)ல் குறிப்பிட்டார்கள்;
“மக்கள் மத்தியில் பிரபல்யமாக காணப்படுகின்ற ஹதீஸாகிய “ஜாபிரே! உமது நபியின் ஒளியை முதலாவதாக படைத்தான்” என்ற ஹதீஸும் இவைபோன்ற ஹதீஸ்களான நபியவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என்ற ஹதீஸ்களை நிராகரிக்கக் கூடியதாக மேற்கூறப்பட்ட ஹதீஸ் (முஸ்லிம் : 2996)ஆதாரமாக உள்ளது. ஏனெனில் இந்த ஹதீஸில் மலக்குமார்கள் மாத்திரமே ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என்றும் ஆதமோ, ஆதமுடைய சந்ததிகளோ ஒளியினால் படைக்கப்படவில்லை என்பதற்கு தெளிவான சான்றாக உள்ளது. எனவே, இந்த விடயம் தொடர்பாக எச்சரிக்கையாக இருப்பதுடன், பொடுபோக்காளர்களாக இருக்காதீர்கள்.”
பத்வாக்கள் வழங்குவதற்கான நிலையான குழுமத்திடம் பின்வருமாறு கேள்வி கேட்கப்பட்டது ; இங்கே பாகிஸ்தானிலே “பர்லவீ”கள் எனும் அறிஞர் கூட்டம் உள்ளது. அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் இல்லை என்று உறுதியாக நம்பிக்கைகொள்கின்றார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதத்தன்மை அற்றவர் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் இல்லை என்கின்ற ஹதீஸ் உண்மையாதா?
அவர்களுடைய பதில் பின்வருமாறு இருந்தது; றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களை விட்டும் மனிதத் தன்மைக்கு வேறுபட்டவர்களல்ல என்பதை உணர்த்தும் அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மேற்கூறப்பட்ட (நபியவர்களுக்கு நிழலில்லை எனும்) கூற்றை நிராகரிக்கக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் அவர்களுக்கு மற்ற மனிதர்களைப்போன்று நிழல் இருந்தது. அல்லாஹுத்தஆலா அவர்களை ஒரு தாய் தந்தையிலிருந்து படைத்து மனிதத்தன்மையிலிருந்து வேறுபடுத்தவில்லை. என்றாலும் அவர்களை தூதுத்துவத்தின் மூலம் கண்ணியப்படுத்தினான்.
அல்லாஹுத்தஆலா கூறுகிறான் ;
“(நபியே!) நீர் கூறுவீராக , நிச்சயமாக நான் உங்களைப்போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது.” (அல்கஃப் – 110)
மேலும் கூறுகிறான்;
{قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِنْ نَحْنُ إِلاْ بَشَرٌ مِثْلُكُمْ} (إبراهيم : 11)
“(அதற்கு) அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே தவிர வேறில்லை.” (இப்ராஹீம் 11)
எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என்பதைப் பொருத்தவரை அது ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.” (பத்வாக்கள் வழங்குவதற்கான நிலையான குழு : 1/464)
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே
அரபியில் : https://islamqa.info/ar
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)

இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் “ நீயா ? நாநா ? நிகழ்ச்சி போல நாங்கள் தான் பரம்பரை முஸ்லிம்கள் மற்றவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் கிடையாது அவர்களை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சாரார் பகிரங்கமாக மகஜரை அதிகாரிகளிடம் கையளித்து சந்தோசம் அடைந்து வருகிறார்கள். ?
தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி ஆகிய இந்த மூன்று அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்றும், இன்னும் ஒரு சிலர் தவ்ஹீத் ஜமாஅத்தையும், வஹாபிகளையும் தடை செய்ய வேண்டும் என்றும், இன்னும் ஒரு சிலர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வஹாபி சபை அதை தடை செய்ய வேண்டும் என்றும், இன்னும் ஒரு சிலர் இவர்கள் சவூதியை பின் பற்றுகிறார்கள், எனவே தடை செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம் அல்லாத உயர் அதிகாரிகளிடமும், ஒரு சில அந்நிய மத குருமார்களிடமும் போட்டுக் கொடுத்து, எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று உயிர் பிச்சை கேட்பது போல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள். 
“ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதையாக இவர்களின் கதை உள்ளது. ?
இலங்கையில் ஏற்பட்ட இந்த பிரச்சினையின் மூலம் யார் உண்மையான முனாபிக்குகள் ( நயவஞ்சகர்கள்) என்பதை அல்லாஹ் உலகத்திற்கு தெளிவாக எடுத்து காட்டி விட்டான். அல்ஹம்து லில்லாஹ் !
ஒரு சிலர் இந்த பிரச்சினையை தனக்கு சாதகமாக பயன் படுத்தி எந்த குற்றமும் செய்யாத பிறரை, பழி வாங்கும் எண்ணத்தில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்து, நாங்கள் தான் முனாபிக்குள் என்று நிரூபித்து கொண்டார்கள்.
நபியவர்கள் உயிரோடு இருந்த போது நாங்களும் முஸ்லிம்கள் என்று சில நயவஞ்கர்கள் தன்னை இஸ்லாம் என்ற ஆடையால் மறைத்து இருந்தனர்.
அதை நபியவர்களுக்கு அல்லாஹ் காட்டி கொடுத்திருந்தான். அதனால் தான் அபூ ஹூதைபா (ரலி) அவர்களிடம் சில முனாபிக்குகளுடைய பெயர் பட்டியலை நபியவர்கள் கொடுத்து வைத்திருந்தார்கள்.
ஆனால் . நபி (ஸல்)அவர்கள் மரணித்த சமயம் சிலர் இஸ்லாத்தை விட்டு (முர்தத்துகளாக) வெளியேறினார்கள். உண்மையான முனாபிக்குகளை ஸஹாபாக்களுக்கு அல்லாஹ் காட்டிக் கொடுத்தான். அதை தான் இலங்கையிலும் இப்போது அல்லாஹ் காட்டி கொடுத்து விட்டான்.
“அமைச்சர் இடம் இந்த மகஜரை கையளித்த தரீக்கா சகோதரர்கள், நாங்கள் தான் பாரம்பரிய முஸ்லிம்கள் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் ?
பொதுவாக தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நாங்கள் மட்டும் தான் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொண்டு வந்தார்கள், இப்போது பாரம் பரிய முஸ்லிம்கள் என்றும் கூறுகிறார்கள். தரீக்கா என்ற அமைப்பிற்குள் பல தரீக்கா பிரிவினர்கள் இருக்கிறார்கள். அவர்களே அவர்களை மாறி, மாறி தவறாக விமர்சனம் செய்து கொள்வார்கள். ஆனால் அனைவரும் நாங்கள் தான் சுன்னத் வல்ஜமாஅத் என்றும் சொல்லிக் கொள்வார்கள், அதே போல ஏனைய ஜமாஅத்தார்களும் நாங்கள் தான் சுன்னத் வல்ஜமாஅத் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.
எனவே உண்மையான பாரம்பரிய முஸ்லிம்கள், மற்றும் உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்தார்கள் யார் என்பதை தெளிவுப்படுத்துவதோடு, இந்த இரண்டு பெயர்கள் இருந்தால் தான் சரியான முஸ்லிம்கள். இல்லாவிட்டால் அவர்கள் முஸ்லிம்கள் கிடையாது என்ற தவறான சிந்தனையை இந்த தொடர் தலைப்பின் மூலம் தெளிவுப் படுத்த உள்ளேன். இன்ஷா அல்லாஹ் 

பொதுவாக ஒவ்வொரு சாராரும் தங்களுக்கு என்று ஒவ்வொரு பெயரை வைத்துள்ளனர். அதாவது தப்லீக் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர், ஜமாஅத்தே இஸ்லாமியனர், இன்ன, இன்ன தரீக்காவாதியினர் என்று வைத்துக் கொண்டு நாங்கள் தான் சரி மற்றவர்கள் பிழை என்று குற்றம் சாட்டி சண்டைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு பெயர்கள் முக்கியமல்ல, செயல்பாடுகள் (அமல்கள்) தான் முக்கியமாகும் என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். மறுமை விசாரணையின் போது தப்லீக் ஜமாஅத்தினர் எல்லாம் இந்த பக்கமாக நில்லுங்கள், தவ்ஹீத் ஜமாஅத்தினர் எல்லாம் அந்த பக்கம் நில்லுங்கள். ஜமாஅத்தே இஸ்லாமியர்கள் எல்லாம் இந்த பக்கம் நில்லுங்கள், இன்ன, இன்ன தரீக்காவாதிகள் எல்லாம் அந்த, அந்த பக்கம் நில்லுங்கள் என்று இறைவன் சொல்லப் போவது கிடையாது.
நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இரண்டு அணியினர் பிரிக்கப் படுவார்கள். நல்லவர்கள் அணியில், யாரெல்லாம் நபியவர்கள் காட்டித் தந்த அமல்களை செய்தார்களோ அவர்கள் இருப்பார்கள்.
உலகத்தில் தாங்களாகவே வைத்த அந்த, அந்த பெயர்களை வைத்து யாருக்கும் சுவர்க்கம் கிடைக்காது. ஜமாஅத்தின் பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மார்கத்தை சரியாக நடைமுறைப்படுத்தி இருந்தால் மறுமையில் வெற்றி பெற முடியும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஜமாஅத் பெயர்களைப் பொருத்தவரை உலகத்திற்கு ஓர் அடையாளமே தவிர மறுமைக்கான வெற்றியின் அடையாளம் கிடையாது.
அது போல பாரம்பரிய முஸ்லிகள், மற்றும் சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிகள் என்று பெயர் போட்டால் மட்டும் தான் முஸ்லிம்கள், இல்லா விட்டால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று நினைப்பதும் தவறாகும்.
அதே நேரம் இந்த பாரம்பரிய முஸ்லிகள், மற்றும் சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிகள் என்ற பெயருக்கு யார் பொருத்தமானவர்கள் என்பதை நபியவர்களின் சுன்னாக்களை ஹதீஸ் கிதாபுகளில் இருந்து எடுத்துக் காட்டும் போது அதிமானவர்கள் தெளிவாக விளங்கி தங்களை சீர் படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.
தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி, இந்த மூன்று ஜமாஅத்துகளைப் பற்றியும் சுருக்கமாக சில செய்திகளை முதலில் விளங்கிக் கொள்வோம்.
தவ்ஹீத் என்றால் இறைவனான அல்லாஹ் ஒருவன் மட்டுமாகும், அவனைத் தவிர வேறு யாரையும் இறைவனாக வணங்கக் கூடாது. சகல வணக்க வழிபாடுகளும் அல்லாஹ்வுக்கு மட்டும் செலுத்த வேண்டும். இணை என்ற அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத எந்த பாவத்தையும் செய்து விடக் கூடாது. இப்படி அல்லாஹ்வுக்கு மட்டும் சகல காரியங்களையும் செய்து, அல்லாஹ்வை ஓர்மை படுத்துவதே தவ்ஹீதாகும்.
எனவே அல்லாஹ்வை ஏற்ற எந்த நாட்டு முஸ்லிமாக இருந்தாலும் அவர் இந்த தவ்ஹீத் கொள்கையை அடிப்படையாக ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். நான் தவ்ஹீத் இல்லை என்றால் அல்லாஹ்வை மறுத்ததாக அமைந்து விடும்.
தவ்ஹீத் என்ற வார்த்தை யாருக்கும் சொந்தம் கிடையாது. அனைவருக்கும் பொது உடமையாகும்.
அடுத்ததாக தப்லீக் என்றால் எத்தி வைத்தல். அதாவது நபி (ஸல்) அவர்கள் சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகள் வஹியின் ஊடாக மக்களுக்கு மார்க்கத்தை எத்தி வைத்தார்கள். இது தான் தப்லீக்காகும்.
நான் தப்லீக் இல்லை என்றால் நபியை மறுத்ததாக போய் விடும்.
எனவே அல்லாஹ்வை ஏற்ற எந்த நாட்டு முஸ்லிமாக இருந்தாலும் அவர் தப்லீக் என்ற பணியை அடிப்படையாக ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.
அது போல ஜமாத்தே இஸ்லாமி என்றால் இஸ்லாமிய கூட்டமைப்பாகும்.
முஸ்லிம்கள் எப்போதும் கூட்டமைப்பாகவே இருக்க வேண்டும். பிரிந்து இருக்க கூடாது என்று இஸ்லாம் பல இடங்களில் வலிறுருத்தி கூறுகிறது.
நான் ஜமாஅத்தே இஸ்லாமில் இல்லை என்றால், இஸ்லாத்திற்கு மாற்றமான அமைப்பில் இருப்பதாக அமைந்து விடும்.
எனவே அல்லாஹ்வை ஏற்ற எந்த நாட்டு முஸ்லிமாக இருந்தாலும் அவர் ஜமாஅத்தே இஸ்லாம் என்ற கூட்டமைப்பின் அடிப்படையை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.
எனவே அல்லாஹ்வை ஏற்ற எந்த நாட்டு முஸ்லிமாக இருந்தாலும் இந்த மூன்று அம்சங்களும் ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் இருக்க வேண்டும்.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் தப்லீக் என்றால் நாமாக சில விசயங்களை அமைத்துக் கொண்டு அதை மட்டும் தான் செயல் படுத்த வேண்டும் என்பது தப்லீக்கல்ல,
மாறாக நபி (ஸல்) அவர்கள் வஹி செய்தி மூலமாக எத்தி வைத்த செய்திகளை கூட்டல், குறைத்தலின்றி பிறருக்கு எத்தி வைப்பதாகும்.
அது போல இஸ்லாமிய கூட்டமைப்பு என்றால், நாமாக நமக்கு தோதுவாக ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு இது தான் இஸ்லாமிய கூட்டமைப்பு என்று சொல்ல முடியாது.
மாறாக நபியவர்கள் கூட்டமைப்பிற்காக எப்படி வழி காட்டினார்களோ, அப்படி அமைப்பதாகும்.
தவ்ஹீதும், பிரச்சினைகளும்…?
தவ்ஹீத் என்ற உடன் ஒவ்வொருவரும் பிழையான கருத்தை கொடுத்து, இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் கிடையாது என்ற தப்பான கருத்தை திணித்து வருகிறார்கள்.
ஆனால் தவ்ஹீத் தான் நபியவர்களிடம் இருந்து உலகத்திற்கு வந்த உண்மையான அடிப்படை கொள்கையாகும்.
அதை எடுத்து மக்களுக்கு சொல்பவர்கள் தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று பெயர் வைத்துள்ளனர்.
தவ்ஹீத்வாதிகளை வெறுக்க வைப்பதற்காக இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை,இவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று சில கயவர்கள் குளிர் காய்ந்து கொண்டு, இவர்கள் சவூதி கொள்கையை பின் பற்றுகிறார்கள், அப்துல் வஹாபுடைய கொள்கையை பின் பற்றுகிறார்கள். என்று மார்க்க அறிவின்றி சொல்லித்திரியக் கூடிய அவல நிலையை நாம் கண்டு வருகிறோம்.
இருந்தாலும் இறைவனுடைய ஜோதியை ஊதி அணைக்க முடியாது என்றடிப்படையில் இந்த சத்திய மார்க்கம் எழுச்சிப் பெற்று, மேலெந்து வருகிறது.
“சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்தே தீரும் என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில், யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நபியவர்கள் காட்டித் தந்த இந்த அடிப்படை கொள்கையை யாராலும் அழிக்க முடியாது.
மார்க்கம் என்ற பெயரில் இடையில் வந்த அத்தனை தவறான கொள்கைகளும் வந்த வழியிலேயே சருகுகளாக திரும்பி சென்று விடும். அல்லாஹ் திருப்பி விடுவான்.
சவூதியை பின் பற்றும் தவ்ஹீத்வாதிகள்…?
இறால் தனது தலையில் அசுத்தத்தை வைத்துக் கொண்டு இருப்பதைப் போல, தவ்ஹீத்வாதிகளின் மீது குற்றம் சுமத்துவோர் தன்னிடத்தில் பிழையான கொள்கையை வைத்துக் கொண்டு, பல குற்றச் சாட்டுகளை வேண்டும் என்று திணிக்கிறார்கள்.
அவற்றில் ஒன்று தான் இவர்கள் சவூதியை பின் பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டாகும். உண்மையில் எந்த தவ்ஹீத்வாதியும் சவூதியையோ, வேறு எந்த நாட்டையோ பின்பற்றுவது கிடையாது. குர்ஆனையும், ஹதீஸையும் தான் பின்பற்றுகிறார்கள் என்பது உலகம் கண்ட உண்மையாகும்.
இவர்கள் வேண்டும் என்று அபாண்டமாக தவ்ஹீத்வாதிகளின் மீது பொய் சொல்லி, பொய் சொல்லியே தனது பிழையான கொள்கையில் இருந்தவர்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு ஏற்பட்ட பாரிய சரிவை தாங்கிக் கொள்ள முடியாததினால் தான், இப்படி பல குற்றச் சாட்டுகளின் மூலம் குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்.
தனக்கு தானே இவர்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உலகில் உள்ள எந்த தவ்ஹீத்வாதியும் ஒரு அமலை செய்யும் போது அதற்கு ஆதாரமாக சவூதி என்றோ, அல்லது வேறு நாட்டையோ காட்டுவது கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் சவூதிக்கு மாற்றம் தான் செய்கிறார்கள்.
உதாரணத்திற்கு சவூதியில் ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்குகள் சொல்கிறார்கள். ஆனால் இங்கு தவ்ஹீத் பள்ளிகளில் நபிவழியின் அடிப்படையில் இமாம் மிம்பருக்கு ஏறியப்பின் ஒரு பாங்கு தான் சொல்லப்படுகிறது.
இப்ப சொல்லுங்கள் நாங்கள் சவூதியை பின் பற்றுகிறோமா ?அல்லது நபி வழியை (ஹதீஸை) பின் பற்றுகிறோமா ?
மாற்று கருத்தில் இருப்பவர்களே நீங்கள் நிதானமாக சிந்தியுங்கள். உங்களை உங்களது மௌலவிமார்களும், வழிகாட்டிகளும் உங்களை பிழையான கொள்கையின் பக்கம் வழிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் தொடராக வெளி வர இருக்கும் இந்த கட்டுரைகளை படித்து முடிக்கும் போது நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்.
நீங்கள் உண்மையை விளங்கி இது காலம் வரை இருந்த அந்த பிழையான கொள்கையில் இருந்து விடுபடுவதற்கு இது ஓர் அறிய சந்தர்ப்பமாகும்.
மேலும் சவூதியில் ரமலான் காலங்களில் தராவீஹ் தொழுகை இருபத்தி மூன்று ரக்அத்துகள் தொழுவிக்கிறார்கள், ஆனால் இங்கு மொத்தமாக பதினொரு ரக்கத்துகள் தொழுவிக்கிறார்கள். இப்ப சொல்லுங்கள் நாங்கள் சவூதியை பின் பற்றுகிறோமா ? அல்லது நபி வழியை (ஹதீஸை) பின் பற்றுகிறோமா ?
ஏன் வீணாக பொய் சொல்லி பாவத்தை தேடிக் கொள்கிறீர்கள்.?
இப்படி சொல்வதினால் எங்களுக்கு நஷ்டம் கிடையாது. எங்களுக்கு இலாபம் தான். நீங்கள் சொல்லும் பொய்களை உங்கள் மக்களுக்கு ஆதாரத்துடன் எடுத்துக் காட்டி சத்தியத்தை விளங்க வைக்கும் சந்தர்ப்பத்தை தருகிறீர்கள்.
அதனால் தான் காலம், காலமாக கொள்கை ரீதியான சரிவை நீங்கள் கண்டு வருகிறீர்கள். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.!
இவர்கள் சவூதியை பின் பற்றுகிறார்கள் என்று எதை வைத்து புலம்கிறார்கள் என்றால், பார்த்தீர்களா சவூதியில் நெஞ்சின் மீது கை கட்டுகிறார்கள், அத்தஹியாத்தில் விரல் அசைக்கிறார்கள், என்று குற்றம் சுமத்துகிறார்கள்.
ஆனால் இவர்கள் ஹதீஸைப் பற்றி (மார்க்க) அறிவில்லாதவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.
நாங்கள் எந்த அமலை செய்தாலும் ஏதாவது ஹதீஸ் கிதாபிலிருந்து தான் ஆதாரம் காட்டுவோமே தவிர, வெறுமனே அவர் சொன்னார், அல்லது இவர் சொன்னார், அல்லது அப்படி சொல்லப்பட்டிருக்கிறது, அல்லது இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று மொட்டையாக சொல்ல மாட்டோம்.
மேலும் நாங்கள் செய்யும் அமலுக்கான ஆதாரங்கள் ஹதீஸ் கிதாபுகளில் இல்லை என்றால், ஹதீஸ் கிதாபில் அப்படி கிடையாது என்று பகிரங்கமாக சொல்ல வேண்டும். ஆனால் அப்படி சொல்ல மாட்டார்கள், சொன்னால் மாட்டிக் கொள்வது மட்டும் அல்ல நபியின் மீதே இட்டுக் கட்டியவர்களாக ஆகிவிடுவார்கள்.
எனவே தான் தந்திரமாக சவூதியை பின் பற்றுகிறார்கள். அப்படி, இப்படி என்று சொதப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
அல்லாஹ் தான் இவர்களுக்கு நேர் வழியை காட்ட வேண்டும்.
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள் என்பது ஹதீஸாகும்.
அதை நாங்கள் நடைமுறைப் படுத்துகிறோம். ஆனால் இந்த ஹதீஸை நீங்கள் மறுத்து, நாங்கள் நபியவர்கள் தொழுதது போல தொழ மாட்டோம். எங்கள் மூதாதையர்களை எவ்வாறு கண்டோமோ அப்படி தான் தொழுவோம் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள் என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். ?
இப்ப சொல்லுங்கள் நாங்கள் நபியை பின் பற்றி, அதன் படி தொழுகிறோமா ? நீங்கள் நபியை பின் பற்றி அதன் படி தொழுகிறீர்களா ?
எனவே நபியை பின் பற்றும் நாங்கள் தான் சரியான கொள்கையின் அடிப்படையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ் ! இதை நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்று தான் ஆக வேண்டும். இது சம்பந்தமான இமாம்களோடு சம்பந்தப்பட்ட மேலதிக தகவல்களையும், இமாம்கள் எதை சரிகாண்கிறார்கள் என்ற விசயங்களையும் இன்ஷா அல்லாஹ் தொடராக அடுத்தடுத்த தொடர்களில் தொகுத்து தரவுள்ளேன்.

                                                                                    மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “எம் பெற்றோரான ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும், ஹவ்வா (அலைஹஸ்ஸலாம்) அவர்களுக்கும் மிக வெளிப்படையான எதிரியாக இருந்தது போலவே ஷைத்தான் எமக்கும் எதிரியாக இருக்கின்றான். அல்லாஹ்வின் அருளிலிருந்து எம்மை அவன் வெளியேற்றி, அல்லாஹ்வின் நரகத்திலும் அவனின் வேதனையிலும் எம்மைப் புகுத்திவிடவே அவன் விரும்புகின்றான்.
அல்லாஹ் கூறுகிறான்: “ஆதமுடைய சந்ததியினரே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவருடைய வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவர்கள் இருவருடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து, அவர்களைச் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் (ஏமாற்றி) குழப்பத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். நிச்சயமாக அவனும் அவனது பட்டாளமும் நீங்கள் அவர்களைப் பார்க்காத போதிலும் அவர்கள் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு நிச்சயமாக நாம் ஷைத்தான்களை நண்பர்களாக ஆக்கியுள்ளோம்”. (அல்குர்ஆன், 07:27)
மனிதனுடன் ஷைத்தான் வைக்கும் தொடர்பின் ஆரம்பம் மிகச்சாதாரணமானதாகத்தான் இருக்கும். சாதாரணமான சின்னதோர் பாவத்தைச் செய்யுமாறு மனிதனுக்கு ஏவி, அதை அலங்கரித்தும் காட்டுவான்; அதன் பின்னர், அதைவிடக் கொஞ்சம் பெரியதொரு பாவத்தின்பால் அவனை இழுத்துச் செல்வான்; இவ்வாறுதான் அவனது நகர்வு இருக்கும். முடிவில், பெரும்பாவங்களில் கொண்டுபோய் அவனை விழுத்தாட்டி விடுவான்!. அல்லாஹ்வின் அடியார்களே! உதாரணத்திற்கு போதைப்பொருட்களுக்கு அடிமையான அதிகமானோரின் ஆரம்ப நிலை எப்படியிருந்தது என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!!.
தீய நண்பர்களின் நட்பை (முதலில்) ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டினான்; அந்தத் தீய நண்பர்களோடு இவர்கள் நட்பு கொண்ட போது அவர்கள் போன்று இவர்களும் புகைக்கக்கூடியவர்களாக மாறினார்கள். பின்னர், ஷைத்தான் இவர்களை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டே சென்று முடிவில், போதைப்பொருட்களுக்கு அடிமையான அவ்விடயத்தில் கொண்டுபோய் அவர்களைத் தள்ளிவிட்டதைப் போன்று இவர்களையும் தள்ளிவிட்டான். மேலும், மானக்கேடான செயலைக்கொண்டு சோதிக்கப்பட்டவர்களின் ஆரம்ப நிலை எப்படியிருந்தது என்பதையும் கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள்!!
அந்நிய பெண்களைப் பார்த்தல், தரங்கெட்ட சஞ்சிகைகளிலோ அல்லது ஒழுக்கத்தைத் தாழ்நிலைக்குக் கொண்டு செல்லும் திரைப்படங்களிலோ வருகின்ற அருவருக்கத்தக்க காட்சிகளைப் பார்த்தல் போன்ற அல்லாஹ் ஹராமாக்கியிருக்கும் விடயங்களில் பார்வையைச் செலுத்துவதை (நல்லதாக) ஷைத்தான் இவர்களுக்கு அலங்கரித்துக் காட்டினான். பின்னர், ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு இவர்களை அவன் நகர்த்திக் கொண்டே சென்று முடிவில் இவர்களை குழப்பத்திலிலும் மோசத்திலும் தள்ளி விட்டான். அதிலிருந்து மீட்சிபெற முடியாதவர்களாக இவர்களும் ஆகிவிட்டார்கள்!.
என்றாலும் அல்லாஹ், தன்னைப் பயந்து வாழும் தன் அடியார்களை ஷைத்தானின் சூழ்ச்சியிலிருந்தும் அவனின் வழிகேட்டிலிருந்தும் பாதுகாப்பது அல்லாஹ்வின் அருளில் உள்ளதாகும். இப்லீஸ் சொன்னதாக அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்: “எனது இரட்சகனே! அப்படியானால் அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் வழங்குவாயாக! என அவன் கேட்டான்.
 • நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் உள்ளவன் என (அல்லாஹ்) கூறினான்.
 • குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரை (அவகாசம் அளிக்கப்பட்டுள்ளாய் என்றும் கூறினான்).
 • ‘எனது இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டு விட்டதால் நிச்சயமாக நான் பூமியில் அவர்களுக்குப் பாவங்களை அலங்கரித்துக் காட்டி, அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்!’ என்று கூறினான்.
 • அவர்களில் தேர்வு செய்யப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்களை வழிகெடுப்பேன்!).
 • ‘இதுவே என்னிடம் உள்ள நேரான பாதையாகும்’ என (அல்லாஹ்) கூறினான்.
 • வழிகேடர்களில் உன்னைப் பின்பற்றுவோரைத் தவிர, நிச்சயமாக எனது அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை (என்றும் கூறினான்)”
  [அல்குர்ஆன், 15:36 – 42]
{ நூல்: ‘அல்முஹ்தார் லில்ஹதீசி fபீ ஷஹ்ரி ரமழான்’,பக்கம்: 71,72,74 }
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
“فالشيطان عدوّ لّنا ظاهر العداوة كما كان عدوّا لأبوينا، ويريد إخراجنا من رحمة الله تعالى وإدخالنا في ناره وعذابه. يقول الله تبارك وتعالى: {يا بني آدم لا يفتننّكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوءاتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لايؤمنون } (سورة الأعراف، الآية – ٢٧)
وقد تكون بداية الشيطان مع الإنسان بسيطة بحيث يأمره ويزيّن له فعل معصية بسيطة ثم يجرّه بعدها إلى فعل ما هو أكبر منها وهكذا حتى يوقعه في الموبقات.
وانظروا عباد الله إلى بداية كثير من المدمنين على المخدرات مثلا كيف كانت!!، لقد زيّن لهم الشيطان مصاحبة الأشرار فلما صاحبوهم صاروا يدخّنون مثلهم ثم لم يزل ينتقل بهم من مرحلة إلى مرحلة حتى أوقعهم فيما أوقعهم فيه. وانظروا أيضا إلى الذين ابتلوا بفعل الفواحش كيف كانت بدايتهم!! لقد زيّن الشيطان لهم إطلاق النظر فيما حرّم الله من النظر إلى النساء الأجنبيات، والنظر إلى الصور الخليعة، سواء في المجلات الماجنة أو الأفلام الساقطة، ثم لم يزل ينقلهم من طور إلى طور حتى وقعوا في الفساد وصاروا لايصبرون عنه، ويسافرون إلى البلاد الإباحية من أجله.
ومن رحمة الله تعالى أنه يحمي عباده المتقين من كيد الشيطان وإغوائه، كما قال سبحانه وتعالى مخبرا عن إبليس أنه قال: {قال ربّ فأنظرني إلى يوم يبعثون
 • قال فإنك من المنظرين
 • إلى يوم الوقت المعلوم
 • قال ربّ بما أغويتني لأزيّننّ لهم في الأرض ولأغوينّهم أجمعين
 • إلا عبادك منهم المخلصين
 • قال هذا صراط عليّ مستقيم
 • إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتّبعك من الغاوين
}
( سورة الحجر، الآيات ٣٦-٤٢)
{ المختار للحديث في شهر رمضان، ص – ٧١،٧٢،٧٤ }
தமிழில்:
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் எண்ணியதுண்டு. ஒருவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் இருந்தால், அது அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவுமே இருக்கும். அவனது ஹிஜ்ரத் உலகத்தை அடைவதற்காக அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காக என்றிருந்தால் அவரது ஹிஜ்ரத் அதற்காகவே அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி) | நூல்: புகாரி, முஸ்லிம்)

(صحيح البخاري (6/1 عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
இந்த ஹதீஸின் வழிகாட்டல்கள்:
1.நிய்யத்து என்பது ஒரு விடயத்தை நாடுவதும், அதனைச் செய்வதும் என்று உறுதிக் கொள்வதுமாகும். இவை உள்ளங்களின் செயற்பாடுகளுடன் தொடர்பானவையாகும். ஒரு மனிதன் ஒருவிடயத்தை செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் அந்த விடயத்தில் நிய்யத் வைத்துவிட்டார் என்பதே மார்க்க ரீதியான விளக்கமாகும்.
“வுழூ செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் வுழூவுக்கான நிய்யத்தை வைத்தவராவார். குறித்த தொழுகையை நிறைவேற்றப் போவதாக உறுதிக் கொண்டால், அவர் அத்தொழுகைக்காக நிய்யத்தை வைத்தவராவார். இவ்வாறே ஒவ்வொரு விடயத்திலும் நிய்யத் கணிக்கப்படுகிறது.
2.”ஒரு முஸ்லிம் தனது ஏதேனும் ஒரு காரியத்தை நிறைவேற்றும்போது அது குறித்து நீய்யத்தை வாயால் மொழிவது என்பது மார்க்கமாக்கப்படவில்லை. இது அல்லாஹ்வுடைய தூதரிடமிருந்தோ ஸஹாபாக்களிடமிருந்தோ தாபியீன்களிடமிருந் தோ வந்ததாக அறியப்படவுமில்லை. எனவே, எவர் சப்தமிட்டு நிய்யத்தை மொழி கிறாரோ அவர் அல்லாஹ்வுடைய தூதரும் ஸஹாபாக்களும் செய்யாத ஒரு காரி யத்தை செய்தவராவார். இதனை பித்அத் என்று கூறப்படும்.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும்போது: “நான் லுஹர் தொழுகையை தொழுவதற்கு  நிய்யத்து வைக்கிறேன்” என்று எவர் சப்தமிட்டு கூறுகிறாரோ அவர், நூஹ் (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுட்காலத்தின் அளவு உட்கார்ந்து ‘அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களோ அவர்களது நபித்தோழர்களில் ஒருவரோ இவ்வாறு செய்திருப்பார்களா என்று ஆய்வு செய்து பார்த்தாலும் (அதற்கான ஆதாரத்தை) கண்டு கொள்ள மாட்டார். (எனவே இது) தெளிவான பொய்யைத் தவிர வேறில்லை.
நிய்யத்தை வாயால் மொழிவதில் நன்மை இருக்குமானால்  எங்களை விட ஸஹாபாக்கள் அதில் முந்தியிருப்பார்கள். அவ்வழியையும் எங்களுக்குக் காட்டியிருப்பார்கள்.
நிய்யத்தை வாயால் மொழிவது தான் சரி என்று இருக்குமானால், ஸஹாபாக்கள் அவ்வழியை பின்பற்றுவதில் வழிதவறி விட்டார்கள் என்பதாகிவிடும். ஸஹாபாக்கள் நேர்வழியிலும் சத்தியத்திலும் தான் இருந்திருந்தார்கள் (நிய்யத்தை வாயால் மொழியவில்லை) என்றால் ‘நேர்வழிக்குப்பின் வழிகேட்டைத் தவிர் வேறு என்ன இருக்கிறது.’ (அல்குர்ஆன் 11:32)  (நூல்: இகாஸதுல் லுஹ்பான் 1ஷ138, 139)
3.நிய்யத்தின் அடிப்படையான பயன்கள் ஆறு வகைப்படும்
பயன் ஒன்று: செய்கின்ற செயலின் நோக்கத்தை பிரித்துக் காட்டுவது அதாவது அல்லாஹ்வின் திருப்திக்காக செயல்படுவது என்ற நோக்கமாக இருந்தால் அதுவே தவ்ஹீதும் இஹ்லாஸும் ஆகும்.
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
நேரியவழி நின்று கலப்படமற்றவர்களாக அல்லாஹ்வுக்காகக் கட்டுப்பட்டு அவனை வணங்குமாறும் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்து வருமாறே தவிர அவர்கள் ஏவப்படவில்லை. இதுதான் நேரிய மார்க்கமாகும். (98:5)
அல்லாஹ்வுக்காக என்ற நோக்கம் இல்லாவிட்டால் அது முகஸ்துதி (‘ரியா’) எனும் சிறிய இணைவைப்பைச் சார்ந்ததாகிவிடும். இபாதத்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக இருக்குமானால் அது பெரிய இணைவைப்பாக ஆகிவிடும்.
உதாரணமாக:
 1. எவர் தனது தொழுகையை நபிகளாரின் ஸுன்னாவை பின்பற்றி சிறப்பாக நிறைவேற்றுகிறார்ரோ எவர் அல்லாஹ்வின் திருப்திக்காக தர்மம் செய்கிறாரோ அவர் கூலி கொடுக்கப்படக் கூடிய இஹ்லாஸ் உடையவராவார்.
 2. மக்களுக்கு காண்பிப்பதற்காக தொழுகிறவரும், மக்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக தர்மம் செய்கின்றவரும் முகஸ்துதிக்குரியவராகவும் பாவம் புரிகின்றவருமாவார்.
 3. அல்லாஹ் அல்லாதவவைகளுக்காக ஸஜ்தா செய்கின்றவரும், அறுத்துப் பலியிடுபகின்றரும், நேர்ச்சை செய்கின்றவரும் பெரிய இணைவைப்பை செய்தவராவார்.
பயன் இரண்டு: அமலை சரியாகச் செய்தல்
சரியான நிய்யத் இல்லாமல் அமல் சீராகாது. எனவே நிய்யத் என்பது  அமல் சீராகுவதற்கான (ஏற்றுக்கொள்ளப்படு வதற்கான) நிபந்தனையாகும். அதனை பின்வருமாறு குறிப்பிடலாம்.
 1. வுழூவின் காரியங்களை செய்யக் கூடியவர் வுழுவுக்குரிய (சுத்தத்திற்குரிய) நிய்யத்தை மனதில் ஏற்படுத்தவில்லையானால் அவரது வுழூ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
 2. லுஹர் தொழுகின்றவர் அத்தொழுகையை அஸர் தொழுகை என எண்ணுவாராயின் அத்தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
 3. மஃரிப் தொழுகின்றவருக்கு தான் அஸர் தொழவில்லை என்று நினைவுக்கு வந்து மஃரிப் தொழுகையின் நிய்யத்தை விட்டு விட்டால் அவரது மஃரிப் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அஸர் தொழுகையை மனதில் வைத்துக் கொண்டு மஃரிப் தொழுதால் அஸர் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நிய்யத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் மஃரிப் தொழுகையையும் அவர் பூரணப்படுத்த முடியாது.
 4. தர்மம் செய்வது என்ற நிய்யத்துடன் பணத்தை கொடுக்கின்றவர் (அதன் மூலம்) கடமையாக்கப்பட்ட ஸகாத் கொடுத்த நன்மையை பெறமாட்டார்.
 5. ஒருவர் ஒரு மனிதனுக்கு பணத்தை நன்கொடையாகக் கொடுக்கிறார். அவர் நன்கொடை கேட்கவில்லை. கடனாகக் கேட்டிருக்கிறார் என்று பிறகுதான் அவருக்குத் தெரியவருகிறது. எனவே தான் கொடுத்த நன்கொடையை கடனில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாலும் அது கடனில் சேரமாட்டாது.
பயன் மூன்று: நற்கூலி பெறுதல்பிக்ஹு உடைய உலமாக்கள் மேலேயுள்ள ஹதீஸின் மூலம் வகுத்த சட்டங்களில் ஒன்று “நிய்யத்து இல்லாமல் கூலி இல்லை” என்பதாகும். நிய்யத்து இல்லாத எந்த அமலுக்கும் கூலி வழங்கப்படமாட்டாது.
உதாரணமாக:
 1. இஃதிகாபுடைய நிய்யத்துடன் பள்ளியில் தங்கிடும் போது அல்லது கடமையாக்கப்பட்ட தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருந்திடும் போது அதற்கான கூலி வழங்கப்படும். எவ்வித நிய்யத்தும் இல்லாமல் பள்ளியில் தங்கியிருப்பதற்காக எந்த நன்மையும் கிடைக்கப் பெறமாட்டாது.
 2. மார்க்கம் வலியுறுத்தும் சுத்தத்தினை மேற்கொள்வதற்காக நன்மை வழங்கப்படும். வெறுமனே ஒரு குளிப்புக்காக அல்லது உடல் குளிர்ச்சியினை பெறுவதற்கு குளிப்பதற்காக நன்மை வழங்கப்பட மாட்டாது.
பயன் நான்கு: பழக்கம் வேறு வணக்கம் வேறு என்று பிரித்து காட்டுதல்
உதாரணமாக,
 1. சிகிச்சைக்காக இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அல்லது பத்தியத்திற்காக உண்ணாமல் இருப்பது என்பது பழக்க வழக்கமாகும். நோன்பு காலத்தில் உண்ணாமல் இருப்பது என்பது பழக்க வழக்கமாகாது அது வணக்கமாகும்.
 2. கடமையான அல்லது ஸுன்னத்தான குளிப்பு என்பது வணக்கமாகும். சுத் தத்திற்காக அல்லது உடல் குளிர்ச்சியை பெறுவதற்காக குளிப்பது என்பது அன்றாட பழக்கவழக்கமாகும்.
பயன் ஐந்து: வணக்கங்களின் தோற்றத்தை வேறுபடுத்திக் காட்டல்.
 1. சுன்னத்தான நோன்பையும் கடமையான நோன்பையும் செயல்ரீதியில் வேறுப்படுத்திக் காண்பித்தல்.
 2. சுபஹ் தொழுகையும் (அதன்) ஸுன்னத்தான தொழுகையும் செயல்ரீதியில் வேறுப்படுத்திக் காண்பித்தல்.
பயன் ஆறு: ஆகுமான பழக்க வழக்கங்களை இபாதத்களாக மாற்றுதல்
ஒரு முஸ்லிம் அன்றாடம் (மார்க்கம் அனுமதித்த) ஆகுமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு காரியத்தை அல்லாஹ்வுடையதும் அவனது தூதருடையதுமான கட்டளைக்குக் கட்டுப்பட்டு செயல்படுத்தும் போது அல்லது மார்க்க ரீதியாக ஏவப்பட்டுள்ள விடயமொன்றுக்கு நடுநிலை வகித்து செயல்படுத்தும் போது அதில் நலவை (இறைதிருப்தியை) நாடுவதனால் அதற்கான கூலி அவருக்கு வழங்கப்படும்.
உதாரணமாக
 1. மனைவி மக்களுக்காக செலவு செய்யும் போது அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் கட்டளைக்குக் கட்டுப்பட்டு பதிலளிப்பதாக (செலவு செய்வதாக) எண்ணுகிறார்.
 2. உண்பதும் பருகுவதும் மூலமாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு பயந்து நடப்பதாக எண்ணி அவ்விரு விடயங்களையும் மேற்கொள்கிறார்.
 3. இரவில் உறங்கும் போது தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழவேண்டும். சுபஹ் தொழுகையை நிறைவேற்றவேண்டும் குர்ஆன் ஓதவேண்டும் என்ற எண்ணத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தக்வாவுடன் மேற்கொள்ள வேண்டும் என எண்ணுகிறார். (இவை “நன்மையை நாடி செய்தல்” என்கின்ற போது அவை இபாதத் களாக மாறிவிடுகின்றன)
இதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. அதில் ஒன்றை கவனியுங்கள்.
அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவு செய்கின்ற ஒவ்வொன்றுக்கும் கூலி வழங்கப்படும். எந்தளவுக்கெனில், உனது மனைவியின் வாயில் நீ போடுகின்ற ஒரு கவளத்திற்குக் கூட நன்மை வழங்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதிப்னு அபீ வக்காஸ் (ரழி) | நூல்: (புகாரி, முஸ்லிம்)
 1. ஸஹாபாக்கள் மற்றும் ஸலபுஸ் ஸாலிஹீன்கள் தாங்கள் மேற்கொள்கின்ற எக்காரியத்திலும் -அது உலக விவகாரங்களாக இருந்தாலும் சரியே- நிய்யத்தை ஒழுங்குபடுத்தி அக்காரியத்தை பலனுள்ள இபாதத்தாக மாற்றுவதில் கவனம் செலுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.
முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அபூ மூஸல் அல் அஷ்அரி (ரழி) அவர்களைப் பார்த்து நீங்கள் எவ்வாறு குர்ஆன் ஓதுகிறீர்கள் என்று கேட்டார்கள். நான் நின்ற நிலையிலும் என் வாகனத்தில் உட்கார்ந்த நிலையிலும் குர்ஆன் ஓதுகிறேன் என அபூமூஸா (ரழி) பதிலளித்து விட்டு, முஆதே! நீங்கள் எவ்வாறு குர்ஆன் ஓதுகிறீர்கள் எனக் கேட்டார்கள். நான் இரவின் முதல் பகுதியில் உறங்கி விடுகிறேன். என் தூக்கத்தின் ஒரு பகுதியை முடித்து விட்டு எழுந்து அல்லாஹ் எனக்கு விதித்தளவு குர்ஆன் ஓதுகிறேன். என் தூக்கத்திலிருந்து எழுவதற்கு பிரதி பலனை அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பது போல் என் தூக்கத்திற்குமான நன்மையையும் (அவனிடம்) எதிர்பார்க்கிறேன் என்று முஆத் (ரழி) கூறினார்கள். (நூல்: புகாரி)
இப்னு அபீ ஷைபாவில் வரக்கூடிய இன்னுமொரு அறிவிப்பில், இரவின் இறுதியில் நின்று வணங்குவதற்கு இரவின் ஆரம்பப் பகுதியில் தூங்குவதை பலமாகக் கருது கிறேன். என் விழிப்பில் (நான் செய்யும் காரியங்களுக்கு) பிரதிபலனை அல்லாஹ் விடம் எதிர்பார்ப்பது போல் என் தூக்கத்திலும் எதிர்பார்க்கிறேன் என முஆத் (ரழி) கூறினார்கள்.
தாபிஈன்களில் ஒருவரான அல்ஜலீல் சுபைத் இப்னு அல் ஹாரிஸில் யாமிய் (ரஹ்) கூறும்போது, உண்ணுதல் பருகுதல் உட்பட எல்லா விவகாரங்களிலும் நீய்யத்து வைப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்கள்.
(நூல்: ஷூஅபுல் ஈமான் 5ஷ350 ஸிபதுஸ் ஸப்வா 3ஷ99)
 1. (இஹ்லாஸ்) உளத் தூய்மையுடன் பணியாற்றுவது முஸ்லிமின்மீதுள்ள கடமையாகும். அல்லாஹ்வுடைய திருப்தியையும் மறுமை வீட்டின் மீதுள்ள திருப்தி யையும் நாடி தன்னுடைய செயல்களை (அமல்களை) அமைத்துக் கொள்வது கட்டாயமாகும்.
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ
நேரிய வழி நின்று, கலப்பற்றவர்களாக அல்லாஹ்வுக்குக் கட்டப்பட்டு அவனை வணங்குமாறு அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள். (98:5)
‘அமல்’ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு  அல்லாஹ்வுக்கென்று  கலப்படமற்ற தூய உள்ளத்துடன் (இஹ்லாஸூடன்) செய்வதாக அந்த அமல் இருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. இரண்டாவது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைக்கேற்பவும் அந்த அமல் இருக்க வேண்டும். எல்லா அமல்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இவ்விரு நிபந்தனைகளுமே அடிப்படையாகும்.
6. அமல்கள் புரியும்போது முகஸ்துதிக்கு இடம்கொடுப்பது ஹராமாகும். அது சிறிய இணை வைத்தல் என்ற பாவத்தைச் சாரும். (முகஸ்துதி (ரியா) என்பது மக்கள் பார்க்க வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காகச் செய்கின்ற காரியமாகும்.)
உதாரணமாக, மக்கள் பார்ப்பதற்காக தன்னுடைய தொழுகையை நேர்த்தியாக நிறைவேற்றுகிறார். அல்லது மக்கள் புகழ வேண்டும் என்பதற்காக தர்மம் செய்கிறார் எனில் அந்த முகஸ்துதி அந்த அமலை சீர்கெடுத்து விடும்.
ஹதீஸுல் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாவது:

நான் இணைவைப்பாளர்களின் இணை வைத்தலை விட்டும் தேவையற்றவன். எவர் ஒருவர் (எனக்காக) ஒரு செயலை  செய்து, அதில் என்னுடன் வேறொருவனை இணையாக்கினால் நான் அவரை விட்டும் அவரது இணை வைத்தலை விட்டும் நீங்கி விடுகிறேன் என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) | நூல்: முஸ்லிம்)
 1. முகஸ்துதிக்கு அஞ்சி நற்காரியங்களை விட்டு விடலாகாது.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறும்போது, தொடர்ச்சியாக தொழுதுவந்த லுஹாத் தொழுகையையோ அல்லது இரவு வணக்கத்தையோ அல்லது அது போன்ற (சுன்னத்தான) அமல்களையோ எங்கிருந்தாலும்  நிறைவேற்ற வேண்டும். மக்கள் மத்தியில், தான் இருப்பதற்காக (அவைகளை செய்தால் முகஸ்துதியாகி விடுமோ என்று) அஞ்சி அந்த அமல்களை அவர் விட்டு விடலாகாது.
உள்ளத் தூய்மையினை பால்படுத்தக் கூடியவைகளிலிருந்தும், முகஸ்துதியிலிருந்து பாதுகாப்பு பெறுகின்ற முயற்ச்சிகளிலும் அவரது செயற்பாடுகள் அமையபெறு வதனால் -அல்லாஹ்வுக்கு இரகசியமாக  அக்கடமையினை செய்கிறார் என்ற  அவரது உள்ளத்தினை அல்லாஹ் அறிவான் என்பதால்-அவர் அவைகளை செய்திட வேண்டும்.
மேலும் கடமையாக்கப்பட்ட வணக்கங்களையும் முகஸ்துதிக்கு அஞ்சி அவர் விட்டு விடமுடியாது. அதனை உள்ளத் தூய்மையுடன் செயலாற்றுமாறு பணிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.(நூல்: மஜ்முஊ பதாவா23ஷ 173.174)

                                                                                   அஷ்ஷேஹ் இம்தியாஸ் யூசுப் ஸலபி

வழிகெட்ட எல்லாப் பிரிவுகளும் நபித்தோழர்களைக் குறை காண்பதை வழிமுறையாகக் கொண்டிருந்தனர். ஷிஆக்களைப் பொருத்தவரை அவர்கள் நபித்தோழர்களில் அதிகமானவர்களைக் காபிர்கள், முர்தத்துகள் என்றே கூறி வந்தனர். இதுகுறித்து இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக
இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
“ஷிஆக்கள் யஹுதி, நஸாராக்களை விட மோசமானவர்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என்று யூதர்களிடம் கேட்கப்பட்டால் மூஸாவின் தோழர்கள் எனப் பதில் கூறுவார்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என்று கிறிஸ்தவர்களிடம் கேட்கப்பட்டால் இயேசுவின் தோழர்கள் என்பார்கள். உங்கள் மார்க்கத்தில் கெட்டவர் யார்? என ஷிஆக்களிடம் கேட்கப்பட்டால் முஹம்மதின் தோழர்கள் என அவர்கள் பதில் கூறுவார்கள்.
நபித்தோழர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்குமாறு இவர்கள் ஏவப்பட்டார்கள். ஆனால், இவர்கள் அவர்களைத் திட்டுகின்றனர்.” (அல்மவ்லூஆத் 1/339)
இந்த வழிகேடர்களும் நபித்தோழர்களை குறை காண்பவர்களும் சில குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் கூட தமது தவறான வாதத்திற்கு வலு சேர்க்க முன்வைப்பதைக் காணலாம். இந்த வகையில் எடுத்துக் காட்டப்படும் சில வசனங்களை இங்கே உதாரணத்திற்காகத் தருகின்றோம்.
1. வியாபாரத்தை நாடினார்கள் “வியாபாரத்தையோ அல்லது வீணானதையோ கண்டால், உம்மை நின்றவராக விட்டுவிட்டு அவர்கள் அதன்பால் சென்றுவிடுகின்றனர். அல்லாஹ்விடத்தில் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்ததாகும். உணவளிப்போரில் அல்லாஹ் மிகச்சிறந்தவன் என (நபியே!) நீர் கூறுவீராக!” (62:11)
நபி(ஸல்) அவர்கள் குத்பா (வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் மேடை உபதேச) உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது சிரியாவிலிருந்து வியாபாரக் குழுவினர் வந்தார்கள். இதை அறிந்த நபித்தோழர்கள், பொருட்கள் வாங்குவதற்காக எழுந்து சென்றார்கள். அதுகுறித்தே இந்த வசனம் இறங்கியது. இந்த செயற்பாடு தவறு என்றாலும் முதன்முதலில் நடந்தது. குத்பாவுடைய நேரத்தில் வியாபாரம் செய்வது கூடாது என்ற சட்டம் இதன் பின்னர்தான் அருளப்பட்டது.

அவர்கள் எழுந்து செல்வது மார்க்க ரீதியில் அப்போது தடுக்கப்பட்டிருக்கவில்லை. அப்படித் தடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் போகும் போது போகாதீர்கள் என நபியவர்கள் தடுத்திருப்பார்கள். நபியவர்கள் தடுக்காததிலிருந்து அதுவரை அது தடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதை அறியலாம். இஸ்லாத்தில் தடுக்கப்படாத ஒன்றைச் செய்ததற்காக அவர்கள் மீது குறை கூற முடியாது.
2. முனாபிக்குகள் (நயவஞ்சகர்கள்) குறித்த வசனங்கள் “உங்களைச் சூழவுள்ள கிராமப்புற அரபிகளில் நயவஞ்சகர்களும் உள்ளனர். மேலும், மதீனாவாசிகளிலும் நயவஞ்சகத்தில் ஊறித்திளைத்தோர் உள்ளனர்.
(நபியே!) நீர் அவர்களை அறியமாட்டீர். நாம் அவர்களை நன்கறிவோம். அவர்களை நாம் இருமுறை தண்டிப்போம். பின்னர் கடுமையான வேதனையின் பால் அவர்கள் மீட்டப்படுவார்கள்.” (9:101)
இதுபோன்ற, முனாபிக்குகள் பற்றிக்கூறும் ஏராளமான வசனங்களை எடுத்து அவற்றை நபித்தோழர்களுடன் இணைத்து வாதிடக்கூடிய வழிகேடர்களும் உள்ளனர். முனாபிக்குகளையும் முஃமின்களையும் ஒன்றுபோல் பார்ப்பவர்கள் மிகப்பெரும் அநியாயக்காரர்களே! முனாபிக்குகள் முஃமின்கள் கூட்டத்தில் அடங்க மாட்டார்கள்.
“நிச்சயமாக, ‘நாங்கள் உங்களைச் சார்ந்தவர்களே’ என்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்கின்றனர். அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர். எனினும் அவர்கள் பயந்த சமூகமாக இருக்கின்றனர்.” (9:56)
அந்த முனாபிக்குகள் சத்தியம் செய்து கூறியும் கூட அவர்கள் முஃமின்களாக (இறை நம்பிக்கையாளர்களாக) அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், இந்த வழிகேடர்கள் முஃமின்களைக் கொண்டு போய் அவர்களுடன் சேர்க்கப்பார்க்கின்றனர்.
3. போரில் வெருண்டோடிய ஸஹாபாக்கள்: “இரு அணியினரும் (போருக்காக) நேருக்கு நேர் சந்தித்த அந்நாளில் உங்களில் நிச்சயமாக எவர்கள் புறமுதுகிட்டுச் சென்றார்களோ, அவர்கள் செய்த (தவறுகள்) சிலவற்றின் காரணமாக ஷைத்தானே அவர்களை நிலைகுலையச் செய்தான். எனினும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், சகிப்புத்தன்மை உடையவன்.” (3:155)
உஹதுப் போரின் போது ஏற்பட்ட குழப்ப சூழ்நிலையில் நபித்தோழர்களில் சிலர் போர்க் களத்தை விட்டும் வெருண்டோடினர். இது மார்க்க ரீதியில் பெரும் குற்றமாகும். நபி(ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தியைக் கேட்டதும் அவர்கள் நிலைகுலைந்துபோயினர். அனால் போர்க்களத்தை விட்டும் வெருண்டோடினர். அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டதாகக் கூறியிருக்கும் போது அதை மறந்துவிட்டு குறித்த செயலை வைத்து நபித்தோழர்களைக் குறைகாண்பது அல்லாஹ்வின் மன்னிப்பை அலட்சியம் செய்யும் போக்காகவே இருக்கும்.
உஹதுப் போரில் ஏற்பட்டது போன்று ஒரு பதட்ட நிலை ஹுனைன் போரின் போதும் ஏற்பட்டது. நபித்தோழர்கள் அதிலும் களத்தை விட்டும் ஓடும் நிலையை அடைந்தார்கள். அதுபற்றி குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். “பின்னர் அல்லாஹ் அவனது தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தனது அமைதியை இறக்கினான். மேலும், நீங்கள் காணாத படைகளையும் இறக்கி, நிராகரித்தோரைத் தண்டித்தான். இதுவே நிராகரிப்பார்களுக்குரிய கூலியாகும்.”(9:26)
இங்கே அல்லாஹுதஆலா, அவர்களின் தவறைச் சொல்லிவிட்டு அதன் பின்னும் அவர்கள் முஃமின்கள் என்கின்றான். அவர்கள் மீது அமைதியை இறக்கியதாகக் கூறுகின்றான். இப்படிக் கூறிய பின்னர் அவர்கள் மீது குறை காண்பவன் குர்ஆனை மதிப்பவனாக இருக்க முடியாது.
“அவனே நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் அவர்களது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக அமைதியை இறக்கி வைத்தான்.
மேலும், வானங்கள் மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன . அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.” “நம்பிக்கையாளர்களான ஆண்களையும் பெண்களையும் சுவனச்சோலைகளில் அவன் நுழைவிப்பதற்காக (இவ்வாறு செய்தான்.) அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். மேலும், அவன் அவர்களது தீமைகளை அவர்களை விட்டும் போக்கி விடுவான். மேலும், இது அல்லாஹ்விடத்தில் மகத்தான வெற்றியாக இருக்கிறது”(48:4&5)
“நிராகரித்தோர், தமது உள்ளங்களில் அறியாமைக்கால வைராக்கியத்தை ஏற்படுத்தி இருந்தபோது, அல்லாஹ் தனது தூதரின் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தனது அமைதியை இறக்கி வைத்தான். மேலும், பயபக்தியின் வார்த்தையை அவர்களுக்குக் கட்டாயப்படுத்தினான். அவர்கள் அதற்குத் தகுதியுடைவர்களாகவும் அதற்குரியவர்களாகவும் இருந்தனர். அல்லாஹ்யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.” ( 48:26)
இந்த வசனங்களில் தெளிவாகவே அவர்களது ஈமான் பற்றியும் அவர்களுக்கு வழங்கப்படும் சுவனம் பற்றியும் கூறப்படும் போது அவர்களை எப்படிக் குறை காண முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு நபித்தோழர்களைக் குறை காண அவர்கள் எடுக்கும் குர்ஆன் வசனங்களை எடுத்துக் கொண்டால் அது அவர்களுக்கே முரணாக அமைந்திருப்பதைக் காணலாம். நபித்தோழர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறுகள் செய்திருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.
அல்லாஹ்வின் “ரிழா” திருப்தியைப் பெற்றவர்கள். இந்த முடிவை மாற்ற முடியாது. மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடம் ஏற்பட்ட தவறுகளை அல்லாஹ்வே மன்னித்துவிட்ட பின்னர் அவற்றை எடுத்து வைத்து விமர்சனம் செய்து நபித்தோழர்களைக் குறைத்துக் காட்ட முற்படுபவர்கள் வழிகேடர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
                                                                                     அஷ்சேஹ் S.H.M. இஸ்மாயில் ஸலபி

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget