April 2018

றமழான் காலங்களில் விட்ட நோன்பு மற்றும் சுன்னத்தான நோன்புகளை நோற்பவர்கள் ஷஃபான் மாதம் நடுப்பகுதியை அடைந்து விட்டால் தாங்கள் நோன்பு நோற்பதை விட்டுவிடுவார்கள். இதற்கு காரணம் அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் நபிகளாரைத் தொட்டு அறிவிக்கும் ஓர் செய்தியேயாகும்.

ஹதீஸ் : 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஷஃபான் மாதத்தின் அரைவாசியை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள் ஹதீஸின் நிலைப்பாடு  இருப்பினும் இச் செய்தி பலவீனமான ஓர் செய்தியாகும்.
பலவீனத்திற்கு காரணம்
இந்த ஹதீதானது இமாம் அபூ தாவுதின் சுனன் என்ற கிரந்தங்களிலும் (2237), இமாம் நசாயியின் சுனனுல் குப்ரா என்ற கிரந்தத்திலும் (2923), இமாம் அப்துர்ரசாக்கின் முஸன்னப் என்ற கிரந்தத்திலும் (7325), இமாம் திர்மிதியின் சுனன் என்ற கிரந்தத்திலும் (738), இமாம் அஹமதின் முஸ்னத் என்ற கிரந்தத்திலும் (9707) மற்றும் பல கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது.
அபூ ஹூறைறா (ரழி) அவர்களினால் அறிவிக்கப்படும் இந்த ஹதீத் அலா இப்னு அப்துர்ரஹ்மான் என்ற ஒரு அறிவிப்பாளரின் வாயிலாகவே அனைத்து கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது.
இவர் இதனை தன் தந்தையிடம் கேட்டு அறிவிக்கின்றார் என்றாலும் இந்த அறிவிப்பாளர் அலா இப்னு அப்துர்ரஹ்மான் ஹதீஸ் கலை அறிஞர்கள் பலராலும் குறை கூறப்பட்ட நம்பகத்தன்மையில் குறைந்த அறிவிப்பாளராகும்.
இவரின் நிலை பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்.
அறிவிப்பாளர்களை சுண்டிப்பார்ப்பதில் பாண்டித்தியம் பெற்ற இமாம்களான இமாம் அபூ ஹாதம் ''இவர் நம்பகமானவர்களைத் தொட்டும் அறிவிப்பார் இருப்பினும் நான் இவரின் ஹதீதில் சிலதை மறுக்கின்றேன்'' என்றும் இமாம் அபூ சுர்ஆ ''இவர் பலமானவர் இல்லை'' என்றும் கூறியுள்ளார்கள்.
இன்னும் இமாம் யஹ்யா இப்னு மயீன் ''இவர் ஒன்றும் அல்லாதவர், மக்கள் இவரின் ஹதீதை பயப்படக்கூடியவர்களாக இருந்தார்கள்'' என்றும் மற்றொரு சந்தர்ப்பத்தில் ''இவரின் ஹதீத் ஆதாரபூர்வமானது இல்லை இ.ன்னும் இவர் பலவீனமானவர்'' என்றும் கூறியுள்ளார்கள்.
அதுபோல் இமாம் தஹபி '' இவரின் ஹதீத்கள் ஹஸன் என்ற படித்தரத்தை விட்டும் குறைந்திடாது என்றாலும் இவரின் சில முக்கரான ஹதீத்களால் இவர் தூரமாக்கப்படுவார் என்றும் இமாம் இப்னுஹஜர் '' உணமையாளர், சில வேளைகளில் தவறுவிடுவார்'' என்றும் கூறியுள்ளார்கள்.
இன்னும் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் இவ்வறிஞர்கள் அனைவருக்கும் மாற்றமாக ''இவர் நம்பகமானவர் இவரில் யாரும் குறை கூறவில்லை'' என்ற கருத்தை கூறியிருந்தாலும் இந்த ஹதீதை ஆதாரமற்றது என்று கூறிவிட்டார்.
இது இங்கு கோடிட்டு காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆக மொத்தத்தில் ஹதீத் கலையில் பிரசித்திபெற்ற அறிஞர்கள் பலர் இவரை குறையுள்ளவர் என்று விமர்சித்திருப்பது மேல் கூறப்பட்டவைகள் மூலம் தெளிவாகின்றது.
இதே வேளை இதற்கு மாற்றமாக மற்றொரு ஆதாரமான ஹதீஸ் வருவது இதை இன்னும் பலயீனமாக்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''உங்களில் ஒருவர் ரமழானை ஒன்று அல்லது இரண்டு நோன்புகளால் முந்த வேண்டாம் வழமையான சுன்னத்து நோன்பு வைப்பவரைத்தவிர'' (அறிவிப்பவர் அபூ ஹூறைறா ரழி நூல் புஹாரி 1914)
எனவே அபூ ஹூறைறா ரழி அவர்களைத் தொட்டும் மிக நம்பகமானவர்கள் வாயிலாக வந்த செய்தி ரமழானின் முன்னிரு நாட்கள் மட்டும் நேன்பை விட்டும் தடுப்பதால், அதே அபூ ஹூறைறா ரழி அவர்களைத் தொட்டும் பலராலும் குறைகூறப்பட்ட ஒருவர் அறிவிக்கும் தலைப்பு ஹதீஸ் மறுக்கப்படும் பலவீனமான ஓர் செய்தியாகின்றது.
இச் செய்தியின் நிலை பற்றி இமாம்களின் கருத்துக்கள்.
இமாம் அஹ்மத் ''இந்த ஹதீத் சரியானது அல்ல'' என்று கூறுகின்றார். இன்னும் அவர் கூறுகையில் ''அலா நம்பகமானவர் என்றாலும் இந்த ஹதீதைத் தவிர வேறு எதையும் நான் மறுக்கவில்லை'' என்கிறார்.
அதே போல் இமாம் நசாயீ ''அலாவைத் தவிர இந்த ஹதீதை வேறுயாரும் அறிவித்ததாக நாங்கள் அறியவில்லை.'' என்று கூறுகின்றார்.
இன்னும் இமாம் அபூ சுர்ஆ இதனை மறுத்தார் என அவரின் கிரந்தமான அல்லுஅபா என்ற கிரந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்னும் இமாம் தஹபி அலா தன் தந்தையின் வாயிலாக அறிவிக்கும் (யாரும் அறிவிக்காத) அரிதான ஹதீத்களில் இதுவும் ஒன்றாகும். எனவும் கூறினார்.
ஹதீதின் விபரீதம் 
ஷஃபான் மாதத்தின் அரைவாசியை அடைந்துவிட்டால் நோன்பு நோற்காதீர்கள் என்ற இந்த பலவீனமான செய்தியை ஆதாரபூர்வமானது என நம்பிய பலர் தாங்களின் (கழா) விடுபட்ட நோன்புகளைக் கூட நோற்பதற்கு தயங்கி அவைகளை நோற்காமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். இன்னும் அத்தினங்களில் நோன்பு நோற்பது பாவமானது, நபியவர்கள் கூற்றுக்கு மாற்றமானது எனவும் கருதுகிறார்கள்.
முடிவு
இச் செய்தி பலவீனமான ஓர் செய்தியாகும். எனவே தங்கள் நோன்புகளை கழாச் செய்ய விரும்புபவர்கள் ரமழானின் அருகிலுள்ள ஷஃபானின் இறுதி இரு நாற்களில் தவிர அனைத்துக் காலங்களிலும் தங்கள் நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம்.
இது போக நபி (ஸல்) ஷஃபானில் தான் அதிகம் நோன்பு நோற்பார்கள் 
மற்றும் ஆயிஷா ரழி அவர்கள் தங்களின் அதிக வேலை காரணத்தால் ஷஃபானின் இறுதியில் தான் விட்ட நோன்புகளை கழாச் செய்வார்கள் என ஏராளமான சான்றுகள் மேல் கண்ட பலவீனமான ஹதீதுக்கு மாற்றமாக ஆதாரபூர்வமாக புஹாரி, முஸ்லிம் கிரந்தங்களில் பதிவாகியுள்ளதால் தாம் நோன்புகளை ஷஃபானில் நோற்பது எவ்விதத்திலும் பாவமான காரியமாகாது. அல்லாஹ்வே கூலி வழங்கப் போதுமானவன்.
                                                                                        

                                                  சுமையா (ஷரயிய்யா)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், இன்னும் ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த வெளியிட்டீன் மூலம் ஷஃபான் மாத சிறப்புகளையும், இன்னும் ஷஃபான் மாதத்தில் அரங்கேற்றப்படும் ஓர் சில வழிகேடான பித்அத்துகளையும் தெளிவுபடுத்துவது தான் நமது நோக்கம்.
ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்:

عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ (متفق عليه).

நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ (أبوداود, نسائي).
நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி).
ஷஃபானில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன:

قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ قَالَ حَدَّثَنِي أُسَامَةُ ابْنُ زَيْدٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ قَالَ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ (نسائي, أحمد).

உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்ளிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது, நபியவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, அஹ்மத்).

عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا حَدَّثَتْهُ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ وَكَانَ يَقُولُ خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّتْ وَكَانَ إِذَا صَلَّى صَلَاةً دَاوَمَ عَلَيْهَا * (متفق عليه).
நபியவர்கள் ஷஃபான் மாதத்தை போன்று வேறொரு மாதத்தில் அதிகம் நோன்பு நோற்கவில்லை. ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். இன்னும் நபியவர்கள்: உங்களுக்கு முடியுமான வணக்க வழிபாடுகளை செய்யுங்கள், நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். குறைவான வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து வருவதுதான் நபியவர்களுக்கு விருப்பமாக இருந்தது.
நபியவர்கள் தொழுவார்கள் என்றால், தொடர்ந்து அதை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். (முத்தபகுன் அலைஹி).
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஷஃபான் மாதத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும். எனவே நாமும் நபியவர்களின் இந்த நடைமுறையை செயல்படுத்துவோம். அதன் மூலம் ரமழான் மாத நோன்புக்கும் ஒரு பயிற்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நபியவர்கள் குறிப்பிட்டது போல் ஷஃபான் மாத விஷயத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் பாராமுகமாகத் தான் இருக்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் அமல்கள் உயர்த்தப்படுகின்ற இம்மாதத்தில் நாமும் அதிகம் நோன்பு வைப்பதற்கு முனைவோம்.
ரமழானுக்கு ஒரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நோன்பு நோற்பது தடை:

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ (البخاري, ومسلم).
‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).
உதாரணமாக: திங்கள், வியாழன் வழமையாக நோன்பு வைக்கும் ஒருவர், ரமழானுக்கு முந்தியுள்ள ஓரிரு நாட்கள் திங்கள் அல்லது வியாழனாக அமையுமானால் அவருக்கு நோன்பு நோற்பதற்கு அனுமதியுள்ளது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.
ஷஃபானின் 15 வது தினத்தை சிறப்பிப்பது வழிகேடான பித்அத்தாகும்:
‘நிச்சயமாக நாம் அதனை (அல்குர்ஆனை) பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம், நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக் கப்படுகிறது.’ 
(அத்துகான் 44: 3,4).
இவ்வசனத்தில் அல்லாஹ் ‘அருள் நிறைந்த இரவில்’ அல்குர்ஆனை இறக்கியதாகவும், அந்த இரவில் மனிதனின் வாழ்வாதரங்களுடன் தொடர்புபட்ட விஷயங்களை தீர்மானிப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் அருள் நிறைந்த இரவு என்பது ஷஃபானின் 15 வது இரவாகும் என்று சிலர் வாதிக்கின்றனர். இது நேரடியாகவே குர்ஆனுடன் மோதக்கூடிய ஒரு வாதம் என்பதை ஏனோ அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.
அல்லாஹ் புனிதமிக்க அல்குர்ஆனில் மற்றுமோர் இடத்தில்: ‘ரமழான் மாதம் எத்தகையது எனில் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய அல்குர்ஆனை நாம் அருளினோம்’. (2: 185).
மற்றுமோர் இடத்தில்: ‘லைலதுல் கத்ர் இரவில் நாம் இதை (அல்குர்ஆனை) அருளினோம்’ என குறிப்பிடுகிறான். எனவே அத்துகான் அத்தியாயத்தில் இடம் பெற்ற ‘அருள் நிறைந்த இரவு’ என்பது ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் இரவு தான் என்பதை அல்குர்ஆனின் ஏனைய வசனங்களையும் பார்க்கும் போது தெளிவாக விளங்க முடிகிறது. எனவே இவர்களில் கூறுவது போன்று ஷஃபானின் 15 வது இரவுக்கும் இதற்கும் மத்தியல் எந்த தொடர்பும் இல்லை.
ஷஃபானின் 15 வது இரவை ‘பராஅத்’ என்று கூறி அந்த இரவை புனிதப்படுத்துவதும், அதன் பகல் காலத்தில் நோன்பு நோற்பதும், மூன்று யாசீன்கள் ஓதி ரொட்டி போன்ற உணவு வகைகளை தயாரித்து பகிர்ந்தளிப்பதும் இந்த நாளில் செய்யப்படும் தெளிவான பித்அத்துகளாகும். மார்க்கத்தில் இவைகளுக்கு எந்த அடிப்படையுமில்லை.
பித்அத்துகள் அனைத்தும் தெளிவான வழீகேடு என்பது நபியவர்களின் கூற்று என்பதை உணர்ந்து இவ்வாறான பித்அத்துகளை விட்டு விழகி இருப்பதுடன், ஏனையவர்களையும் தடுப்போமாக.
ஷஃபானின் 15 வது இரவுடன் தொடர்பு படுத்தி சில புணைந்துரைக்கப்பட்ட செய்திகளும் இருக்கின்றன அவைகளையும் இங்கு குறிப்பிடுவது பொறுத்தமென நினைக்கிறேன்.

قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي…….)).
‘ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

قوله صلى الله عليه وسلم:((من صلى ليلة النصف من شعبان ثنتي عشرة ركعة، يقرأ في كل ركعة((قل هو الله أحد)) ثلاثين مرة ، لم يخرج حتى يرى مقعده من الجنة..
‘ஷஃபானின் 15 வது இரவில் எவர் 12 ரக்அத்துகளை தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் இஹ்லாஸ் அத்தியாயத்தை 30 தடவை ஓதவாரோ, சுவர்க்கத்தில் அவர் தங்கும் இடத்தை பார்க்காமல் அங்கிருந்து வெளியேற மாட்டார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இச்செய்திகள் அனைத்தும் நபியின் பெயரால் புணைந்துரைக்கப்பட்ட வைகளாகும். இவைகளை இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் தனது ‘மவ்லூஆத்’ என்ற கிரந்தத்தில் குறிப்பிடுகிறார். இவைகளை விட்டு நாம் எச்சரிக்கையாக இருப்பது கட்டாயமாகும்.
                                                                                          அஷ்ஷேஹ் அஸ்ஹர் ஸீலானி

ஷஃபான் மாதம் வந்து விட்டால் பல விதமான தவறான செயல்களையும் அமல்களாக அள்ளி வீசுவார்கள். மார்க்கம் படித்த மவ்லவிமார்கள் மிம்பர்களிலும், ஏனைய பயான் நிகழ்ச்சிகளிலும், மார்க்கம் என்ற பெயரில் கட்டுக் கதைகளை பேசுவதை அவதானிக்கலாம்.

ஷஃபான் மாதம் பிரை 15-ம் நாள் நோன்பு பிடிப்பது, நின்று வணங்குவது. போன்ற விடயங்கள் அனைத்தும் இட்டுக்கட்டப் பட்ட செய்திகள் இது ஒரு புறம் இருக்க, அன்றைய இரவில் மஃரிப் தொழுகைக்குப் பின் மூன்று யாசீன் ஓதுவார்கள். ஒன்று உணவு விஸ்திரணத்திற்கு, இரண்டாவது ஆயுள் நீடிப்புக்கு, மூன்றாவது கப்ரில் வேதனை நீங்கவாம்? மூன்று யாசீனுக்கு இடை, இடையே துஆ ஓதிக்கொள்வார்கள். மூன்று யாசீனையும் ஓதியப் பின் ரொட்டி சுட்டு, மூன்று வாழை பழத்துடன் பங்குவைப்பார்கள். இதற்காக இரண்டு விஷேசமான கதையைக் கட்டி வைத்துள்ளார்கள்.
“யார் மூன்று யாசீனை ஒதி, ரொட்டியும், வாழைப் பழத்தையும் கொடுக்கிறரோ, அவைகள் மறுமை நாளில் குடையாக நிழல் தரும். அதாவது வாழைப் பழம் குடையின் பிடியாகவும், ரொட்டி மேல் துண்டாகவும், வருமாம்?
இரண்டாவது கட்டுக் கதை அதாவது,
யார் அன்றிரவு ரொட்டியும், வாழைப் பழமும், கொடுக்கிறாரோ அவைகள் கப்ரில் மலக்குமார்கள் இரும்பால் அடிக்கும் போது கொடுத்த ரொட்டி கேடயமாக வருமாம்?
புராணங்கள் தோற்றுப் போகும் அளவுக்கு நம்மவர்களிடம் கதைகளும், கப்ஸாக்களும் கொடிக் கட்டி பறக்கிறது. இப்படி மார்க்கத்தை விற்று பிழைப்பு நடத்துவதை விட பிச்சை எடுத்து சாப்பிடுவது மேலாகும். ஏன் எனறால் யாசகத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது.
பொதுமக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் உலக தர வரிசையில் மத குருமார்கள் தான் முன்னணியில் உள்ளார்கள்? இந்த ஏமாற்றுபவர்களை நம்பி சுட்ட ரொட்டியையும், வாழைப் பழத்தையும், வீடு, வீடாகவும், பள்ளிவாசல்தோறும் பங்கு வைப்பதையும் காணலாம். கூடுதலாக பள்ளிக்கு அனுப்புவார்கள். எவ்வளவுதான் பள்ளி இமாமும், முஅத்தினும் சாப்பிடுவார்கள். காலையில் பார்த்தால் குப்பையிலும், காண்களிலும் வீசப்பட்டு கிடக்கும். அல்லாஹ்வுடைய ரிஸ்க் சீரழிவதை காணலாம். அதிலும் நெட்டி உடையாத வாழைப் பழம் அனுப்ப வேண்டுமாம்? அப்ப தான் இரண்டு, மூன்று நாளைக்கு வைத்து சாப்பிடலாம்? மேலும் இந்த பராத் இரவை உறுதிப் படுத்த ஒருகுர்ஆன் வசனத்தையும் ஆதாரமாக காட்டுவார்கள்.
அதாவது “ஹா மீம் இது தெளிவான வேதநூல், இதை நாம் பரகத் பொருந்திய இரவிலே இறக்கினோம். நாம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம். நுட்பமான எல்லா காரியங்களும் பிரித்தறிவிக்கப்படுகிறது…” (44 : 1, 2)
“இந்த வசனம் பராஅத் இரவுப் பற்றி பேசுகிறது. ஏன் என்றால் பராத் இரவில் தான் மனிதர்களுடைய சகல காரியங்களும் மீண்டும் தீர்மானிக்கப்படுகிறது. இந்த வசனமும் இந்த பரக்கத் பொருந்திய இரவில் தான் காரியங்கள் பிரித்தறிவிக்கப்படுகிறது என்று கூறுகிறது” என்று கண்மூடித்தனமாக விளக்கம் சொல்வதை காணலாம்.
உண்மையில் இவர்கள் சொல்லும் இந்த விளக்கம் சரிதானா என்று பார்த்தால், இது தெளிவான பிழையான விளக்கமாகும். ஏன் என்றால் மீண்டும் அந்த வசனத்தை சற்று அவதானியுங்கள். ஹா மீம் இது தெளிவான வேதநூலாகும். அதை பரகத் பொருந்திய இரவிலே இறக்கினோம். என்று அல்லாஹ் கூறி விட்டு, அந்த பரகத் பொருந்திய இரவிலே காரியங்கள் பிரித்தறிவிக்கப் படுகிறது என்று கூறுகிறான். அப்படியானால் அந்த பரகத் பொருந்திய இரவை கண்டு பிடித்து விட்டால், இந்த வசனத்திற்கும், பராத் இரவுக்கும் தொடர்புள்ளதா? இல்லையா? என்று விளங்கி விடலாம்.
இந்த வசனம் குர்ஆனோடும், லைலதுல் கத்ர் இரவோடும் சம்பந்தப் படுவதை காணலாம். குர்அன் அருளப்பட்ட மாதத்தைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்.   
“ரமலான் மாதத்தில் தான் இந்த குர்ஆன் அருளப்பட்டது…” (02 : 185)
இந்த வசனத்தில் குர்ஆன் அருளப்பட்ட மாதத்தைப் பற்றி பேசுகிறான். எந்த இரவில் இந்த குர்ஆன் அருளப்பட்டது என்று 97 ம் அத்தியாயத்தில் இப்படி கூறுகிறான். லைலதுல் கத்ர் இரவில் இறக்கினோம் என்று 97ம் அத்தியாயமான சூரத்துல் கத்ரில் சுட்டிக் காட்டுகிறான். எனவே நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய 44 ம் அத்தியாயம் பராத் இரவுப் பற்றி பேசவில்லை, மாறாக லைலதுல் கத்ர் இரவைப்பற்றி தான் பேசுகிறது. என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே பராத் என்ற மாதமோ, பராத் என்ற இரவோ, கிடையாது என்பதோடு, தாயியுடைய கர்ப அறையிலே மனிதனின் சகல விடயங்களும் எடுத்து எழுதப்பட்டு விடுகிறது. மீண்டும், மீண்டும் ஒவ்வொரு வருடமும் புதுசு, புதுசா எழுதப்படுவது கிடையாது. (அதிகமாக நோன்பு நோற்பதைத் தவிர) ஷஃபான் மாதத்தில் எந்த விசேட அமல்களும் கிடையாது என்பதை விளங்கி, வழமையான அமல்களை நிறைவாக செய்வோமாக!.

                                                                                   அஷ்ஷேஹ் யூனுஸ் தப்ரீஸ்

பொதுவாக ஒற்றுமையின் அவசியத்தை பெரும்பாலானோர் அறிந்தே இருக்கின்றனர். ஆனால், அதை கடைப்பிடிக்கத்தான் வழி தெரியாதவர்களாக, விழியிருந்தும் குருடர்களாகத் தடுமாறுகிறார்கள். திருக்குர்ஆனின் ஒளியும, திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலும் நம்மிடையே இருந்தும், அதை அலட்சியம் செய்பவர்களாக வாழ்வதால் அல்லவா இன்றைய இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையின்றி பிளவுபட்டு நிற்கிறது!



கற்பமான,பாலூட்டும் தாய்மார்கள் இவ்விருவர் பற்றியும் நபிகளார் கூறிய தகவலை நாம் முதலில் பார்க்க வேண்டும் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் கூறினார்கள் நிச்சியமாக அல்லாஹ் பிரயாணியை விட்டும் தொழுகையின் அரைவாசியையும் மேலும் பிரயாணி கற்பமூர்றவர். பாலூட்டுகின்றவர் ஆகியோரை விட்டும் நோன்பையும் நீக்கி உள்ளான் முஸ்னத் அஹமத்/நஸாயி இந்த ஹதீஸ் இவ்விருவரும் நோன்பை விடலாம் என்பதற்கான ஆதாரமாகும் என்றாலும் இவர்கள் விட்ட நோன்பை கலா செய்ய வேண்டுமா? என்று நபிகளாரை தொட்டும் எந்த தகவலும் வரவில்லை ஆனால் சில அறிஞ்சர்கள் இவ்விருவரும் விட்ட நோன்பை கலா செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்கள் அதற்கான அவர்களின் வாதங்களை நாம் இங்கே பாப்போம்.     
அல்லாஹ் கூறுகின்றான் ""உங்களில் யார் நோயாளியாக அல்லது பிராணியாக இருக்கின்றாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு பிடித்துக்கொள்ளட்டும்  
{அல் குர்ஆன்2:184}    கற்பமான,பாலூட்டும் தாய்மாரும்  

மேலே நான் குறிப்பிட்ட வசனத்தில் அல்லாஹ் பிரயாணி நோன்பை வேறு நாட்களில் பிடிக்குமாறு கூறி இருப்பதால் அதை ஒத்து கியாஸ் முறைப்படி இவ்விருவரும் கலா செய்ய வேண்டும் என்று வாதிடுகின்றனர் அதற்கான இன்னுமொரு காரணம் மேலே நான் குறிப்பிட்ட ஹதீஸில் நபிகளார் பிரயாணி ,கற்பமூர்றவர்,பாலூட்டுகின்றவர், என மூன்று போரையும் இணைத்து கூறி இருப்பதால் பிராணியை வேறு நாட்களில் நோன்பு பிடிக்குமாறு அல்லாஹ் கூறுவதால் இவ்விருவருக்கும் அதே சட்டம் தான் பொருந்தும் என்று வாதம் வைக்கப்படுகின்றது ஆனால் இது தவறான வாதமாகும் நபிகளார் நோன்பை விடுகின்ற சந்தர்பத்தில் இவ்விருவரையும் பிரயாநியுடன் இணைத்து கூறி இருக்கின்றார் ஆனால் நோன்பை கலா செய்கின்ற விடயத்தில் அல்லாஹ் இவ்விருவரையும் பற்றி குறிப்பிடாமல் பிரயானியுடன் கூடுதலாக நோயாளியை இணைத்து கூறுகின்றான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நோயாளியு பிரயாணியும் நோன்பை விடுவதற்கான காரணம் இருக்கின்றது ஆனால் கர்ப்பிணியும் பாலூட்டும் பெண்ணும் நோன்பை விடுவதற்கான காரணம் அவ்விருவரை போன்ற உடல் நிலை காரணமில்லை மாறாக பாலூட்டும் தாய் கையில் தவழும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காவும் கட்பினித்தாய் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காவும் நோன்பை விடுகின்றனர் அதனால் இவ்விருவருக்கும் பிரயாணியின் சட்டமும் நோயாளியின் சட்டமும் பொருந்தாது இவ்விருவரும் நோன்பை விடுவார்கள் என்று தெளிவாக ஹதீஸில் உள்ளது.

ஆனால் இவர்கள் விட்ட நோன்பை கலா செய்ய வேண்டும் என்று நபிகளாரை தொட்டும் எந்த தகவலும் வரவில்லை ஆதாரம் இல்லாமல் இஸ்லாத்தின் பெயரால் சட்டம் இயற்றுவது பெரும் குற்றமாகும்.


இன்னும் சில அறிஞ்சர்கள் இவ்வுருவரும் விட்ட நோன்புக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று கூறுகின்றனர் இந்த முறையில் இப்னு அப்பாஸ் {ரலி} இப்னு உமர் {ரலி} தீர்ப்பு வழங்கி உள்ளார்கள் என்று வாதிடுகின்றனர் அதற்கு ஆதாரமாக சூரா பகராவின் 184வது வசனத்தை முன்வைக்கின்றார்கள். ""அதற்கு சக்தி பெற்றவர்கள் ஒரு மிஸ்கீனுக்கு உணவளிப்பது பரிகாரமாகும்"" இவ்வாசனம் நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்த விரும்பியவர் நோன்பு நோற்கலாம் விரும்பியவர் நோன்பை விட்டு விட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்ற சட்டத்தை குறிப்பிடும் வசனமாகும் .


பின்னர் இந்த சட்டம் முழுமையாக மாற்றப்பட்டு விட்டது இப்னு அப்பாஸ் {ரலி} அவர்கள் இவ்வசனத்தின் அடிப்படையில் தான் இறுதிவரை செயல்பட்டு வந்தார்கள் என்ற தகவல்களை புகாரியில் நாம் பெற்றுக்கொள்ள முடியும் அவர்கள் கூறுகின்றார்கள் இவ்வசனம் முழுமையாக மாற்றப்பட வில்லை வயோதிபார்களும் பாலூட்டும் தாய்மாரும் கட்பினிகளும் ஒரு ஏழைக்கு விடுகின்ற நோன்புக்கு குற்றப்பரிகாரமாக உணவளிக்க வேண்டும் இது இப்னு அப்பாஸ் [ரலி} அவர்களின் சுய விளக்கமாகும்.


ஆனால் இப்னு உமர் {ரலி} சலமத் இப்னு அக்வா {ரலி} இன்னும் பல சஹாபாக்கள் கூறுகின்றார்கள் (அதற்கு சக்தி பெற்றவர்கள் ஒரு மிஸ்கீனுக்கு உணவளிப்பது பரிகாரமாகும்) என்ற வசனத்தை சூரா பகராவின் 185வது வசனம் (உங்களில் யார் ரமழான் மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்) என்ற வசனம் முழுமையாக மாற்றி விட்டது மாற்றி விட்டது என்று கூறுகின்றார்கள் {புகாரி} 


அதாவது யாருக்கு நோன்பு பிடிக்க சக்தி உள்ளதோ அவர் நோன்பு நோர்கதான் வேண்டும் ஆகாரம் வழங்குவது செல்லுபடி அற்றது என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் தெளிவு படுத்துகின்றான் ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மாத்திரம் மற்ற மூத்த சகஹாபாக்களின் கருத்துக்கு மாற்றமாக நான் மேலே சொன்ன கருத்தில் இருந்துள்ளார் இப்னு அப்பாஸ் ரலியின் இக்கருத்து இவ்வசனம் இறங்கிய சந்தர்பத்தில் அவர் சிறு பிள்ளையாக இருந்த காரணத்தாலும் இந்த குரான் வசனத்தை நடை முறைபடுத்திய மற்ற மூத்த நபித்தோழர்கள் இவருக்கு மாற்றமாக கூறுவதாலும் ஏற்றுகொள்ள முடியாத கருத்தாகும்.

இவ்வாறு உணவளிக்க வேண்டும் என நபி {ஸல்} அவர்கள் நமக்கு வழிகாட்ட வில்லை மாறாக இது அவர்களின் சுய தீர்ப்பாகும் நபித்தோழர்களின் சுய தீர்ப்பு மார்கமாகது என்பதை நாம் அறிந்து வைத்துல்ளோம் எனவே பாலூட்டும் தாய்மாரும் கர்பிணிகளும் விட்ட நோன்பை கலா செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியதாக தகவல் இல்லாத ஒன்றை நாம் கடமை என்ற அளவுக்கு ஆக்குவது மாபெரும் குற்றமாகும். அல்லாஹ் மார்கத்தை இலகுவாக்கி வைத்துள்ளான் நாம் அதிலே இல்லாதவைகளை உண்டாக்கி கடினமாக்கி விட முற்பட கூடாது
கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் இவ்வாறான ஒரு சட்டத்தை நாம் கடமையாக்கினால் அவர்கள் பல சுமைகளுக்கு உள்ளாகுவார்கள் உதாரணமாக ஒரு பெண் கற்பமானதிளிருந்து பாலூட்டு காலம் வரை மூன்று ரமழான்களின் நோன்பை விடுகின்றாள் என்றுவைத்து கொள்ளுங்கள்
மூன்று வருடங்களின் பின் அவள் மீண்டும் மறு குழந்தைக்கு தயாராகுவால் மீண்டும் கற்பமாவால் மீண்டும் மூன்று வருடத்தின் நோன்பை விட நேரிடும் இவ்வாறே சிலர் விட்டு விட்டு தொடர்ச்சியாக ஐந்து பிள்ளைகள் வரை பெற்றெடுப்பார்கள் இன்னும் சிலர் இதை விட அதிகமான குழந்தைகளை பெற்றெடுப்பார்கள்.
இப்பொது சிந்தியுங்கள் சகோதரர்களே விட்ட நோன்பை இவர்கள் கலா செய்ய வேண்டும் என்று நேரடியாக ஆதாரம் இல்லாமல் கடமையாக்கும் போதுஅது எவ்வளவு பெரிய சுமையாகவும் பாரமாகவும் அது மாறிவிடும்? ஐந்து பிள்ளைகளுக்கு தாயானவள் 15 ரமழான் மாதங்களின் நோன்பை கலா செய்ய வேண்டிய சுமை அவ்வாறே பத்து பில்ழைக்கு தாயானவள் முப்பது மாதங்களின் நோன்பை கலா செய்ய வேண்டிய நிலை ஏற்படும் இவ்வாறு பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கலா நோன்பின் காலங்கள் கூடிக்கொண்டே போகும். இது மாத்திரமா? தனது கணவனுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் வேறு மனைவிமாருக்கு இருக்கும் இப்படி எந்த ஆதாரமும் இல்லாத ஒரு சட்டத்தை பெண்கள் மீது சுமத்துகின்றவர்கள் அல்லாஹ்வை பயந்துகொல்லுங்கள்.
அலாஹ் கூறுகின்றான் மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். {அல் குர்ஆன்5:48}
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.   {அல் குரான்:33:36}
எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் நோன்பில் வழங்கி இருக்கும் சலுகையை நாமும் வழங்க வேண்டும் அவர்கள் நோன்பு நோற்பது கடமை இல்லை என நபிகளார் தெளிவாகவே கூறி உள்ளார்கள் இதிலே மாற்று கருத்து கூறுவோர் நான் மேலே முன்வைத்த அல் குரானின் வசனத்தை நன்கு படித்து வஹியை மாத்திரம் பின்பற்றி நாளை மறுமையில் வெற்றி பெரும் கூட்டத்தில் சேர முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன்...!
                                                                                                                  மொளவி அன்சார் தப்லீகி 

அல்லாஹ் இந்த உலகத்தில் பல கோடி படைப்புகளைப் படைத்து, அந்த படைப்புகளை காலத்திற்கும், நேரத்திற்கும், ஏற்ப அல்லாஹ் வெளியாக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வால் படைக்கப்பட்டு மறைக்கப்பட்ட படைப்புகளில் முக்கியமானதொரு படைப்பு தான் இந்த யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டமாகும்.  
இந்த யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டங்கள் எங்குள்ளார்கள்? இவர்களை நேரடியாக கண்டவர்கள் யார்? இவர்கள் எப்போது வெளி வருவார்கள் என்பதை குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவுப் படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
யார் இந்த துல்கர்னைன்…
துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புக்காரர் அல்லது இரட்டை மணிமுடியார் என்பதாகும். ரோம், பாரசீகத்தை ஆட்சி செய்ததினால் இரட்டை மணிமுடியார் என்றும் அல்லது அவரது தலை கவசத்தில் இரண்டு கொம்புகள் போன்ற அமைப்பு இருந்ததால் இரண்டு கொம்புக்காரர் என்றும் அழைக்கப்படுவதாகவும், இன்னும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவர் ஓர் நல்ல இறையடியாராகவும், மேலும் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவராகவும் காணப்பட்டார். இவரின் இயற்பெயர் இஸ்கந்தர் என்றும், இவர் இப்றாஹீம் நபியின் காலத்தில் மன்னராக திகழ்ந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. (பார்க்க தப்ஸீர் இப்னு கஸீர்)
துல்கர்னும்,யஃஜூஜ், மஃஜூஜூம்…
துல்கர்ன் ஆட்சி காலத்தில் மலையடிவாரத்தில் இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் காணப்பட்டதாகவும், அவர்கள் பேசும் பாஷை புரியவில்லை என்றும் அவர்கள் மக்கள் நடமாட்டத்திற்கு இடையூறு செய்வதாகவும் அன்றைய மக்கள் துல்கர்னைன் மன்னனிடம் எடுத்து கூறி, மேலும் நாங்கள் எங்கள்  பொருளாதாரத்தை தருகிறோம் இந்த (யஃஜூஜ், மஃஜூஜ்) கூட்டத்தை ஏதாவது செய்யுங்கள் என்று மக்கள் வேண்டிய போது, அல்லாஹ் எனக்கு நிறைய பொருளாதாரத்தை தந்துள்ளான். என்றாலும் உங்கள் உடல் ரீதியான  ஒத்துழைப்பை தாருங்கள் என்று மக்களிடம் மன்னன் கூறி விட்டு, இரும்பு பாலங்களை தூக்கி வாருங்கள் என்று துல்கர்னைன் கட்டளையிட்டார்.

அதன் பின் யஃஜூஜ், மஃஜூஜ் இருந்த மலையடிவாரத்திற்கு மக்களோடு  துல்கர்னைன் சென்றார். தூக்கி கொண்டு போயிருந்த இரும்பு பாலங்களை  இரண்டு மலைகளுக்கு இடையில் அடுக்க சொல்லி, அதன் பிறகு அந்த இரும்பின் மீது நெருப்பை மூட்டச் சொன்னார். அதன் பிறகு உருக்கிய செம்பை அந்த எறிக்கப்பட்ட இரும்பின் மீது துல்கர்னைன் ஊற்றினார். இனிமேல் இவர்கள் உங்களுக்கு எந்த இடையூறும் தரமுடியாது, அல்லாஹ் என்றைக்கு நாடுகிறானோ அன்றைக்கு இந்த மலையை உடைத்து விட்டு வெளியேறுவார்கள் என்று துல்கர்னைன் சொன்ன இந்த சம்பவத்தை பின் வரும் குர்ஆன் வசனங்களின் மூலம் காணலாம்.
…“முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்த போது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார். ‘துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?” என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். ‘என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு உதவுங்கள்!  உங்களுக்கும், அவர்களுக்குமிடையே தடுப்பை அமைக்கிறேன்”  என்றார்.  (தனது பணியாளர்களி டம்) ‘என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!” என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது ‘ஊதுங்கள்!” என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். ‘என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்” என்றார். அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது  என்றார். அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.  (அல்குர்ஆன் 18:94-99)
எனவே எப்படி தஜ்ஜால் படைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளானோ, அது போல யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டமும் படைக்கப்பட்டு இரண்டு மலைகளுக்கு இடையில் அடைக்கப்பட்டுள்ளனர். யாராலும் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அந்த குறிப்பிட்ட நாள் வரைக்கும் மறைக்கப்பட்டுள்ளனர். அந்த நாள் வந்து விட்டால் வெள்ளம் பாய்ந்து வருவதைப் போல பல திசையின் பக்கம் விரைந்து வருவார்கள் என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்கிறது.
“இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.   (அல்குர்ஆன் 21:96)
நபியவர்களின் எச்சரிக்கை…
“நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் பதற்றத்துடன் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடு தான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப் பட்டுள்ளது” என்று கூறியபடி வெளியேறினார்கள். (“இந்த அளவுக்கு” என்று கூறியபோது) பெருவிரலையும் அதற்கு அடுத்துள்ள (சுட்டு) விரலையும் வளையமிட்டுக் காட்டினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்; தீமை பெருத்துவிட்டால்” என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 5521)
ஈஸா நபியும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டமும்…
உலக அழிவுக்கு முன்னால் முக்கியமான பத்து அடையாளங்கள் நடக்க உள்ளன. அவற்றில் ஒன்று ஈஸா நபியின் வருகையும், இரண்டாவது யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டமுமாகும். ஈஸா நபியன் வருகைக்குப் பின் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டம் வருகிறது. அந்த சம்பவத்தை நபியவர்கள் பின் வருமாறு எடுத்துக் காட்டுகிறார்கள்.
பின்னர், அல்லாஹ் “யஃஜூஜ்” “மஃஜூஜ்” கூட்டத்தாரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாகக் கீழே இறங்கி வருவார்கள். அவர்களில் முதல் அணியினர் (ஜோர்தானில் உள்ள) “தபரிய்யா” ஏரியைக் கடந்து செல்லும்போது, அதிலுள்ள மொத்த நீரையும் குடித்துவிடுவார்கள். அவர்களின் இறுதி அணியினர் அதைக் கடந்து செல்லும்போது. “முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும்” என்று பேசிக்கொள்வார்கள். 

பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (“தூர்” மலையில்) முற்றுகையிடப்படுவார்கள். அப்போது (ஏற்படும் பட்டினியால்) அவர்களில் ஒருவருக்குக் காளை மாட்டின் தலை கிடைப்பது, இன்று உங்களில் ஒருவருக்கு நூறு பொற்காசுகள் கிடைப்பதைவிடச் சிறந்ததாக இருக்கும். பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (அல்லாஹ்விடம் உதவி கேட்டுப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் பிடரிகளில் புழுக்களை அல்லாஹ் அனுப்புவான். அதனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பலியாவார்கள். 

பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும்  (மலையிலிருந்து) தரைக்கு இறங்கி வருவார்கள். அப்போது பூமியின் எந்தவொரு சாண் அளவு இடமும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் (சடலங்களிலிருந்து வெளிவரும்) கொழுப்பாலும் துர்நாற்றத்தாலும் நிரம்பியிருப்பதையே  காண்பார்கள். உடனே இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் அல்லாஹ்விடம் (அவற்றை அகற்றக்கோரிப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துகளைப் போன்று (பெரியதாக உள்ள) பறவைகளை அனுப்புவான். அவை அந்தப் பிணங்களைத் தூக்கிச் சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் வீசியெறியும். 

பின்னர் அல்லாஹ் மழை பொழியச் செய்வான். அந்த மழை எந்த மண் வீட்டிலும், எந்த முடிவீட்டிலும் படாமல் இருக்காது. இறுதியில், பூமியைக் கழுவி, கண்ணாடி போன்று (சுத்தமாக) ஆக்கிவிடும். பின்னர் பூமிக்கு, “நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக; உன்னிடமுள்ள வளங்களை மறுபடியும் தருவாயாக” என்று உத்தரவு பிறப்பிக்கப்படும். அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரேயொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தொலி அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். 

எந்த அளவுக்கென்றால், பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே  போதுமானதாயிருக்கும். பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமானதாயிருக்கும். இந்நிலையில், அல்லாஹ் தூய காற்று ஒன்றை அனுப்புவான். அது அவர்களின் அக்குள்களுக்குக் கீழே நுழைந்து அவர்களைப் பிடித்துக்கொள்ளும். 

இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும். அதையடுத்து மக்களில் தீயவர்கள் (மட்டுமே பூமியில்) எஞ்சியிருப்பார்கள். அவர்கள் கழுதைகளைப் போன்று (வெட்ட வெளியில் வைத்துப் பகிரங்கமாக) உடலுறவு கொள்வார்கள். அவர்கள்மீதுதான் உலக முடிவு நாள் ஏற்படும். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (முஸ்லிம் 5629)
மேலும் “யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறுவார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
இந்தக் கூட்டத்தினர் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சில  விபரங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும், (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்:  காலித் பின் அப்துல்லாஹ், (நூல்: அஹ்மத்)
இந்தக் கூட்டத்தினர் தனியான இனத்தவர் அன்று. ஆதம் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றியவர்களே என்பதைப் பின்வரும் நபிமொழி அறிவிக்கின்றது.
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப் பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), (நூல்: தப்ரானி)
ஒவ்வொருவரும் ஆயிரம் சந்ததிகளைப் பெற்றெடுப்பார்கள் என்பதிலிருந்து அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கும் என்று கருத முடிகின்றது. யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கும் என்பதை நபிகள் நாயகத்தின் பொன்மொழியிலிருந்து அறிய முடிகின்றது.
…உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (புகாரி 3348)
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் அழிக்கப்பட்ட பின் முஸ்லிம்கள் ஹஜ்ஜும் உம்ராவும் செய்வார்கள். ஹஜ் செய்வோர் யாரும் இல்லை என்ற நிலையில் தான் யுக முடிவு நாள் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (புகாரி 1593)

முக்கிய குறிப்பு:
ஷாபி மத்ஹபினர் இந்த யஃஜூஜ், மஃஜூஜ் சம்பந்தமாக ஒரு கதையை இட்டிக் கட்டி சொல்வார்கள். அதாவது இந்த யஃஜூஜ்,மஃஜூஜ் கூட்டத்தினர் அடைக்கப்பட்ட மலைக்குள் இருந்து கொண்டு அந்த மலையை நாக்கால் நக்கிக் கொண்டே வருவார்கள். ஷாபி மத்ஹபினர் சுப்ஹூ தொழுகையில் குனூத் ஓதும் போது அந்த மலை பழைய நிலைமைக்கு போய் விடும், இப்படியே ஒவ்வொரு  நாளும் நடக்கும்.   

 என்றைக்கு ஷாபி மத்ஹபினர் குனூத் ஓத  மறக்கின்றார்களோ அன்றைக்கு அந்த மலையை உடைத்துக் கொண்டு வெளியேறுவார்கள் என்று கதையை கட்டி வைத்துள்ளார்கள் அப்படி ஒரு செய்தியை அல்லாஹ்வோ, நபியவர்களோ சொல்லவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் இன்னும் சிலர் இந்த யஃஜூஜ்,மஃஜூஜ் கூட்டம் கத்திரிக்கா அளவில் குட்டை, குட்டையாக இருப்பார்கள் என்றும் கதை அளந்து வைத்துள்ளார்கள். இதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.


                                                                        அஷ்ஷேஹ் யூனுஸ் தப்ரீஸ்


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget