May 2018

மறுமை நாளில் முஃமின்களுக்கு கிடைக்க கூடிய அதி உயர்ந்த பரிசு தான் சுவர்க்கமாகும்.

இந்த சுவர்க்கத்திற்குள் பல படித்தரங்கள் உள்ளன.

மேலும் சுவர்கத்திற்கு எட்டு வாசல்களும் உள்ளன.

இந்த வாசல்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகளுக்காக திறந்து இருக்கும்.

நோன்பாளிகளை கண்ணியப் படுத்தும் விதமாக பல சிறப்புகளுக்கு மத்தியில் இப்படியான நிகழ்வுகளையும் காணலாம்.

பின் வரும் ஹதீஸ்களை கவனியுங்கள்.

“ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நகரத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 3277, முஸ்லிம் 2121)

மேலும்“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 1899)

சுவர்க்கத்திற்கு பாபுஸ் ஸலாஹ் (தொழுகை வாசல்) என்று ஒரு வாசல் உள்ளது . அதில் தொழுகையாளிகள் மட்டும் அதன் வாசல் வழியாக சுவர்க்கத்திற்குள் செல்வார்கள்.  

அதே போல் பாபுஸ் ஸதகா (தர்ம வாசல்) அதில்தர்மம் செய்தவர்கள் மட்டும் அதன் வழியாக சுவர்க்கத்திற்குள் செல்வார்கள்.

அதே போல் பாபுல் ஜிஹாத் (போராளிகளின் வாசல்) அதில் அல்லாஹ்விற்காக போராட்டம் செய்த தியாகிகள் மட்டும் அதன் வழியாக சுவர்க்கத்திற்குள் செல்வார்கள். 

அதே போல் பாபுர் ரய்யான் (நோன்பாளிகள் வாசல்) நோன்பு பிடித்தவர்கள் மட்டும் அதன் வழியாக சுவர்க்கத்திற்குள் செல்வார்கள்.

“ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் 'ரய்யான்' என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள். என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.(புகாரி 3257)

எனவே ரமலான் காலத்தில் நோன்பாளிக்காக சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாசல்கள் மூடப்பட்டு, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள்.

அதே போல நாம் வுளு செய்து விட்டு வுளுவுடைய து ஆவை ஒதினால் அந்த நேரத்தில் அதற்காக சுவர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும் என்பதையும் நபியவர்கள் கூறினார்கள்.

நபியவர்கள் காட்டித் தந்த அனைத்து அமல்களையும் தொடராக செய்து அல்லாஹ்வுடைய அருளை பெறுவோமாக !


                                                                                               மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.

அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் சந்தோசத்தை ஏற்ப்படுத்துகிறான். முஃமின்களைப் பொருத்தவரை நல்லமல்கள் செய்யும் போது கிடைக்க கூடிய சந்தோசத்தை விட வேறு எதிலும் உச்ச கட்டமான சந்தோசத்தை அடைந்து கொள்ள மாட்டார்கள்.

அதிலும் இந்த உலகத்தில் நோன்பு நோற்று, நோன்பை திறக்கும் போது ஏற்படக் கூடிய சந்தோசத்தை அல்லாஹ்வே வரவேற்கிறான் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலமாக காணலாம்.  
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள்வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகின்றான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் (என அல்லாஹ் கூறுகின்றான்). 

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவர் நோன்பைத் துறக்கும்போது ஒரு மகிழ்ச்சியும், தம் இறைவனைச் சந்திக்கும் போது மற்றொரு மகிழ்ச்சியும் (அடைகிறார்). நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.( புகாரி 1904,முஸ்லிம் 2119, திர்மிதி 697)

அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை அல்லாஹ்விற்காக தன்னை அர்ப்பணித்த மனிதரை அல்லாஹ் சந்தோசப் படுத்துகிறான். நோன்பு திறக்கும் போது சரியான நேரம் வந்த உடன், எந்த தாமதமின்றி உடனே நோன்பை திறந்து விட வேண்டும்.

பொருத்தது பொருத்து விட்டோம் சற்று தாமதித்து திறந்தால் நஷ்டமா ஏற்ப்படபோகிறது என்று நேரம் கடந்து நோன்பை திறக்க கூடாது.
குறிப்பாக பெண்கள் இந்த விடயத்தில் அதிகமாக அலட்சியமாக இருப்பார்கள். பின் வரும் ஹதீஸ்களை கவனியுங்கள்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!'
இதை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (புகாரி 1957)

மேலும் “அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் நோன்பு நோற்றார்கள். மாலை (முடியத் தொடங்கும்) நேரம் வந்ததும் ஒரு மனிதரிடம், 'இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக!' என்று கூறினார்கள். அதற்கவர், 'மாலை நேரம் (முழுமையாக) முடிவடையும் வரை காத்திருக்கலாமே!' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! இரவு இங்கிருந்து முன்னோக்கி வருவதைக் கண்டால், நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!' என்றார்கள். (புகாரி 1958)

மேலும் “ அபூ அத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப் படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)" என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?" என்று கேட்டார்கள். நாங்கள் "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்" என்றோம். அதற்கு, "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.(முஸ்லிம் 2004)

எனவே சொல்லித்தரப்பட்ட அமல்களையும், அதன் ஒழுங்கு முறைகளையும் நாம் சரியாக பேணி வாழ்க்கையில் நடை முறைப் படுத்த வேண்டும். அப்போது தான் இறையன்பை சரியாக பெற்றுக் கொள்ள முடியும்.
அல்லாஹ் போதுமானவன்

                                                                                        மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்கள்: புஹாரீ(1899), முஸ்லீம்(1957) மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.



ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே! ஆனால், கியாமுல் லைல் எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கிய இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது.  
01. ரஹ்மானின் அடியார்கள்:
ரஹ்மானின் அடியார்கள் எனும் சிறப்புத் தகுதியை இதனால் இழக்க நேரிடுகின்றது.
“அர்ரஹ்மானின் அடியார்கள்தான் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால், ‘ஸலாம்’ எனக் கூறுவார்கள்.” மேலும், அவர்கள் தமது இரட்சகனுக்கு சுஜூது செய்தவர்களாகவும், நின்றவர்களா கவும் இரவைக் கழிப்பார்கள். (25:63-64)
02. பயபக்தியாளர்கள் எனும் பட்டம் பறிபோகும்:
இரவுத் தொழுகையை விடுவதால் முத்தகீன்கள் பட்டியலில் இடம் கிடைக்காமல் போகலாம்.
“நிச்சயமாக பயபக்தியாளர்கள் தமது இரட்சகன் தமக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டவர்களாக, சுவனச் சோலைகளிலும் நீரூற்றுக்களிலும் இருப்பார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்பவர்களாக இருந்தனர்.” இவர்கள் இரவில் குறைவாகவே தூங்குபவர்களாக இருந்தனர். “மேலும் இவர்கள், இரவின் இறுதி வேளைகளில் பாவமன்னிப்புக் கோருவார்கள்.” (51:15-18)
எனவே, முத்தகீன்கள் பட்டியலில் இடம் பிடிக்க இந்த இபாதத்தில் தொடர்ந்தும் ஈடுபட வேண்டும்.
03. சிந்தனையாளர்கள் பட்டியலில் இடமில்லை:
இரவுத் தொழுகையில் ஈடுபடுபவர்களை இந்த வசனம் உயர்த்திப் பேசுகின்றது. அவர்களைச் சிந்தனையாளர்கள் என்று கூறுகின்றது. இரவுத் தொழுகையில் ஈடுபடாத போது இதை இழக்க நேரிடுகின்றது.
04. உயர்ந்த அந்தஸ்து:
இரவுத் தொழுகையில் ஈடுபடுபவர்களை அல் குர்ஆன் தனித்துவச் சிறப்புடன் நோக்குகின்றது.
“அவர்கள் (அனைவரும்) ஒரே சமமானவர்கள் அல்லர். வேதத்தையுடையோரில் (சத்தியத்தில்) நிலைத்திருக்கும் கூட்டத்தினரும் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை இரவு வேளைகளில் ஓதி, சிரம்பணிகின்றனர்.” “அவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும், நன்மையை ஏவி, தீமையை விட்டும் தடுத்து, நல்ல காரியங்கள் பூவதிலும் விரைகின்றனர். அவர்கள் நல்லவர்களில் உள்ளவர்களாவர்.” (3:113-114)
இரவுத் தொழுகையில் ஈடுபடுபவர்களை இந்த வசனம் தனித்துவச் சிறப்புடன் நோக்குகின்றது. இந்தப் பாக்கியத்தை இரவுத் தொழுகையை விடுவதால் இழக்க நேரிடும்.
05. ஏற்கப்படும் பிரார்த்தனைகள்:
இரவுத் தொழுகை எமது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட ஒரு காரணமாக உள்ளது. அந்த அழகிய வாய்ப்பை இழக்க நேரிடுகின்றது.
“அவர் (தனது) தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, வானவர்கள் அவரைச் சப்தமிட்டு அழைத்து ‘(யஹ்யா எனும்) அல்லாஹ்விடமிருந்துள்ள ஒரு வார்த்தையை உண்மைப்படுத்தக் கூடியவராகவும், கண்ணியத்திற்குரியவராகவும், ஒழுக்க நெறியுடையவராகவும் நல்லவர்களிலிருந்து ஒரு நபியாகவும் திகழக் கூடிய யஹ்யா என்பவரைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உமக்கு நன்மாராயம் கூறுகின்றான்” என்றனர். (3:39)
06. நபிக்குக் கிடைத்த தனி அந்தஸ்து:
நபி(ஸல்) அவர்களுக்கு ‘மகாமு மஹ்மூதா’ என்ற தனியான சிறப்பம்சம் உள்ளது. அதை அடைய இரவுத் தொழுகையைப் பேணுமர்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
“உமக்கு உபரியாக இருக்க, இரவின் ஒரு பகுதியில் தொழுகைக்காக எழுந்து நிற்பீராக! உமது இரட்சகன் (புகழப்பட்ட இடமான) ‘மகாமு மஹ்மூத்”தில் உம்மை எழுப்புவான்.” (17:79)
இந்த இரவுத் தொழுகை எமக்கும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தரத் தக்கதாகும்.
07. அல்லாஹ்வின் ரிழா:
“(நபியே!) அவர்கள் கூறுபவை குறித்து நீர் பொறுமையாக இருப்பீராக! சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் உமது இரட்சகனின் புகழைக் கொண்டு துதிப்பீராக. மேலும், இரவு வேளைகளிலும், பகலின் ஓரங்களிலும் (அவனை) துதிப்பீராக! (இதன் நன்மைகளால்) நீர் திருப்தியடைவீர்.” (20:130)
இரவுத் தொழுகை இறை திருப்தியைப் பெற்றுத் தரும். எதிரிகளின் வீணான விமர்சனங்களின் போது இதயத்திற்கு வலுவையும் இதத்தையும் தரும் என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றன.
8. அல்லாஹ்வின் கண்காணிப்பு:
அல்லாஹ்வின் கண்காணிப்பில்தான் அனைவரும் உள்ளார்கள். ஆனால், தொழுபவர்கள் அல்லாஹ்வின் விசேட கண்காணிப்பில் உள்ளனர் என்பதைப் பின்வரும் வசனங்கள் உணர்த்துகின்றன.
“இன்னும், யாவற்றையும் மிகைத்தவன், நிகரற்ற அன்புடையவன் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக!” நீர் நின்று வணங்கும்போதும், நீர் ஸஜ்தா செய்பவர்களுடன் இணைந்து இயங்கும் போதும் அவன் உம்மைப் பார்க்கின்றான்.” (26:217-218)
09. பொறுமையும் அல்லாஹ்வின் பார்வையும்:
“(நபியே!) உமது இரட்சகனின் கட்டளைக்காக, பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக நீர் எமது கண்களுக்கு முன் இருக்கிறீர். மேலும், நீர் எழுந்திருக்கும் போது உமது இரட்சகனின் புகழைக் கொண்டு துதிப்பீராக!” “மேலும், இரவிலும் நட்சத்திரங்கள் மறையும் நேரத்திலும் நீர் அவனைத் துதிப்பீராக!” (52:48-49)
இரவில் தொழுபவர்கள் அல்லாஹ்வின் கண்காணிப்பில் உள்ளனர். இந்தப் பாக்கியத்தை அடைய இரவு வணக்கம் துணை நிற்கும்.
10. கண் குளிச்சியான கூலி:
இரவுத் தொழுகையில் ஈடுபடுபவர் களுக்கு மகத்தான கூலியைத் தயார் செய்திருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். அந்தப் பாக்கியங்களை இழக்கக் கூடாது என்றால் இரவுத் தொழுகையில் நாம் நீடித்து நிலைத்திருக்க வேண்டும்.
“அவர்களது விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் விலகியிருக்க, அவர்கள் தமது இரட்சகனை அச்சத்துடனும், ஆதரவுடனும் பிரார்த்திப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்.” “எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக அவர்களுக்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சியை எந்த ஆன்மாவும் அறிந்து கொள்ளாது.” (32:16-17)
11. பாவ மன்னிப்பு:
“(நபியே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு கூட்டத்தினரும் இரவில் மூன்றில் இரு பகுதியை விடக் குறைவாகவும், அதன் அரைப்பகுதியிலும் இன்னும், அதன் மூன்றில் ஒரு பகுதியிலும் (தொழுகைக்காக) எழுந்து நிற்கின்றீர்கள் என்பதை நிச்சயமாக உமது இரட்சகன் நன்கறிவான். அல்லாஹ் தான் இரவையும் பகலையும் நிர்ணயம் செய்கின்றான். நீங்கள் அதை சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதை அவன் நன்கறிந்து, உங்களை அவன் மன்னித்தான். ஆகவே, குர்ஆனிலிருந்து முடியுமானதை நீங்கள் ஓதுங்கள். நோயாளிகளும், இன்னும் அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணிக்கும் வேறு சிலரும், மேலும், அல்லாஹ்வின் பாதையில் போரிடும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பர் என்பதை அவன் நன்கறிந்துள்ளான். எனவே, அதிலிருந்து முடியுமானதை நீங்கள் ஓதிக்கொள்ளுங்கள். இன்னும், நீங்கள் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனை வழங்குங்கள். உங்களுக்காக நீங்கள் எந்த நன்மையை முற்படுத்தினாலும் அதை அல்லாஹ்விடம் மிகச் சிறந்ததாகவும், மகத்தான கூலியுடையதாகவும் பெற்றுக் கொள்வீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன்.” (73:20)
இரவுத் தொழுகையில் ஈடுபடுபவர்களுக்குப் பாவ மன்னிப்பு இருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது.
எனவே, மேற்குறிப்பிட்ட பாக்கியங்களை நாம் இழந்துவிடக் கூடாது என்றால் கியாமுல் லைல் ரமழானுக்கு மட்டும் உரியதாக முத்திரை குத்தி ஒதுக்கிவிடாமல் தொடர்ந்தும் அதை எமது வாழ்நாளில் தொடர வேண்டும்.
இந்தப் பாக்கியத்தைத் தொடர்ந்து அடையுமுகமாக இரவுத் தொழுகையில் நிலைத்திருக்கும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக!
                                                                                   அஷ்ஷேஹ்:- இஸ்மாயில் ஸலபி

வினா: நோன்பு பிடிக்க முடியாத வயதானவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று கூறுகின்றார்களே ! இது சரியானதுதானா.?   

விடை:
''அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு அப்பால் கஷ்டப்படுத்தமாட்டான்'' (சூறா அல் - பகறா 286)

எனவே நோன்பு பிடிக்க சக்தியற்ற முதியவர்கள் நோன்பை பிடிக்கமாட்டார்கள். அதற்கு பதிலாக ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் எந்த ஒரு ஆதாரமான ஹதீஸ்களும் வரவும் இல்லை.

ஒருவர் தனக்கு கடமையான ஒன்றைவிட்டால் அதற்கு பிராயச்சித்தம் செய்யலாம். நோன்பு பிடிக்க சக்தியே இல்லாத முதியவர் அவருக்கு நோன்பு கடமை இல்லை. எனவே தன் மீது கடமை இல்லாத ஒன்றைச் செய்யாததனால் அதற்குப் பிராயச் சித்தமாக ஆகாரம் வழங்க வேண்டும் என்பது அர்த்தமற்ற வாதமாகும்.

எனவே நோன்பு நோற்க சக்தி இல்லாத முதியவர்கள் கழாச் செய்வதோ, ஆகாரம் வழங்குவதோ கடமை இல்லை.
வயதான முதியவர்களுக்கு ஐவேளை தொழுகை இறுதிவரை கடமையாக உள்ளதால் அதே போன்று நோன்பு கடமையானதாக இருக்கலாம் தானே என்று சிலர் கேட்கலாம்.

தொழுகையைப் பொறுத்தவரை பருவமடைந்த அனைவரும் எல்லா நிலையிலும் எப்போதும் தொழ வேண்டும். அவர்கள் அவர்களின் சக்திக்கேற்ப நின்றோ, இருந்தோ, சாய்ந்தோ தொழுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் நிறைந்துள்ளது.

ஆனால் ஸகாத், ஹஜ், நோன்பு இது மூன்றும் அனைவருக்கும் கடமையானது அல்ல. இவ் ஒவ்வொன்றிற்கும் அதனைச் செய்வதற்கென சக்தியை அவன் பெற்றால் தான் அவன் மீது கடமையாகும். அந்த சக்தியைப் பெறாதவருக்கு இவைகள் கடமையாகமாட்டாது.

எனவே தொழுகையோடு ஒப்பிட்டு கியாஸ் என்ற அடிப்படையில் நோன்பிற்கும் அதே சட்டத்தை கொடுக்கக் கூடாது.
 
                                                                     T.S.A. அரபிக் கல்லூரி மாணவிகள்

அதிக நன்மைகளை நாடி பிரயாணம் மேற்கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கிய உலகின் சிறப்பு மிக்க மூன்று புனிதத் தளங்களில் ஒன்றாக பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா காணப்படுகின்றது. (அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி),  நூல்: புகாரி 1189, 1197, 1864, 1996 

பருவ வயது வந்த, ஒவ்வொரு ஆண், பெண்ணின் மீதும் இந்த ரமலான் நோன்பு கடமையாகிறது.

பெண்கள் தனது மாதவிடாய் காலத்தில் நோன்பு பிடிப்பதை தடை செய்து, ரமலான் அல்லாத காலத்தில் ரமலானில் விட்ட நோன்புகளை களா செய்யும் படி இஸ்லாம் வழிக் காட்டுகிறது.அது போல ரமலான் காலத்தில் சுகயீனம் காரணமாக, அல்லது பயணம் காரணமாக அல்லது ஏதோ ஒரு காரணத்தால் நோன்பை நோற்க முடியா விட்டால், ரமலான் அல்லாத காலத்தில் அதை நிறை வேற்ற வேண்டும். 

சில சந்தர்ப்பங்களில் களா நோன்பை நிறைவேற்றவதற்கு முன் மரணித்து விட்டால், அந்த களா நோன்புகளை மரணித்தவரின் குடும்பத்தார்கள் நிறைவேற்ற வேண்டும். அதன் மூலமாக மரணித்தவரின் கடமை நிறை வேற்றப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அது சம்பந்தமான ஹதீஸ்களை கவனியுங்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.' என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 1952)

மேலும்“ இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறை வேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது' என்றார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என் சகோதரி மரணித்துவிட்டார்...' என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என் தாய் இறந்துவிட்டார்...' என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'நேர்ச்சை நோன்பு என் தாயாருக்குக் கடமையாக இருந்த நிலையில் என் தாய் இறந்துவிட்டார்...' என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில், 'என் தாய் மீது பதினைந்து நோன்புகள் கடமையாக இருந்த நிலையில் இறந்துவிட்டார்' என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.(புகாரி 1953)

எனவே யாருக்கு எத்தனை பர்ளான நோன்புகளோ அல்லது நேர்ச்சை நோன்புகளோ விடுப்படுகிறதோ அவர் கட்டாயமாக ஒரு டயரியில் இத்தனை நோன்புகள் நான் பிடிக்க வேண்டியுள்ளது என்று எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்போது தான் சம்பந்தப்பட்டவர் மரணித்தாலும் அவரது குடும்பத்தார்கள் அதை நிறைவேற்றுவதற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

                                                                        மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.



நாம் பயணம் செய்யும் போது விரும்பினால் நோன்பை நோற்ற நிலையில் பயணம் செல்லலாம். இல்லா விட்டால் நோன்பை நோற்காமல் விட்டு, விட்டு ரமலானுக்கு பிறகு அந்த நோன்பை களா செய்யலாம்.

“ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!' என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!' என்று கூறினார்கள். (புகாரி 1946)

மேலும் “ அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நேற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள். ( புகாரி 1947)

மேலும் “ இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். உஸ்பான் எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் கொண்டுவரச் செய்து, மக்கள் காண்பதற்காகக் கைகளின் நீளத்திற்கு அதை உயர்த்திக் காட்டி நோன்பை முறித்தார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்க வில்லை. இது ஒரு ரமளானில் நடந்தது! 

'நபி(ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பைவிட்டும் இருக்கிறார்கள். (நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பைவிட்டுவிட விரும்புபவர் விட்டு விடவும் செய்யலாம்!' (புகாரி 1948)

எனவே பயணத்தில் செல்பவர் சக்தியுள்ளவராக இருப்பாரேயானால் அவர் விரும்பினால் நோன்பை நோற்றுக் கொள்ளலாம். பலகீனமானவர் என்றால் பயணத்தில் நோன்பை நோற்காமல் ஊரில் இருக்கும் போது அந்த நோன்பை களா செய்து கொள்ளலாம்.

பஸ் ஓட்டுனர் (டிரைவர்), அல்லது தொழிலே ஓட்டுனர் (டிரைவர்) என்றால் அவர்கள் ரமலானில் நோன்பை பிடிப்பதே பொருத்தமாகும். ஏன் என்றால் இப்படி பட்டவர்கள் ரமலானிலும் பயணம் தான் ரமலான் அல்லாத காலத்திலும் பயணம் தான்.
எனவே பயணிகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளை கருத்திக் கொண்டு நோன்பு விடயத்தில் நடந்து கொள்ளவும். அல்லாஹ் போதுமானவன்.

                                                                                      மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை என்றால் ஹதீஸ் ஆகும். குர்ஆனும் ஹதீ ஸும்தான் நமது வழிகாட்டிகள் என்பதை உலக மக்கள் ஏற்று அமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எந்த அமலாக இருப்பினும், அது நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்ததாக இருக்க வேண்டும். நாமாக அமல்களைச் செய்யக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. அந்த அடிப்படையில் ஸஹர் முடிவு என்று இன்று எல்லாப் பள்ளி களிலும் நோன்புதான் அட்டவணையிலும் போடப்பட்டுள்ளதைக் காணலாம். இது சரியா? அல்லது பிழையா? என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பஜ்ரு தொழுகைக்கான அதான் (பாங்கு) 4.30 மணிக்கு என்றால், கிட்டத் தட்ட 4.15 ஸஹர் முடிவு என்று விளம்பரப் படுத்தியுள்ளதைக் காணலாம். அதாவது பஜ்ரு நேர பாங்கிற்கு முன் பதினைந்து நிமிடம் அல்லது இருபது நிமிடம் முன்னதாகவே ஸஹர் நேரம் முடிவடைந்து விடுகிறது. அதன் பின் சாப்பிட்டாலும் குடித்தாலும் நோன்பு முறிந்து விடும் என்று பேசக் கூடிய நிலையைக் காண்கிறோம்.
வானொலியிலும் கூட ஸஹர் நேரத்தில் அடிக்கடி இன்றைய சுப்ஹு தொழுகைக்கான அதான் சொல்லும் நேரம் இது, ஸஹர் முடிவு இது என்று சொல்லக் கூடிய நிலையை அனைவரும் கேட்கிறோம். பள்ளிவாசல் விளம்பரப் பலகையிலாக இருக்கலாம் அல்லது நோன்பு தாளிலாக இருக்கலாம் அல்லது வானொலி விஷேட ஸஹர் நேர நிகழ்ச்சியிலாக இருக்கலாம். எல்லோரும் மார்க்கத்தை மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் போட்டி போட்டுக் கொண்டு செயல் படுவதைக் காணலாம்.
இது வரவேற்கக் கூடிய விடயமாகும். அதே நேரம் மார்க்கம் சொல்லித் தந்துள்ள வழிமுறையை விட்டு விட்டு, நாமாக தன் இச்சையாக எதையும் முடிவு செய்யும் அதிகாரம் நமக்குக் கிடையாது. தொடர்ந்து படியுங்கள்.
நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனு மதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்விற்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று, உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது முதல் அவர்களுடன் கூடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடுங்கள். வைகறை எனும் கயிறு (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள். (2:187)
இந்த வசனத்தில் முதலாவதாக நோன்பு கால இரவு நேரங்களில் தனது மனைவியுடன் சேரலாம் என்ற சட்டத்தையும், இரண்டாவதாக ஸஹர் முடிவைப் பற்றி அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அதில் கருப்புக் கயிறிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை உண்ணலாம், பருகலாம் என்றால், கருப்புக் கயிறு என்பது இரவு வெள்ளைக் கயிறு என்பது சுப்ஹு நேர வெளிச்சம் என்பதை இந்த வசனம் சம்பந்தமான ஹதீஸ்கள் தெளிவுபடுத்து வதை அவதானிக்கலாம்.
இந்த வசனம் இறங்கியவுடன் சில நபித் தோழர்கள் கருப்புக் கயிறை தனது தலையணைக்கு கீழாக வைத்து காலையில் மாறுகிறதா? இல்லையா என்று பார்த்தனர். இன்னும் சில நபித்தோழர்கள் தனது கை கால்களில் கருப்புக் கயிறை கட்டிக்கொண்டு காலையை எதிர்பார்த்து, இறுதியில் இந்த வசனத்தின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
கறுப்பு கயிறிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும் வரை நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள் (2:187) அருளப்பட்டபோது, நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் வெள்ளை நிறத்தில் ஒரு கயிறு, கறுப்பு நிறத்தில் மற்றொரு கயிறு என இரு கயிறுகளை என் தலையணையின் கீழ் வைத்து பகலில் இருந்து இரவை பிரித்து அறிய முயன்றேன். ஆயினும், என்னால் பிரித்து அறிய முடியவில்லை என்று சொன்னேன். வெள்ளைக் கயிறு, கறுப்புக் கயிறு என்பன அவற்றின் உண்மையான பொருளில் கூறப்படவில்லை. மாறாக இது இரவின் கருமையும், பகலின் வெண்மையுமே ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-1916, முஸ்லிம்-1988)
அதேபோல மற்றொரு ஹதீஸ், ஸஹாபாக்கள் இரு கால்களிலும் கறுப்பு வெள்ளை கயிறுகளை கட்டிக் கொண்டு விளக்கம் கேட்ட ஹதீஸை புகாரி-1917, முஸ்லிம்-1990 இல் காணலாம்.
மேற்சென்ற குர்ஆன் வசனத்திற்கும் ஹதீஸ்களுக்கும் விளக்கமாக பின்வரும் ஹதீஸை கவனியுங்கள்.
பிலால் (ரழி) அவர்கள் (பின்) இரவில் தொழுவதை அறிவிப்புச் செய்வார். எனவே (பஜ்ர் தொழுகைக்காக) இப்னு உம்மி மக்தூம் செய்யும் தொழுகை அறிவிப்பை நீங்கள் கேட்கும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். (முஸ்லிம்-1991)
இதுபோல பல ஹதீஸ்களை புகாரியிலும் முஸ்லிமிலும் ஏனைய ஹதீஸ் கிரந்தங்களிலும் பார்க்கலாம். பிலால் (ரழி) தஹஜ்ஜுத்துக்கும் இப்னு உம்மி மக்தூம் (ரழி) சுப்ஹுக்கும் பாங்கு சொல்வார்கள். ஸஹர் முடிவை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு ஆழமாக சொல்லித் தருகிறார்கள்.
சுப்ஹ் அதான் சொல்ல ஆரம்பமாவதே ஸஹர் முடிவாகும். உதாரணத்திற்கு ரமழான் கால சுப்ஹு அதான் 4.30 என்றால், சரியாக 4.29 உடன் ஸஹர் முடிவடைந்து 4.30 சுப்ஹு அதான் ஆரம்பமாகிறது. அதன் பின் ஸஹர் உணவு உண்ண முடியாது. அது இல்லாமல் ரமழான் கால சுப்ஹு அதான் நேரம் 4.30 மணி என்றால் 4.15க்கே ஸஹர் முடிவடைந்து விட்டது என்றால் பொறுப்புதாரிகள் அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும்.
மார்க்கத்தில் தெளிவாகக் கூறப்பட்ட ஒன்றுக்கு மாற்றமாக நமது செயல்பாடு இருக்கும் என்றால், அவர்களை விட இறை வெறுப்புக்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
இந்த ஸஹர் முடிவின் அடிப்படையில் ஒருவர் 4.15க்கு எழும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர் இந்த நோன்புத் தாளில் உள்ள அல்லது வானொலி ஸஹர் முடிவை நம்பி அல்லது பள்ளிவாசல் விளம்பர பலகையில் உள்ள ஸஹர் முடிவை நம்பி ஸஹர் செய்யவில்லையானால் இதற்கு யார் பொறுப்பு?
பொறுப்புதாரிகளே! சிந்தியுங்கள். பள்ளி நிர்வாகிகளே சிந்தியுங்கள்! உலமாக்களே சிந்தியுங்கள்! மார்க்கத்தில் உள்ளதை சரியாகக் கூறுவோம். மார்க்கத்தில் இல்லாததை விட்டு விடுவோம். இல்லாத ஒன்றை இருக்கிறது என்றோ, இருக்கிற ஒன்றை இல்லை என்று கூறி, நாம் ஏன் பாவத்திற்கு ஆளாக வேண்டும்?
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்ன ஒன்றை நாம் நடைமுறைப் படுத்துவதா? அல்லது நாம் பரம்பரை பரம்பரையாக செய்து வருவதை எப்படி விடுவது என்று அல்லாஹ் மற்றும் ரஸூலுக்கு மாற்றமாக நடப்பதா? என்பதை எல்லா பொறுப்புதாரிகளும் சற்று ஆழமாக சிந்தியுங்கள்.
அல்லாஹ் குர்ஆனில், அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்த பின்னர், அதற்கு மாற்றம் செய்வதற்கு முஃமினான ஆணுக் கும் அதிகாரம் கிடையாது. முஃமினான பெண்ணும் அதிகாரம் கிடையாது. எவர்கள் மீறி செயல்படுகிறார்களோ அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள். (33:36)
இந்த வசனத்தின்படி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் தீர்மானித்த ஒன்றை மாற்றியமைக்க எவருக்கும் உரிமை கிடையாது. அப்படி மீறுவோர் வழிகேடர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன்படி ஸஹர் நேர முடிவை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் தீர்மானித்த பின் நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை விளங்கி நடந்து கொள்ள வேண்டும்.
மார்க்கத்தில் எந்தக் கட்டாயமும் கிடையாது. எவர் வந்து சொன்னாலும் நாங்கள் கேட்க மாட்டோம் என்றாலும் நமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள் என்ற அடிப்படையில் தரப்பட்ட ஆதாரங்கள் எங்கி ருந்து தரப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது தெளிவு கிடைத்த பின்னரும் முரண்டு பிடித்தால் நீங்களும் அல்லாஹ்வும் பார்த்துக் கொள்ளுங்கள்.
நோன்பின் நிய்யத்து
நிய்யத் என்று சொல்லும்போது உள்ளத்தால் எண்ணிக் கொள்வதாகும். ஒவ்வொரு அமலுக்கும் நிய்யத் வைக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு அமலையும் செய்துவிட்டு, அதை இப்படித்தான் செய்ய வேண்டும் என நமக்கு சொல்லித் தந்துள்ளார்கள். இதனால்தான் அல்லாஹ் வும் குர்ஆனில் “அந்தத் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உள்ளது” என்று சுட்டிக் காட்டுகிறான். இதன்படி நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜைத் தவிர வேறு எந்த அமலுக்கும் வாயால் நிய்யத்தை சப்தமாக மொழியவில்லை. உள்ளத்தால் நினைத்துக் கொள்வார்கள். எனவே, நிய்யத்தை உள்ளத்தால் எண்ணிக் கொள்வது ஸுன்னத் ஆகும்.
என்றாலும் நோன்பிற்காக இரவு தராவீஹ் எனும் தொழுகை தொழுது வித்ரெல்லாம் தொழுது முடிந்த பிறகு நிய்யத்தை இமாம் சொல்லிக் கொடுக்க பின்னால் உள்ள மஃமூம்கள் சப்தமாக சொல்வதை பரம்பரை பரம்பரையாக காணப்படுகின்றன. அதுவும் மூன்று முறை திருப்பித் திருப்பி சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
இந்த நிய்யத்தைப் பற்றியும், இதை நபி (ஸல்) அவர்கள்தான் கற்றுத் தந்தார்களா என்பதை குர்ஆன் ஹதீஸின் வழியில் சற்று பார்ப்போம்.
அந்த நிய்யத்தைப் பொறுத்தவரை இந்த வருடத்தின் ரமழான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன் அல்லாஹ்வுக்காக என்று அரபியிலும் தமிழிலும் மூன்று முறை சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
முதலில் இந்த நிய்யத்திலுள்ள தவறுகளை கவனியுங்கள். தராவீஹ் தொழுகை முடிந்த உடன் இந்த நிய்யத் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதில் நாளை பிடிக்க என்று கூறுகிறார்கள். இஸ்லாமிய அடிப்படையில் நாளை என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது இன்ஷா அல்லாஹ் என்று கூறவேண்டும். எந்தளவிற்கு என்றால், நபி (ஸல்) அவர்களுக்குக் கூட அல்லாஹ் நபியே! நாளை ஒரு செயலை செய்வேன் என்று கூறாதீர்கள். அல்லாஹ் நாடினாலே தவிர என்று சேர்க்காமல்” (18:24) என்று நினைவுபடுத்துகிறான்.
அப்படியானால் நாளை என்று அல்லது எதிர்கால சொல்லைப் பயன்படுத்தும்போது இன்ஷா அல்லாஹ் சொல்ல வேண்டும் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான். அதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். இன்ஷா அல்லாஹ் சொல்லாமல் நடந்த சில சம்வங்களின் விபரீதத்தையும் நாம் காணலாம்.
சுலைமான் நபி, தனது எல்லா மனைவி மார்களிடம் இன்று சேர்ந்து அதன் மூலம் அல்லாஹ்வின் பாதையில் போரிடும் நூறு குதிரை வீரர்களை பெற்றெடுப்பேன் என்று கூறினார்கள். ஆனால், அல்லாஹ் அப்படி யான எந்தக் குழந்தையையும் கொடுக்க வில்லை. இந்த நிகழ்ச்சியைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது சுலைமான் நபி இன்ஷா அல்லாஹ் கூறியிருந்தால் அவர்கள் சொன்னது போல நடந்திருக்கும் என்றார்கள். இந்த ஹதீஸை புஹாரியில் காணலாம்.
எனவே அன்பிற்குரிய உலமாக்களே! மதிப்பிற்குரிய பெரியவர்களே தாய்மார்களே! சற்று நிதானமாகச் சிந்தித்து சரிதானா? பிழைதானா என்று ஒரு முடிவுக்கு வாருங்கள். இன்ஷா அல்லாஹ் சொல்லாமல் சொல்ல முடியுமா? பேச முடியுமா? என்பதையும் சற்று ஆழமாக சிந்தித்து செயல்படுங்கள்.
இந்த நிய்யத்தில் இரண்டாவது பிழை என்னவென்றால், நிய்யத் சொல்லிக் கொடுக்கப்படும் நேரம் இரவு சுமார் 9.30 மணி. அப்படியானால் முஸ்லிம்களுக்கு பிறை கணக்குதான் நாள் கணக்காகும். எனவே அன்று மஃரிபி லிருந்து அடுத்த மஃரிப் வரை ஒரு நாள்தான். அதாவது அதே நாளில் தான் இருக்கிறோம். அதே நாளில் தான் நோன்பு பிடிக்கிறோம். அப்படியானால் அதேநாளில் இருந்து கொண்டு எப்படி நாளை பிடிப்பேன் என்று கூறமுடியும்?
சற்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். இந்த நிய்யத்தின் மூன்றாவது பிழை மீண்டும் இரவின் கடைசிப் பகுதியான அந்த ஸஹர் நேரத்திலும் உணவை உட்கொண்ட பிறகு அவரவர் தனித் தனியாக சொல்லிக் கொள்வார்கள். அந்த நிச்சயத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்றும் வீடுகளில் நினைவூட்டப்படும்.
அப்படியானால் சூரிய கணக்குப் படியும் தவறாகும். ஏன் என்றால் இரவு 12.00 மணியிலிருந்து மறுநாள் இரவு 12.00 மணிவரை ஒரு நாளாகும். அதிகாலை நோன்பு பிடித்த நாம் மஃரிபுடன் நோன்பை திறக்கிறோம் என்றால் அதேநாளில் இருந்து கொண்டு எப்படி நாளை பிடிப்பேன் என்று கூற முடியும்?
எனவே பிறை கணக்கான சந்திரக் கணக்கின் அடிப்படையிலும் பிழைதான். சூரிய கணக்கின் அடிப்படையிலும் பிழை தான். ஷரீஅத் படியும் பிழைதான்.
இந்த நிய்யத்தின் மற்றொரு தவறு என்ன வென்றால் ஒருவர் சொல்லிக் கொடுக்க பின்னால் உள்ளவர்கள் சொல்லும் வழமையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தரவில்லை.
அதேபோல் இந்த நிய்யத்தின் அடுத்த பிழை என்னவென்றால் திரும்பத் திரும்ப மூன்று முறை சொல்லிக் கொடுப்பது. நபி (ஸல்) அவர்கள் எந்த அமல்களுடைய நிய்யத்தையும் இப்படி மூன்று முறை சொன்னதாகவோ சொல்லும்படியோ கூறவில்லை.
இப்படி பல கோணத்தில் இந்த நோன்பு நிய்யத் பிழை என்பதையும், இந்த நிய்யத்தை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை என்பதையும் விளங்கிக் கொள்வதோடு, நோன்பு நிய்யத்தைப் பொறுத்த வரை அல்லாஹ்வுக்காக நோன்பு பிடிக்கிறேன் என்று உள்ளத்தில் அவரவர் நினைத்துக் கொள்ள வேண்டும்.
                                                                                         மௌலவி யூனுஸ் தப்ரீஸ் 

ஒரு மனிதர் இரவுத் தொழுகையைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை இரண்டு, இரண்டாகும். சுப்ஹை பயந்தால் (ஒரு ரக்கத்து) வித்ரை தொழவும். புகாரி, முஸ்லிம். 
இந்த ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகை குறிப்பிட்ட எண்ணிக்கை இல்லாமல் எவ்வளவும் தொழலாம். என்று சில அறிஞர்களை மேற் கோள் காட்டி பேசியும், எழுதியும், வருவதை காணலாம்.
இது சரிதானா? அல்லது எப்படி அணுக வேண்டும்? என்பதை ஹதீஸ்கள் மூலம் விளங்கிக் கொள்வோம்.
இரவுத் தொழுகை சம்பந்தமாக மேற்ச் சுட்டிக் காட்டிய ஹதீஸ மட்டும் வந்திருந்தால் இரவுத் தொழுகைக்கு எண்ணிக்கை இல்லை, எவ்வளவும் தொழலாம் என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் எண்ணிக்கையோடு பல ஹதீஸ்கள் வந்திருப்பதால் அதையும் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.
ரமலானில் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தன என்று கேட்கப் பட்ட போது அதற்கு ஆயிஷா(ரலி) அவரகள் ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும், பதினொன்ரைத் தவிர அதிகப் படுத்தியது கிடையாது. நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள், அதன் நீளத்தையும், அழகையும் கேட்க வேண்டாம்.பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள், அதன் நீளத்தையும், அழகையும், கேட்க வேண்டாம். பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். (புகாரி 1147, முஸ்லிம் 738)
நபி (ஸல்) அவர்கள் இரவிலே பதினொன்று ரக்அத்துகள் தொழுவார்கள். அதில் ஒன்றை வித்ராக தொழுவார்கள். மற்றொரு அறிவிப்பில் ஒவ்வொரு இரண்டு ரக்அத்துகளுக்கும் இடையில் ஸலாம் சொல்வார்கள். ஒரு ரக்அத்தை வித்ராக தொழுவார்கள். (முஸ்லிம்: 736) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்துகள் தொழுதார்கள்.
முதலில் இரண்டு ரக்அத்துகள், பிறகு இரண்டு ரக்அத்துகள், பிறகு இரண்டு ரக்அத்துகள், பிறகு இரண்டு ரக்அத்துகள், பிறகு இரண்டு ரக்அத்துகள், பிறகு இரண்டு ரக்அத்துகள், பிறகு ஒரு ரக்அத் வித்ரு தொழுதார்கள். பிறகு ஒருங்கிணைத்துப் படுத்துக் கொண்டார்கள். பிறகு சுப்ஹீ தொழுகைக்கு பாங்கு சொன்னவுடன், சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். (புகாரி 992, முஸ்லிம் 763)
அதே போல “ஸைத் இப்னு ஹாலித் ஜஹ்னி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபி (ஸல்) இரண்டு, இரண்டு, ரக்அத்துகளாக பண்ணிரெண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். பிறகு ஒரு ரக்அத்து வித்ரு தொழுவார்கள். அது தான் அந்த பதிமூன்று ரக்அத்துகள்.” (முஸ்லிம் 765)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இரவிலே பதிமூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். அதில் ஐந்து ரக்அத்துகளை வித்ராக தொழுவார்கள். அதனுடைய கடைசியிலேயே தவிர உட்காரமாட்டார்கள். (முஸ்லிம் 737)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் ” நபி (ஸல்) அவர்கள் பதினொன்று ரக்அத்துகள் தொழுவார்கள். எட்டாவது ரக்அத்திலே தவிர உட்காரமாட்டார்கள். எட்டாவது ரக்அத்தில் உட்கார்ந்து அத்தஹியாத்து ஓதியப் பின் ஸலாம் கொடுக்க மாட்டார்கள்,எழுந்து தொடர்ந்து ஒன்பதாவது ரக்அத்தை தொழுவார்கள். அதில் உட்கார்ந்து அத்தஹியாத்து ஓதி ஸலாம் கொடுப்பார்கள். (முஸ்லிம் 746) மற்றொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் (ஒரே ஸலாமில்) இரவில் ஏழு ரக்அத்துகள் தொழுவார்கள்.
அதேப் போல “உமர் (ரலி) அவர்களின் காலத்தில் உபை இப்னு கஃப் (ரலி) மற்றும், தமீமுத் தாரி அன்சாரி (ரலி) அவர்களை மக்களுக்கு பதினொன்று ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் ஏவினார்கள். (ஆதாரம் முஅத்தா பாடம் : ரமலானில் தொழுகை) மேற்ச் சுட்டிக் காட்டிய ஹதீஸ்களில் முதலாவது கவனிக்க வேண்டியது இரவுத் தொழுகையும், அதன் எண்ணிக்கைகளும். 
நபி (ஸல்) அவர்கள் பதினொன்று ரக்அத்துகள் தான் தொழுதுள்ளார்கள் என்பது தெளிவான சான்றாகும். இரண்டாவது.” உங்களில் ஒருவர் இரவிலே எழுந்து தொழுதால் சுருக்கமாக (இலேசாக) இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 767) எனவே இந்த ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகையை ஆரம்பிக்கும் முன் இரண்டு ரக்ஆத்துகள் சுருக்கமாக தொழுது கொள்ளலாம். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் இரவிலே பதிமூன்று ரக்அத்துகள் தொழுதுள்ளார்கள் என்பதைக் காணலாம்.
இங்கு நமக்கு பிரச்சனை என்னவென்றால் இரவுத் தொழுகை இரண்டு, இரண்டு என்பதின் மூலம் நாம் நினைத்த அளவு எண்ணிக்கை குறிப்பிடாமல் தொழலாமா என்றால் கூடாது. ஏன் என்றால் இரவுத் தொழுகை இரண்டு, இரண்டு என்ற ஹதீஸை நடைமுறைப் படத்தியவர்கள் நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் தான். நபி (ஸல்) அவர்கள் அமல் விடயமாக ஒரு விடயத்தை ஏவுகிறார்கள் என்றால் முதலில் அவர்கள் தான் நடைமுறைப் படுத்துவார்கள். அதனைத் தொடர்ந்து ஸஹாபாக்களும் நடைமுறைப் படுத்துவார்கள். ஆகவே இரவுத் தொழுகை இரண்டு, இரண்டு என்பதை பதினொன்று ரக்அத்துகள் தொழுது, நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள்.
அதனால் தான் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்திலும் கூட பதினொன்று ரக்அத்துகளை தொழுவிக்குமாறு ஏவியுள்ளார்கள். அடுத்தது மார்க்கத்தில் ஒரு சட்டம் விசயமாக பேசும் போது அந்த சட்டம் சம்பந்தமான எல்லா ஹதீஸ்களையும் முன் வைத்து தான் முடிவெடுக்க வேண்டும். ஒரு ஹதீஸை மட்டும் வைத்து முடிவெடுப் போம் என்றால் அவர், அவர் ஒவ்வொரு ஹதீஸை வைத்து முடிவெடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உதாரணத்திற்கு இரவுத் தொழுகை இரண்டு, இரண்டு என்பதிலிருந்து எவ்வளவும் தொழலாம் என்றால், நபி (ஸல்) அவர்கள் ஒன்பது ரக்அத்கள் இரவில் தொழுதார்கள் என்ற ஹதீஸை முன் வைத்து, இரவுத் தொழுகை ஒன்பது தான் என்று சொல்ல வேண்டியது வரும். நபி (ஸல்) அவர்கள் இரவிலே ஏழு ரக்அத்துகள் தொழுதார்கள், எனவே இரவுத் தொழுகை ஏழு தான் என்று சொல்ல வேண்டி வரும். எனவே இரவுத் தொழுகை சம்பந்தமான எல்லா ஹதீஸ்களையும் ஒன்றிணைத்து பின் வரும் முடிவுக்கு வரலாம். 
நபி (ஸல்) அவர்கள் இரண்டு, இரண்டு ரக்அத்துகளாக பதினொன்று ரக்அத்துகள் தொழுதுள்ளார்கள். சில சந்தர்ப்பங்களில் அந்த பதினொன்று ரக்அத்தை தொழும்போது ஒரே ஸலாமில் ஒன்பது ரக்அத்துகளையும், மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரே ஸலாமில் ஏழு ரக்அத்துகளையும், தொழுதுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனவே நபியவர்கள் காட்டித் தராத ஒன்றை மார்க்கமாக நடைமுறை படுத்த முடியாது., இந்த, அறிஞர்கள் சொல்லியுள்ளார்களே என்பது இஸ்லாத்தின் அளவு கோல் கிடையாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
                                                                                        மௌலவி:- யூனுஸ் தப்ரீஸ்

ரமழான் சமூகரீதியாக பசியின் கொடுமையை உணரவும் வசதியுள்ளவன் வறியவனின் துன்பங்களை அறியவும் அவற்றுள் பங்கு கொள்ளவும் துணை செய்கிறது. இது ஏழை பணக்காரன் என்ற பொருளாதார இடைவெளியை மானசீகமாகக் குறைத்து விடுவதற்கும் சமூகத்திற்குள் தோன்றும் வகுப்புவாதத்தையும் ஏற்றத்தாழ்வையும் அகற்றி மனிதர்களின் சமூக அந்தஸ்து உறுதிப்படுத்தவும் உதவுகின்றது.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளை பிரார்தித்தவனாக!
பிறையினுடைய விவகாரம் இன்று பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு பேசப்படுவதை காண்கிறோம்.
பிறையினுடைய விவகாரம் உண்மையில் குர்ஆன் சுன்னாவில் தெளிவான ஓர் விடையமே. இருந்தபோதிலும் இம் மஸ்அலாவில் சர்வதேசப் பிறை என்றும் நாட்டுக்கு நாடு உள்ளூர் பிறை என்றும் பிரதானமான இரண்டு கருத்துக்கள் இருந்துவருகின்றது.

அதில் நமது ஆய்வின் பிரகாரம் நாம் சர்வதேசப் பிறையை 100 வீதம் சரி காண்கிறோம்.
சர்வதேச பிறை என்பது உலகத்தின் எப் பாகத்தில் பிறை தென்பட்டதாக சட்சியத்தின் அடிப்படையில் செய்தி வந்தாலும் அந்தப் பிறையை உலக முஸ்லீம்கள் அனைவரும் அவர்கள் மாதத்தை அடையும் போதோ அல்லது முடிக்கும் போதோ எடுத்து செயற்படுத்த வேண்டும் என்பதாகும்.....

ஆதாரம்:- 01

🌒பிறையை கண்டு நோன்பு பிடியுங்கள் பிறையை கண்டு நோன்பை விடுங்கள் பிறை மறைக்கப்பட்டால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள் (புஹாரி)

🌛இங்கு பிறையை கண்டு நோன்பு வையுங்கள் என்றுதான் கூறப்படுகிறதே ஒழிய அந்தந்த நாட்டில் காணுங்கள், இந்த இந்த பகுதியில் காணுங்கள் என்றில்லை. குர்ஆனோ ஹதீஸோ நாடுகளாக எல்லை போடவில்லை. அது நாமாக ஏற்படுத்திக் கொண்டது. எனவே பிறை ஒன்றுதான், தலைப்பிறை ஒரு மாதத்தில் ஒரு முறைதான் தென்படும், அதனால் எங்கு முதல் பிறை தென்படுகிறதோ அந்தப் பிறையையே உலக முஸ்லீம்கள் மாதத்தை ஆரம்பிக்கவும் மாதத்தை முடிக்கவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

🌗பிறையை நாம் மாதத்தை 29 ஆக பூர்த்தி செய்துவிட்டே எதிர்பார்க்க வேண்டும்.
உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 02:186)

மாதத்தை 29 ஆக பூர்த்தி செய்யும் அச்சமையம் எம் நாட்டிலோ எம் நேரத்தை ஒத்த நாடுகளிளோ பிறை தென்படவில்லை என வைத்துக் கொண்டால் நமக்கு பின் வருகிற ஏதாவது ஒரு நாட்டில் பிறை தென்பட வாய்ப்பு உண்டு.
அப்படி தென்பட்ட செய்தி சாட்சிகளின் அடிப்படையில் ஊர்ஜிதமான முறையில் கிடைக்கப்பெற்றால் அதுவே எல்லா முஸ்லீம்களுக்கும் மாதத்தை ஆரம்பிக்கும் அல்லது முடிக்கும் பிறையாகும்... அதை ஏற்று நோன்பெடுப்பதும் நோன்பை விடுவதும் கடமையாகும்.

ஆதாரம்:- 02

நபித்தோழர் ஒருவர் கூறுகின்றார் எங்களுக்கு ஷவ்வாலின் பிறை மறைக்கப்பட்டிருந்ததால் நாங்கள் நோன்பாளியாக கலையை அடைந்தோம் அப்போது பகலின் இறுதியில் ஒரு பிரயாணக் கூட்டம் வந்து அவர்கள் நேற்று பிறையை கண்டதாக நபிகளாரிடம் சாட்சி சொன்னார்கள்.அப்போது நோன்பை விடுமாறும் மறுநாள் தொழுகைக்கு வெளியேறுமாறும் நபிகளார் மக்களுக்கு கட்டளை இட்டார்கள்.. (முஸன்னப் இப்னு அபீ ஷைபா ---------------9461/முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்- 📚7339)

இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர் வழியாக வந்திருந்தாலும் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆய்வுக்குட்படுத்தினால் இதில் நபிகளார் இட்ட கட்டளை நபிகளாரையும் ஸஹாபாக்களையுமே தெளிவாக குறிக்கின்றது. காரணம் நபி ஸல் அவர்களும் ஸஹாபாக்களும் நோன்போடு இருந்தார்கள் என்பதே இந்த ஹதீஸின் ஆரம்பமாகும்.

இங்கு தமது பிரதேசத்தில் பிறை காணப்படாத பொழுது வெளியூரில் இருந்து பிறை கண்டதாக வந்த சாட்சியத்தை நபிகளார் ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த நிலைப்பாடே பிறை விடையத்தில் குர்ஆன் ஹதீஸை ஒத்ததாகும்.

சர்வதேசப் பிறையை மறுக்க அனேகரிடம் எழுகின்ற கேள்வி என்னவெனில் நமக்கும் ஏனைய நாடுகளுக்குமிடையில் நேர வித்தியாசமுண்டே???

பதில்👉👉உலக நாடுகள் நேர அளவில் வித்தியாசப்படுவது உண்மையிலும் உண்மையே அதனை நாம் ஏற்றே நம் நிலைப்பாட்டை எவ்வித நடைமுறை சிக்கலுமின்றி முன்வைக்கின்றோம்..

உதாரணமாக இலங்கையில் இருப்பவர்கள் ஞாயிரு மாலை 06.00 மணியளவில் பிறையை பார்கிறோம்🌙பிறை தென்படவில்லை... அதே நேரம் இலங்கைக்கு அடுத்தடுத்து வரும் நாடுகள் 👉🏿உதாரணமாக:-  சவூதியில் இருப்பவர்கள் பிற்பகல் 3.30 மணியில் இருப்பார்கள் இன்னும் சில நாடுகள் பிப.2.00, 1.00,12.00,காலை10.00, 09.00, 08.00 .......இப்படி இந்த நாடுகளில் இருப்பவர்கள் இன்னும் பிறை பார்கும் நேரத்தை அடையாமலிருப்பார்கள்...
இதில் எந்த சிக்கலும் இல்லை நேரம்தான் நமக்கும் அவர்களுக்குமிடையில் வித்தியாசம்.....  நாள் அல்ல எவ்வளவுதான் நேர வித்தியாசம் ஏற்பட்டாலும் அது கூடி குறையுமே ஒழிய நாள் வித்தியாசமாகாது. 

நான் மேலே குறிப்பிட்ட நேர வரையறையில் இருப்பவர்களும் அதே ஞாயிற்றுக் கிழமையில்தான் இருப்பார்கள், இதில் என்ன சிக்கலுண்டு? நாம் பிறை பார்த்துவிட்டு தென்படாததால் இரவு 10.00 மணியில் இருப்போம் அப்போதுதான் சவூதியில் பிறை பார்பார்கள் அதே ஞாயிரு பிறை தென்பட்டவுடன் பிறையினுடைய செய்தியை எமக்கு அறிவிப்பார்கள் நாமும் அந்த சாட்சியத்தை நபிகளார் மேற்சொன்ன செய்தியில் ஏற்றது போல் ஏற்றுக்கொள்வோம்.. 

இப்பொழுது இரண்டு பேறும் திங்கள் சஹர் சொய்வோம் நாம் சஹர் செய்து 02.30 மணித்தியாலத்தின் பின் அவர்கள் சஹர் செய்வார்கள் எல்லாம் ஞாயிருதான்....இதில் என்ன குழப்பம் நமக்கு??? இப்படித்தான் மற்றைய நாடுகளும் நேரத்தால் வேறுபடும்.

அது போன்றதொரு வாதம்தான் நம்மவர்கள் அமெரிக்க நேரம் நம்மை விட 12.00 மணித்தியாளங்கள் வித்தியாசம் என்று அது சாத்தியமில்லை என்பார்கள்.

இது கூட நம்மவர்களின் புரிதலில் ஏற்பட்ட தவரேயாகும்... அமெரிக்காவுக்கும் நமக்கும் நேரம்தான் வித்தியாசம் உதாரணம் நாம் திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணியில் இருக்கும் பொழுது அமெரிக்கர்கள் அப்பொழுதுதான் திங்கட்கிழமை அதிகாலை 12.00 மணிக்குள் நுழைகிறார்கள். நாம் திங்கள் மாலை 06.00 மணிக்கு பிறை பார்கும் போது அவர்கள் திங்கள் காலை 06.00 மணிக்கு அதே தினத்தில்தான் இருப்பார்கள். இவ் வேளை நமக்கு பிறை தென்படாமல் அமெரிகாவில் பிறை தென்பட்டுவிட்டால்.. அமெரிக்கர்கள் பிறை காணும் நேரத்தில் நாம் அடுத்த நாள் செவ்வாய் காலையை 30ஆக பூரணப்படுத்தி அந்த செய்தி கிடைக்காதவரைக்கும் நோன்போடு இருப்போம்...

செய்தி வந்துவிட்டால் நோன்பை விட வேண்டும் அடுத்த நாள் பெருநாள் எடுக்க வேண்டும்..அதற்குறிய ஆதாரம் மேலே குறிப்பிட்ட பிரயாணக்கூட்டத்தின் செய்தியாகும்...அந்த மாதம் நோன்பை ஆரம்பிக்கும் மாதமெனில் தகவல் கிடைத்தவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த நாம் சாப்பாட்டை நிறுத்தி செய்தி கிடைத்த நேரத்திலிருந்து நோன்பை தொடர வேண்டும்...இதற்கு ஆதாரம் அரபா நோன்பின் செய்தி....

இப்படி சர்வதேசப் பிறையில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலுண்டு சிந்தியுங்கள் நண்பர்களே!!! நமது நாட்டில்தான் பிறைபார்க்க வேண்டும் என நபிகளார் எந்த எல்லையும் இடவில்லை என்பதே உண்மையிலும் உண்மை......
01-நமக்கு லைலதுல் கத்ர் இரவு ஒரு நாள்தான்.
02-நமக்கு அரபா தினம் ஒரு நாள்தான்.
03- நமக்கு வெள்ளிக்கிழமையும் ஒரு நாள்தான்.
04- நமது உலகம் அழிவதும் ஒரு நாள்தான்.

தலைப் பிறை மட்டும் எப்படி இரண்டாக முடியும்??? அல்லது இரு தலைப்பிறைகள்தான் பிறக்க சாத்தியமுண்டா??
எம் அனைவருக்கும் இம் மஸ்அலாவில் போதிய தெளிவை வல்ல இறைவன் வழங்கிடுவானாக!           ஜஸாகுமுல்லாஹு ஹைரன்.

                                                                                   ஆக்கம்-ஜே.எம்.சாபித் (ஷரயி)

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget