July 2017

நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது வலப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு தமது இடப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு சலாம் கூறியதை நான் கண்டேன்.



உலகத்தில் மிகச் சிறந்த செல்வம் பிள்ளைச் செல்வம் என்பார்கள். திருமணம் முடித்தவுடன் அடுத்ததாக தங்களுக்கு பிள்ளைகள் வேண்டும் என்று அனைத்து தம்பதியினரும் எதிர்பார்ப்பார்கள்.இதில் யாரும் விதிவிலக்கல்ல, ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுப்பது எப்படி கஷ்டமோ, அதை விட அவர்களை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது கஷ்டமாகும்.

பெற்றோர்கள் நல்லவர்களாகவும், சரியான வழிக்காட்டிகளாகவும் இருந்தால் பிள்ளைகளும் சரியான முறையில் வளர்ந்து வருவார்கள்.பெற்றோர்கள் கவனயீனமாக இருந்தால் பிள்ளைகள் பல வழிகளில் வழி தவறி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஒவ்வொரு பிள்ளைகளும் இயற்கை (இஸ்லாம்) மார்க்கத்தில் பிறக்கின்றன. அவர்களை பெற்றோர்கள் தான் திசை திருப்புகிறார்கள் என்பது இஸ்லாம் கூறும் அடிப்படை கொள்கையாகும்.

மூஸா நபியுடன் கிள்ர் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூசா (அலை) அவர்கள் தம் பனூ இஸ்ரா யீல் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளையும் சோதனைகளையும் நினைவூட்டி அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது "இந்தப் பூமியில் என்னைவிடச் "சிறந்த" அல்லது "நன்கறிந்த" மனிதர் வேறெவரும் இல்லை" என்று கூறினார்கள். 



அப்போது அல்லாஹ், "உம்மைவிடச் சிறந்தவரை, அல்லது உம்மை விட அதிக ஞானம் உள்ளவரை நான் அறிவேன்" என அறிவித்தான்; "இந்தப் பூமியில் ஒரு மனிதர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகம் அறிந்தவர்" என்று கூறினான்.  மூசா (அலை) அவர்கள் "இறைவா! அவரை எனக்கு அறிவித்துக்கொடு" என்று கேட்டார்கள். அப்போது அவர்களிடம், "உப்பிட்ட மீனொன்றைப் பயண உணவாக எடுத்துக்கொண்டு கடலோரமாகச் செல்வீராக. அந்த மீனை எந்த இடத்தில் நீங்கள் தவறவிடுவீர்களோ அங்கு அவர் இருப்பார்" என்று கூறப்பட்டது.

அவ்வாறே மூசா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளரும் (கடலோரமாக) நடந்து சென்று அந்தப் பாறையை அடைந்தனர். மூசா (அலை) அவர்கள் பாதை மாறி தம் உதவியாளரை விட்டுச் சென்றுவிட்டார்கள்.
அப்போது உதவியாளரின் கூடையிலிருந்த மீன் குதித்துத் தண்ணீரில் விழுந்துவிட்டது. அது சென்ற நீர்த்தடம் இணையாமல் வளையம் போன்று மாறிவிட்டது. அப்போது அவர்களுடைய உதவியாளர், "நான் இறைத்தூதரிடம் சென்று, இதைப் பற்றி தெரிவிக்க வேண்டாமா?" என்று கூறிக்கொண்டு, மூசா (அலை) அவர்களிடம் சென்றார். ஆனால், (அதைக் கூறவிடாமல்) அவருக்கு மறதி ஏற்படுத்தப்பட்டது.

அந்த இடத்தைவிட்டு அவர்கள் இருவரும் கடந்து சென்றதும், மூசா (அலை) அவர்கள் "நமது காலை உணவைக் கொண்டுவாரும்! இந்தப் பயணத்தில் நாம் களைப்படைந்து விட்டோம்" என்று கூறினார்கள். அந்த இடத்தைக் கடக்கும்வரை அவர்கள் இருவருக்கும் களைப்பு ஏற்படவில்லை. அந்த இடத்தைக் கடந்ததும் உதவியாளர் (மீன் தப்பிச் சென்றுவிட்டதைப் பற்றி) நினைத்தார். "கவனித்தீர்களா? நாம் அந்தப் பாறை அருகில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் மறந்து விட்டேன். அதைப் பற்றிக் கூறவிடாமல் ஷைத்தான் என்னை மறக்கவைத்துவிட்டான். அது கடலில் ஆச்சரியமான முறையில் தனது வழித்தடத்தை அமைத்துச் சென்றது" என்று கூறினார்.

மூசா (அலை) அவர்கள், "அதுதான் நாம் தேடிவந்த இடம்" என்று கூறியபடி, தம் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே அவ்விருவரும் திரும்பினர். அப்போது அந்த மீன் குதித்தோடிய இடத்தை உதவியாளர் காண்பித்தார். மூசா (அலை) அவர்கள், "இதுதான் எனக்குச் சொல்லப்பட்ட இடமாகும்" என்று கூறிவிட்டு, அவரைத் தேடிக்கொண்டு சென்றார்கள். அங்கு ஆடையால் போர்த்தியபடி "பிடரியின் மீது" அல்லது "நடுப் பிடரியின் மீது" மல்லாந்து களிர் (அலை) அவர்கள் படுத்திருந்தார்கள். 

மூசா (அலை) அவர்கள் "உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்" என்று சொன்னார்கள். உடனே களிர் அவர்கள் தமது முகத்திலிருந்து ஆடையை விலக்கி "வ அலைக்குமுஸ் ஸலாம்" என்று பதில் சலாம் சொல்லிவிட்டு, "நீங்கள் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) "நான்தான் மூசா" என்றார்கள்.

களிர் அவர்கள், "எந்த மூசா?" என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள், "பனூ இஸ்ராயீல் (சமுதாய மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப் பெற்ற) மூசா" என்று பதிலளித்தார்கள். "எதற்காக வந்துள்ளீர்கள்?" என்று களிர் அவர்கள் கேட்க, "உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக நான் (உங்களிடம்) வந்துள்ளேன்" என்று மூசா (அலை) அவர்கள் கூறினார்கள்.

அதற்கு களிர் (அலை) அவர்கள், "என்னுடன் உங்களால் பொறுமையாக இருக்க இயலாது. உங்களுக்கு ஞானமில்லாத ஒரு விஷயத்தில் உங்களால் எவ்வாறு பொறுமையாக இருக்க முடியும்? எதைச் செய்ய வேண்டுமென எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளதோ அதை நான் செய்வதை நீங்கள் கண்டால், உங்களால் பொறுமையாக இருக்க முடியாது"என்று கூறினார்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாக நீங்கள் காண்பீர்கள். உங்களின் எந்தக் கட்டளைக்கும் நான் மாறுசெய்யமாட்டேன்" என்று கூறினார்கள். "நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வருவதாயிருந்தால், எதைப் பற்றியும் நானாக (விளக்கம்) சொல்லாத வரை அதைப் பற்றி என்னிடம் நீங்கள் (விளக்கம்) கேட்கக் கூடாது" என்று களிர் (அலை) அவர்கள் சொன்னார்கள். 
பிறகு இருவரும் கடலோரமாக நடந்து சென்று ஒரு மரக்கலத்தில் ஏறினர். அப்போது களிர் (அலை) அவர்கள் வேண்டுமென்றே அந்த மரக்கலத்தில் ஓட்டை போட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், "இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா ஓட்டை போடுகிறீர்? நீங்கள் மாபெரும் அபாயமான செயலையன்றோ செய்து விட்டீர்கள்?" என்று களிரிடம் கேட்டார்கள்.
அதற்கு களிர் அவர்கள், "உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று நான் சொல்லவில்லையா?"என்று கேட்டார்கள்.
மூசா (அலை) அவர்கள், "நான் மறந்துவிட்டதை வைத்து என்னைத் தண்டித்துவிடாதீர்கள். என் விஷயத்தில் சிரமத்தைக் கொடுத்துவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.

தொடர்ந்து இருவரும் நடந்தார்கள்; விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைச் சந்தித்தார்கள். உடனே களிர் அவர்கள் யோசிக்காமல் சென்று, அவர்களில் ஒரு சிறுவனைக் கொன்று விட்டார்கள். அதைக் கண்டு மூசா (அலை) அவர்கள்,பெரிதும் திடுக்குற்றார்கள்; வெறுப்படைந்தார்கள். எந்தப் பாவமும் அறியாத, எந்த உயிரையும் கொல்லாத உயிரைக் கொன்றுவிட்டீர்களே? தகாத காரியத்தைச் செய்துவிட்டீர்களே?" என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிகழ்ச்சியைச் சொல்லிக் கொண்டே இந்த இடத்திற்கு வந்தபோது "நம்மீதும் மூசா அவர்கள் மீதும் அல்லாஹ்வின் கருணை பொழியட்டும். மூசா (அலை) அவர்கள் மட்டும் அவசரப்பட்(டுக் கேள்வி கேட்டிருக்காவிட்டால் இன்னும் அரிய விந்தையான பல காட்சிகளைக் கண்டிருப்பார். ஆயினும், (இவ்வாறு கேட்ட) மூசா (அலை) அவர்களை, தம் தோழர் (களிர்) முன்பாக நாணம் கவ்விக்கொண்டது" என்றார்கள்.

மூசா (அலை) அவர்கள் "இதற்குப் பிறகு ஏதேனும் உங்களிடம் நான் கேட்டால் உங்களுடன் என்னைச் சேர்த்துக்கொள்ளாதீர். என்னிடமிருந்து (இரு முறை) சமாதானத்தை ஏற்றுக் கொண்டீர்" என்று கூறினார்கள். மூசா (அலை) அவர்கள் பொறுமையாக இருந்திருந்தால், ஆச்சரியமானவற்றைக் கண்டிருப்பார்கள். -(பொதுவாகவே) நபி (ஸல்) அவர்கள் நபிமார்கள் எவரைப் பற்றியாவது பேச்செடுத்தால் "நம்மீதும் என்னுடைய இன்ன சகோதரர்மீதும் அல்லாஹ்வின் கருணை பொழியட்டும்" என்று முதலில் தமக்காகவும் பிறகு அந்த நபிக்காகவும் பிரார்த்திப்பார்கள்- நம் மீதும் அல்லாஹ்வின் கருணை பொழியட்டும்.

தொடர்ந்து அவர்கள் இருவரும் நடந்து, அற்பக் குணமுடைய ஒரு கிராமவாசிகளிடம் வந்தனர். அந்த மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று உணவு கேட்டுச் சுற்றிவந்தனர். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அப்போது அங்கு விழுந்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த ஒரு சுவரைக் கண்டனர். உடனே களிர் அதைத் தூக்கி நிறுத்தினார்கள். அதைக் கண்ட மூசா (அலை) அவர்கள், "நீர் நினைத்திருந்தால் இதற்குக் கூலியைப் பெற்றிருக்கலாமே?" என்று கூறினார்கள்.

களிர், "இதுவே எனக்கும் உமக்குமிடையே பிரியும் நேரமாகும்" என்று கூறி, மூசாவின் ஆடையைப் பிடித்தார். மேலும்,உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கத்தை உமக்குக் கூறுகிறேன். அந்த மரக்கலம் கடலில் தொழில் செய்யும் ஏழைகள் சிலருக்குரியது..." என்று தொடங்கி, வசனத்தின் (18:79) இறுதிவரை சொல்லிக்காட்டினார்கள்.

அந்த மரக்கலத்தை அபகரித்துக்கொள்பவன் வந்து, ஓட்டையான நிலையில் மரக்கலத்தைக் கண்டால் அதை விட்டுவிடுவான். பிறகு அவர்கள் மூங்கில் கழியால் ஓட்டையை அடைத்து அதைப் பழுது பார்த்துவிடுவார்கள்.
அந்தச் சிறுவனோ, படைக்கும்போதே "இறைமறுப்பாளன்" என (இறைவனால்) தீர்மானிக்கப்பட்டு படைக்கப்பட்டான். அவனுடைய பெற்றோர் அவன்மீது மிகுந்த பாசம் வைத்திருந்தனர். அவன் பருவ வயதை அடைந்தால் அவ்விருவரையும் தவறான வழியிலும் இறைமறுப்பிலும் தள்ளிவிடுவான். (இறைவன் கூறுகிறான்:) "அவ்விருவரின் இறைவன் அவனுக்குப் பதிலாக அவனைவிடச் சிறந்த தூய்மையான நெருங்கி உறவாடக்கூடிய குழந்தையை மாற்றாக வழங்குவான்" என நினைத்தோம்.(18:81)

அந்தச் சுவர், அந்நகரத்தில் உள்ள இரண்டு அநாதைச் சிறுவர்களுக்கு உரியதாகும். அதற்குக் கீழே அவ்விருவருக்கும் உரிய புதையல் இருந்தது என்று அந்த வசனத்தின் (18:82) இறுதிவரை சொல்லிக்காட்டினார்கள்.
இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம் 4744)இந்த செய்தியின் மூலமாக நாம் படிக்கும் பாடம் என்னவென்றால் கல்விக்கு தேவை அதிக பொறுமையும், சகிப்புத்தன்மையுமாகும்.


                                                                                               மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

மறுமையின் முக்கியமான அடையாளமான இந்த தஜ்ஜால் எங்கு இருக்கிறான் என்பதை நபியவர்கள் கூறுவதை கவனியுங்கள்.

“ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ளஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்களின் சகோதரியும், முந்திய முஹாஜிர்களில் ஒருவருமான ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு அறிவியுங்கள். அது (நேரடியாக) நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டதாக இருக்க வேண்டும். பிறர் மூலம் கேட்டதாக இருக்க வேண்டாம்" என்று கேட்டேன்.

அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள், "நீங்கள் விரும்பினால் நிச்சயமாக அவ்வாறே செய்கிறேன்" என்றார்கள். நான் "ஆம் (அவ்வாறுதான் நான் விரும்புகிறேன்); எனக்கு ஹதீஸ் அறிவியுங்கள்" என்றேன். ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் அன்றைய குறைஷி இளைஞர்களில் சிறந்தவர்களில் ஒருவரான முஃகீராவின் புதல்வருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த முதல் போரில் காயப்படுத்தப்பட்ட(வர் ஆவா)ர்.
(அவர் என்னை மணவிலக்குச் செய்து) நான் விதவையாயிருந்தபோது, என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒரு குழுவினர் பெண் கேட்டார்கள். அவர்களில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களும் ஒருவராவார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தம்மால் விடுதலை செய்யப்பட்ட அடிமையின் புதல்வரான உசாமா பின் ஸைத் அவர்களுக்காக என்னைப் பெண் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னை நேசிப்பவர்,உசாமாவையும் நேசிக்கட்டும்" என்று கூறிய செய்தியை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் பேசியபோது, "என் காரியம் உங்கள் கையில் உள்ளது. நீங்கள் நாடியவருக்கு என்னை மணமுடித்து வையுங்கள்" என்று கூறினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ உம்மு ஷரீக்கின் இல்லத்துக்குச் சென்று தங்கி இரு" என்று சொன்னார்கள் - உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் அன்சாரிகளில் வசதி படைத்த பெண்மணியாகவும் அல்லாஹ்வின் பாதையில் பெருமளவில் செலவு செய்யக் கூடியவராகவும் இருந்தார். அவரது இல்லத்தில் விருந்தாளிகள் தங்குவார்கள்.- "அவ்வாறே செய்கிறேன்" என்று நான் கூறினேன்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வேண்டாம்;) அப்படிச் செய்யாதே! உம்மு ஷரீக் ஏராளமான விருந்தாளிகளை உபசரிக்கும் ஒரு பெண்மணி ஆவார். உன் முகத்திரையோ உன் கணைக்காலிலிருந்து ஆடையோ விலகியிருக்க, நீ விரும்பாத சிலவற்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்படுவதை நான் வெறுக்கிறேன். எனவே, நீ உன் தந்தையின் சகோதரரான (அம்ர் - உம்மு மக்தூம் தம்பதியரின் புதல்வரான) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உம்மி மக்தூம் அவர்களின் இல்லத்துக்குச் சென்று தங்கியிரு" என்று கூறினார்கள்.  

(அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உம்மி மக்தூம் குறைஷிக் குலத்திலுள்ள பனூ ஃபிஹ்ர் கிளையைச் சேர்ந்தவர் ஆவார். அந்தக் குடும்பத்தில் ஒருவராக ஃபாத்திமா பின்த் கைஸ் இருந்தார்.) அவ்வாறே நான் அவரது இல்லத்திற்குச் சென்று தங்கினேன். என் காத்திருப்புக் காலம் ("இத்தா") முடிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொது அறிவிப்பாளர்களில் ஒருவர், "கூட்டுத் தொழுகைக்கு வாருங்கள்" என்று அறிவிப்புச் செய்வதை நான் செவியுற்றேன். ஆகவே, நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுகையை நிறைவேற்றினேன்.

அப்போது நான் ஆண்களின் தொழுகை வரிசைக்குப் பின்னால் உள்ள பெண்களின் தொழுகை வரிசையில் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது சிரித்தபடியே அமர்ந்தார்கள். "ஒவ்வொருவரும் தாம் தொழுத இடத்தில் அப்படியே இருங்கள்" என்று கூறினார்கள். பிறகு, "நான் உங்களை ஏன் ஒன்று கூட்டினேன் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்றுகூட்டவில்லை. மாறாக, (மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது (பெருங்குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது. அவர் என்னிடம் கூறினார்: நான் "லக்ம்" , "ஜுதாம்" ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டேன். அப்போது கடல் அலை ஒரு மாதகாலம் எங்களைக் கடலில் அலைக் கழித்துவிட்டது. பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் (மேற்குத்) திசையில் ஒரு தீவில் ஒதுங்கினோம்.

 பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம். அங்கு (உடல் முழுவதும் அடர்ந்த) முடிகள் நிறைந்த ஒரு பிராணி எங்களைச் சந்தித்தது. அதன் முன்பகுதி எது,பின்பகுதி எது என்றே எங்களால் அறிய முடியவில்லை. (உடல் முழுவதும்) முடிகள் நிறைந்திருந்ததே அதற்குக் காரணம்.

அப்போது நாங்கள், "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி "நான்தான் ஜஸ்ஸாஸா"என்று சொன்னது. "ஜஸ்ஸாஸா என்றால் என்ன?" என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி, "கூட்டத்தாரே! இந்த மண்டபத்திற்கு உள்ளே இருக்கும் மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தி அறிய ஆவலாக உள்ளார்" என்று சொன்னது.

அந்தப் பிராணி ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டு அது ஷைத்தானாக இருக்குமோ என்று நாங்கள் பயந்துவிட்டோம். உடனே நாங்கள் அந்த மனிதனை நோக்கி விரைந்து நடந்தோம். நாங்கள் அந்த மண்டபத்தைச் சென்றடைந்தோம். அங்கு மாபெரும் உருவமுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தான். அவனுடைய கைகள் அவனது தோளோடு சேர்த்து வைத்து இறுகக்கட்டப்பட்டிருந்தன. அவனுடைய முழங்கால்கள் கணுக்கால்களோடு சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. அவனிடம் நாங்கள், "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம்.

"என்னைப் பற்றிய தகவலை நிச்சயம் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். (முதலில்) நீங்கள் யார் என்று கூறுங்கள்?" என்று கேட்டான். "நாங்கள் அரபு மக்கள். நாங்கள் கப்பலொன்றில் கடல் பயணம் மேற்கொண்டோம். கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஒரு மாதகாலமாகக் கடல் அலை எங்களை அலைக்கழித்துவிட்டது. பிறகு நீயிருக்கும் இந்தத் தீவில் நாங்கள் கரை ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து இந்தத் தீவுக்குள் நுழைந்தோம்.

அப்போது உடல் முழுவதும் அடர்ந்த முடிகள் கொண்ட பிராணி ஒன்று எங்களைச் சந்தித்தது. உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருந்த காரணத்தால் அதன் முன்பகுதி எது, பின்பகுதி எது என்று அறிய முடியவில்லை. நாங்கள் "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம். அது "நான்தான் ஜஸ்ஸாஸா" என்று சொன்னது. "ஜஸ்ஸாஸா என்றால் என்ன?" என்று கேட்டோம். அதற்கு அது, "இந்த மண்டபத்திலுள்ள இந்த மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தியை அறிய பெரும் ஆவலுடன் இருக்கிறார்" என்று கூறியது. 

ஆகவேதான், நாங்கள் உன்னை நோக்கி விரைந்து வந்தோம். அது ஷைத்தானாக இருக்கலாம் என்பதால் எங்களால் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை" என்று சொன்னோம். அப்போது அவன், "பைசான் பேரீச்சந்தோட்டத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்றான். "அந்தத் தோட்டத்தில் நீ எதைப் பற்றிக் கேட்கிறாய்?" என்று கேட்டோம்.

அதற்கு அவன், "அந்தப் பேரீச்சந்தோட்டத்தின் மரங்கள் கனிகள் தருகின்றனவா என்பதைப் பற்றியே நான் கேட்கிறேன்" என்றான். நாங்கள் "ஆம்" என்று பதிலளித்தோம். அவன், "அறிந்துகொள்ளுங்கள். அது கனியே தராத காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது" என்று கூறினான். பிறகு "தபரிய்யா நீர்நிலை பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். "அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்? "என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவன், "அதில் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டான். 

நாங்கள், "அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது" என்று பதிலளித்தோம். அவன், "அறிந்துகொள்ளுங்கள்: அதிலுள்ள நீர் வற்றும் காலம் நெருங்கிவிட்டது" என்று சொன்னான். பிறகு, "(ஷாம் நாட்டிலுள்ள) ஸுஃகர் நீரூற்றைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். நாங்கள், "அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?" என்றோம். அதற்கு அவன், "அந்த ஊற்றில் தண்ணீர் உள்ளதா? அந்த ஊற்றுத் தண்ணீரால் மக்கள் பயிர் செய்கிறார்களா?" என்று கேட்டான். 

நாங்கள் "ஆம், அதில் தண்ணீர் அதிகமாக உள்ளது. அங்குள்ளவர்கள் அந்தத் தண்ணீரால் விவசாயம் செய்கிறார்கள்" என்று சொன்னோம். பிறகு அவன், "எழுத்தறிவற்ற மக்களின் இறைத்தூதர் பற்றி எனக்குச் சொல்லுங்கள். அவர் (இப்போது) என்ன செய்கிறார்?" என்று கேட்டான். நாங்கள், "அவர் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்று யஸ்ரிபில் (மதீனாவில்) தங்கியிருக்கிறார்" என்று பதிலளித்தோம்.

அவன், "அவருக்கும் அரபியருக்குமிடையே போர் நடந்ததா?" என்று கேட்டான். நாங்கள், "ஆம்" என்றோம். அவன், "அவர்களை அவர் என்ன செய்தார்?" என்று கேட்டான். நாங்கள், "அவர், தம் அருகிலுள்ள அரபியரை வெற்றி கொண்டுவிட்டார். அரபியர் அவருக்குக் கட்டுப்பட்டு விட்டனர்" என்று சொன்னோம். அதற்கு அவன், "அப்படித்தான் நடந்ததா?" என்று கேட்டான். நாங்கள் "ஆம்" என்றோம்..

அவன், "அறிந்துகொள்ளுங்கள். அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும். (இனி) நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்: நான்தான் மசீஹ் (அத்தஜ்ஜால்) ஆவேன். நான் (இங்கிருந்து) புறப்பட அனுமதிக்கப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நான் புறப்பட்டு வந்து, நாற்பது நாட்களில் பூமியில் எந்த ஓர் ஊரையும் விட்டுவைக்காமல் பூமியெங்கும் பயணம் செய்வேன்; மக்காவையும் தைபாவையும் தவிர! அவ்விரண்டிற் குள்ளேயும் நுழைவது எனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அவ்விரு நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நுழைய நான் நாடும்போதெல்லாம் என்னை நோக்கி வானவர் ஒருவர் வருவார். அவரது கையில் உருவியவாள் இருக்கும். (அதை வைத்து) அதற்குள் நுழைய விடாமல் அவர் என்னைத் தடுத்துவிடுவார். அதன் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர் ஒருவர் இருந்து, அதைக் காவல் காத்துக்கொண்டிருப்பார்" என்று கூறினான்.

இதைக் கூறியபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்மிடமிருந்த கைத்தடியால் சொற்பொழிவு மேடைமீது குத்தியவாறு இது -அதாவது மதீனா நகரம்-தான் தைபா; இதுதான் தைபா; இதுதான் தைபா" என்று கூறிவிட்டு, "இதைப்பற்றி நான் உங்களுக்கு (முன்பே) அறிவித்துள்ளேன் அல்லவா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம் (அறிவித்தீர்கள்)" என்று பதிலளித்தனர். "தமீமுத் தாரீ சொன்ன இந்தச் செய்தி, தஜ்ஜாலைப் பற்றியும் மதீனா மற்றும் மக்கா பற்றியும் நான் ஏற்கெனவே உங்களிடம் நான் கூறியிருந்ததற்கு ஒப்பவே அமைந்திருக்கிறது" என்று கூறினார்கள்.

பிறகு அறிந்துகொள்ளுங்கள்: அந்தத் தீவானது, ஷாம் நாட்டுக் கடலில், அல்லது யமன் நாட்டுக் கடலில் உள்ளது. இல்லை; அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதி கடலில் உள்ளது" என்று (அறுதியிட்டுச்) சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறும்போது கிழக்குத் திசையை நோக்கி தமது கரத்தால் சைகை செய்தார்கள். ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே மனனமிட்டேன். (முஸ்லிம் 5638)

                                                                                      மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

பல சிறைச்சாலைகள் பல வருடங்களாக விசாரணை கைதிகளாகவெ இருக்கின்றவர்களும் உண்டு , அவர்களின் வழக்குகள் காலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டும் உள்ளது. இதுவும் அநீதியாகாதா?
இது போன்ற விஷயங்கள் தொடருகிற சூழ்நிலையில் இஸ்லாம் சொல்லும் மகத்தான தீர்வு என்ன?
“ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனாகிய கொலையுண்டவனின் வாரிசுகளால் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் – இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு” அல்குர்ஆன் : 2:178
மேற்காணும் வசனங்கள் போன்ற இன்னும் சில வசனங்கள் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதை மேலோட்டமாக காணும் சிலர் மனிதாபிமானவை அல்ல, கொடுரமானது என நினைப்பர். ஆனால் உள்நோக்கமில்லாமல் நடுநிலையாக யோசிக்கின்ற எவரும் இது மனித சமூகத்திற்கு நன்மையானது என விளங்குவர், துக்குத்தண்டனை கூடாது என வாதிடுபவர்களோ போன உயிர் மீண்டும் வருமா? என்ற வார்த்தையை முன்வைக்கின்றனர்.

இதே கண்ணோட்டத்தில் நாம் பார்த்தால் கற்பழித்தவனுக்கு துக்குத்தண்டனை கொடுப்பதால் கற்பு மீண்டும் வருவதில்லை, இழந்ததை மீட்பது பாதிக்கப்பட்டவனுக்கு நோக்கமல்ல, மாறாக அவன் பாதித்த காரியத்தில் அவனுக்கு மன அமைதிபெறவும், பிற மக்களுக்கு பாடமாக அமையவும் இஸ்லாம் சொல்லும் நீதமே மகத்தான தீர்வாகும்.
இந்த சட்டத்தின் நோக்கம் குற்றவாளி தப்பித்துச்செல்ல கூடாது, தண்டனை பெற வேண்டும் என்பதே! ஆனால் தவறை முறையாக நிருபிக்காமல் அப்சல் குரு, கசாப் போன்றவர்களை துக்குத்தண்டனை கொடுக்கிறோம் என்று அவசர அவசரத்தோடு அநீதமாக தண்டனை நிறைவேற்றுவதும் கண்டிக்கத்தக்கது.
இஸ்லாம் சொல்லுகிற அடிப்படையில் தண்டனை நிறைவேற்றுவதை பார்க்கும் எவரும் தவறு செய்ய துணிய மாட்டார். தவறு செய்தவன் மீண்டும் அந்த தவறை செய்ய முடிவதில்லை அல்லது அச்சம் ஏற்படுகிறது.
சுதந்திரமானவனாலும், அடிமையானாலும், பெண்ணானாலும் சரி கொலை செய்தவனை பழி வாங்குவது கூடும். சகோதரனாகிய கொலையுண்டவனின் வாரிசுகளால் மன்னிக்கப்படுமானால் இதற்காக நிர்ணயிக்கப் பெறும் நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்த வேண்டும். மாறாக ஒருவன் மீது குற்றம் நிருபிக்கப்பட்டு கால சூழல், எதிரான பொய் சாட்சிகளை ஆதாரம் காட்டி திசை திருப்ப முடியாது. இஸ்லாம் சொல்லும் தீர்வின் மூலம் எளிதாகவும், விரைவாகவும் முடிவு காண முடியும்.
எல்லா இடங்களிலும் சிறைச்சாலைகளை அதிகப்படுத்தி, சொகுசு திட்டத்தோடு குற்றாவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கூடாது என்று முடிவெடுத்தால் குற்றங்களை எங்கணம் குறைப்பது? உச்சநீதிமன்றமே தவறை உண்மைபடுத்தி அதே உச்சநீதிமன்றமே துக்குத்தண்டனையை நிறுத்தி, ஆயுள் தண்டனையாக குறாத்து விடுதலையும் செய்கின்றது. குற்றவாளி தண்டனை பெறாத போது அந்த குற்றவாளிக்கு வாழ்த்துகளும் குவிகின்றது. இந்த நிலைபாடு குற்றம் செய்வதற்கு வழிவாசல்களை திறந்து தான் வைக்கின்றன.
இஸ்லாம் சொல்லும் குற்றவியல் தண்டனைச் சட்டம் நிறைவேற்ற படவில்லையென்றால்
  • பதினைந்து இருபது வருடங்கள் அரசாங்க செலவில் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறான்
  • ஒரு நபரை கொலை செய்தவன், பத்து கொலைகளை துணிச்சலோடு செய்கிறான், நாளிதழில் “10 கொலை செய்தவன் கைது” என்று தலைப்புச்செய்தி வருகிறது, (10 கொலையும் ஒரே நேரத்தில் செய்யவில்லை).
  • அடைக்கப்படும் சிறைகளில் பல காலம் தங்குவதால் கூட்டாக திட்டமிட்டு வெளியே வந்து மேலும் பல தவறுகளை செய்கிறான்.
  • மூன்று வேளை உணவு, ஆடை, உறக்கம் இதுபோல எண்ணற்ற வசதிகள் குற்றவாளிகளுக்கு செய்யப்படுகிறது.
  • மருத்துவ வசதி, பொழுதுபோக்கு இப்படி இருக்கும் போது “35 முறை சிறைச்சென்றவர் மீண்டும் கைது” என்கிற வாசகம் ஏன் நாளிதழில் இடம்பெறாது?
  • சில மாதங்களோ, வருடங்களோ தான் தண்டனை என்று இருக்கும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணங்கள் சீர் தூக்கி பார்க்கப்படுவதில்லை
  • தண்டனைகள் முறையாக நிறைவேற்றப்படாததால் குற்றவாளி விடுதலை அடைந்த பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ளவர் குற்றவாளியை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும் போதே கொலை செய்து சர்வசாதாரணமாக பாதிக்கப்பட்டவரே குற்றவாளியாக மாறு அவல நிலை நீடிக்கின்றது.
  • இஸ்லாத்தின் தண்டனைச்சட்டங்களை பின்பற்றாத அரசாங்கத்தின் கீழ் உள்ள மக்களின் உயிர்களை, கற்புகளை, உடமைகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலை தான் அரசாங்கத்திற்கு ஏற்படும்.
இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். இதில் வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால் எந்த மக்களிடம் சொத்தையும், கற்பையும் திருடுகிறானோ, எந்த மக்களை கொலை செய்கிறானோ அவர்களின் வரி பணத்திலேயே குற்றவாளிகளின் உடம்புகள் வளர்க்கப்படுகிறது.
அவர்களுக்காக அவர்களுடைய வேதமாகிய தவ்றாத்தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: “உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயத்திற்கும் (காயமாக) நிச்சயமாக பழிவாங்கப்படும்” என்பதாக. எனினும், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) அறமாக விட்டுவிட்டால் அது அவருடைய தீய செயலுக்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக்கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்! அல்குர்ஆன் : 5:45
அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் : 2:179
இந்த இரண்டு வசனங்களையும் சிந்திக்கும் போது குற்றவாளிகளை தட்டி தடவி கொடுப்பதை விட்டு விட்டு இஸ்லாம் சொல்லுகிற படி தண்டனை நிறைவேற்றப்பட்டால் உலகத்தில் பெருங்குற்றங்கள் சமுதாயத்திலிருந்து விடுபடும்!
                                                                                                            மெளலவி மில்லத் பிர்தௌசி

சமீப காலமாக இலங்கையில் பல இடங்களில் மாற்று மதத்தவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக நாம் செய்யக் கூடிய அமல்களோடு அவர்களின் மதகுருமார்களையும், முக்கியஸ்தர்களையும் அழைத்து அந்நிகழ்சியில் பங்கு பெற வைத்து அழகு பார்க்கிறார்கள்.

பொதுவாக சகல மனிதர்களோடும் சகஜமாக இரண்டரக்கலந்து வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு பல வழிகளில் எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக அந்நியர்களோடு மனிதாபிமானத்துடனும், மனித நேயத்துடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், அவர்களின் கஷ்டங்களையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் மிக தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
பிறர் நலன் பேணும் விசயத்தில் ஒவ்வொரு இறை விசுவாசியும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

அதே நேரம் கொள்கை (மார்க்கம் ) என்று வரும் போது தன்னைப் பெற்ற தாயாக இருந்தாலும் கொள்கைக்கு மாற்றமாக அடிபணிய தாய் கட்டளையிட்டாலும் அதற்கு செவிசாய்க்க முடியாது.  உலகத்தில் தாயை உச்சக்கட்டத்தில் வைத்து கண்ணியப்படுத்தும் அல்லாஹ் அதே தாய் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஏதாவது ஒரு செயல்பாடுகளில் பிள்ளைகளுக்கு கட்டளை இட்டால் அப்போது அந்த விசயத்தில் தாய்க்கு கட்டுப்படக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான் என்றால், யாரை திருப்திபடுத்த இந்த இரட்டை வேடங்கள் இன்று இலங்கையில் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.? 

பின்வரும் குர்ஆன் வசனத்தை நிதானமாக சிந்தியுங்கள். “நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்து போதித்தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்தலில் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” 31:15

ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.(31- 14, 15)

இன்று சகவாழ்வு சமத்துவம் ஒற்றுமை போன்ற சில காரணங்களை காட்டி நமது கண்ணியமான மார்க்கம் பிறருக்காக தாரைவார்க்கபடுகிறது என்றால் இந்த விசயத்தில் அ இ உலமா சபை கூடுதலான கவனம் செலுத்த கடமைப்பட்டுள்ளது. பின் வரும் குர்ஆன் வசனத்தை சற்று ஆழமாக கவனியுங்கள். (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள்.

 (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.( 2- 120)

எனவே அவர்களை திருப்தி படுத்த நாம் எவ்வளவு தான் என்ன செய்தாலும் நாம் அவர்களின் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாத வரை அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். அந்நிய மதத் தலைவர்களை நமது பள்ளிகளில் அமர வைத்து பன சொல்ல வைப்பது, வெசாக் போன்ற அவர்களின் விசேச தினங்களில் சாப்பாடு சமைத்து கொடுப்பது மேலும் அவர்களின் விசேட வைபவங்களில் கலந்து மங்கள விளக்கு என்ற பெயரில் குத்து விளக்கு ஏற்றுவது. 

இப்படி மார்க்கம் என்ற பெயரில் எல்லை மீறி அல்லாஹ்வால் மன்னிக்கப்பட மாட்டாது என்று கூறும் பாவமான இணை வைத்தலை பகிரங்கமாக படித்த மௌலவிமார்களின் தலைமையில் அரங்கேற்றப்படுகிறது என்றால், பயிரே வேலியை சாப்பிடுவதை காண்கிறோம். மீன் கெட்டால் உப்பு போட்டு கருவாடாக மாற்றலாம், ஆனால் பதப்படுத்தக் கூடிய உப்பே கெட்டால் ? துாக்கி வீசதான் வேண்டும். அது போல பொது மக்கள் தவறு செய்யும் போது படித்த மௌலவிமார்கள் அதை சுட்டிக் காட்டி திருத்திக் கொடுக்கலாம், ஆனால் படித்த இவர்களே பகிரங்கமாக தவறை செய்தால் ? மக்களே ! நீங்கள் இப்போது சிந்தியுங்கள்.!

மிம்பரில் நின்று கொண்டு பாவம் செய்யாதீர்கள் என்று பொது மக்களைப் பார்த்து கை நீட்டி பேசும் மௌலவிமார்களே ! பேசக் கூடியவருக்கு தான் முதல் உபதேசமாக இருக்க வேண்டும். கேட்க கூடியவர்கள் தான் சரியாக நடக்க வேண்டும். நான் எப்படியும் நடப்பேன் என்று மௌலவிமார்கள் இருக்க கூடாது.

தவறுகள் நடக்கும் போது கைகளால் தடுங்கள், அல்லது வாயினால் தடுங்கள், அல்லது மனதால் வெறுத்து ஒதுங்குங்கள். என்று இஸ்லாம் நமக்கு அழகான முறையில் வழிக்காட்டுகிறது. இதையெல்லாம் தெளிவாக படித்தவர்களே பாவங்களை கண்டு கொள்ளாமல் கூட்டாக சேர்ந்து சிரித்தவர்களாக பகிரங்கமாக செய்கிறார்கள் என்றால். ? இதை யாரிடம் போய் சொல்வது. ?

தவறுகள் பகிரங்கமாக நடக்கும் போது அதை தடுக்காவிட்டால் எல்லோருக்கும் அழிவு தான் என்பதை நபியவர்கள் அழகான உதாரணத்தை எடுத்துக் காட்டி எச்சரிக்கிறார்கள். ஒரு கப்பலில் மேல் தட்டில் ஒரு சாராரும்,கீழ் தட்டில் மற்றொரு சாராரும் செல்லும் போது கீழ் தட்டில் உள்ளவர்கள் தண்ணீர் எடுக்க மேல் தட்டிற்கு போக வேண்டும். 

ஆனால் நாம் ஏன் மேலே போக வேண்டும் கப்பலின் ஒரு மூலையில் சிறிய துாவாரத்தை போட்டு கடலிலிருந்து தண்ணீரை எடுப்போம் என்று எடுக்கும் போது மேல் தட்டில் உள்ளவர்கள் எனக்கென்ன என்று பார்த்துக் கொண்டிருந்தால், இரண்டு சாராரும் சேர்ந்தே கடலில் மூழ்கடிக்கப் படுவார்கள் என்று நபியவர்கள் சொன்ன உதாரணத்தை சற்று நிதானமாக சிந்தியுங்கள்.

மார்க்கத்திற்கு முரணாணவைகள் பகிரங்கமாக நடக்கும் போது அதை செய்பவர்கள் நமது இனத்தை சார்ந்த அறிஞர்களாக இருந்தாலும்,தவறை சுட்டிக் காட்டி திருத்திக் கொடுக்க வேண்டும். அதை அ. இ. உலமா சபை உடனுக்கு உடன் செய்ய வேண்டும். பாதிமா திருடினாலும் அவரின் கையை வெட்டுவேன் என்று கூறிய மார்க்கத்திற்குள் இருந்து கொண்டு மௌலவிமார்கள் பகிரங்கமாக செய்யும் பாவங்களை சுட்டிக் காட்டி திருத்திக் கொடுக்காமல் இருப்பது உலமா சபையின் இயலாத தன்மையைக் உறுதிப்படுத்துகிறது.

நாங்கள் தொலைபேசி மூலம் பேசிட்டோம், அல்லது சம்பந்தப்பட்டவர்களுடன் தனியாக பேசிவிட்டோம் என்று மீண்டும், மீண்டும் மாறி, மாறி பாவங்களை ஒருவருக்கு பின் ஒருவராக செய்ய வழி வைக்காதீர்கள். தனிப்பட்ட ரீதியில் ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அவருடன் வேண்டுமானால் தனி பட்ட ரீதியில் தவறை சுட்டிக் காட்டி பேசிக் கொள்ளலாம். மாறாக பகிரங்கமாக செய்த ஷிர்க்கான பாவத்தை இனி மேல் யாரும் இப்படியான பாவத்தை செய்யக் கூடாது என்று அனைவருக்கும் விளங்கும் படி எடுத்துக் காட்டுங்கள்.

அ இ உலமா சபைக்கு மட்டும் இந்த பொறுப்பு கிடையாது, இன்று தஃவா களத்தில் இருக்கும் ஒவ்வொரு ஜமாஅத்துகளும், அல்லது அமைப்புகளும் இப்படியான தவறுகளை மக்களுக்கு நேரடியாக எடுத்துக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நாங்கள் தான் நன்மையை ஏவி, தீமையை தடுக்கிறோம் என்றால் இப்படியான விசயங்கள் தீமையாக தெரிய வில்லையா ? நன்மைகள், தீமைகள், தெரியாமல்தான் இவ்வளவு காலம் தஃவா களத்தில் இருக்கிறீர்களா. ? சிந்தியுங்கள், ! செயல்படுங்கள். !

                                                            மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3:185)


நோன்பைத் தவிர தொழுகை, ஸகாத், ஹஜ்ஜு போன்று இன்னும் பல நற்கருமங்கள் இருக்கின்ற போதிலும், அவை முகஸ்த்துதிக்காகவும் பாராட்டைப் பெறுவதற்காகவும் செய்ய இயலுமான காரியங்களாகும். ஆனால் நோன்பு அப்படியில்லை. ஏனெனில் அடியான் நோன்பு நோற்றுள்ளானா, இல்லையா.? 

என்பது பரம இரகசியமாகும். அதனை அடியானும் அல்லாஹ்வும்தான் அறிவர்.
எனவேதான் நோன்பு தவிர்ந்த நற்கருமங்களுக் குறிய கூலியின் அளவு நிர்னயிக்கப்பட்டுள்ள போதிலும், நோன்பின் கூலி இன்னது என்று நிர்ணயிக்கப்படவில்லை. எனவே நேன்புக்கு அல்லாஹ் விரும்பிய மட்டும் கூலியை வாரி வழங்குவான். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

عن أبي هريرة رضي الله عنه قال قالرسول الله صلى الله عليه وسلم كُلُّ عَمَلِ ابْنِ آدم لَهُ إلاَّ الصِّيامَ فَإنَّهُ لِي وَأنَا أجْزيْ بِهِ وَالصِّيامُ جُنَّةٌ فَإذا كَانَ يَوْمُ صَوْمِ أحَدِكُمْ فَلاَ يَرْفَثْ ولاَيَصْخَبْ فَإنْ سَابَّهُ أحَدٌ أوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إنِّيْ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخَلُوْفُ فَمِ الصَّائِمِ أطْيَبُ عِنْدَ اللهِ مِنْ رِيْحِ الْمِسْكِ. لِلصَّائِمِ فَرْحَتَانِ يفْرَحُهُمَا إذا أفطَرَ فَرِحَ بِفِطْرِهِ وإذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ(متفق عليه)

“மனிதனின் செயல்கள் யாவும் அவனுக்குரியன. ஆனால் நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியது. அதன் கூலியை நானே தருவேன்.” என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் நோன்பு ஒரு கேடயம். உங்களில் நோன்பை அடைந்து கொண்டவர், ஆபாச பேச்சுக்களைப் பேசவோ, கூச்சலிடவோ வேண்டாம். யாரேனும் அவரைத் திட்டினாலோ அல்லது அவருடன் சண்டைக்கு வந்தாலோ, “நான் நோன்பாளி” என்று அவர் சொல்வாராக. 

முஹம்மதுவின் ஆத்மா எவன் வசம் இருக்கின்றதோ அவனின் மீது ஆணையாக நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் வாசனை மிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்சிகள் இருக்கின்றன. ஒன்று நோன்பு திறக்கும் போது அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி, மற்றையது அவன் அல்லாஹ்வை சந்திக்கும் போது அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி யாகும்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸின் ஒரு பகுதி முன்னர் எடுத்துக் கூறப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய விடயங்களை இங்கு கவணிப்போம். எல்லா நல்ல கருமங்களுக்கும் அல்லாஹ்தான் கூலி கொடுக்கின்றான். ஆயினும் நோன்பைப் பற்றிக் குறிப்பிடுகின்ற போது அதற்குத் தானே கூலி தருவதாக விஷேசமாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

 அதன் கருத்தாவது, ஏனைய நல்ல கருமங்களுக்கெல்லாம் கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், நோன்புக்குக் கூலி எதுவும் நிர்ணயிக்கப்பட வில்லை. ஆகையால் நோன்பிற்குக் கூலி வழங்கும் பொருப்பினை தான் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், விரும்பிய மட்டும் அதற்குத் தாரளமாகத் தான் கூலி தருவதாகவும் அல்லாஹ் உறுதி யளித்துள்ளான், என்பதே இதன் கருத்தாகும்.
மேலும் நோன்பாளி இரண்டு சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியடைகிறான், என்று இங்கு குறிப்படப்பட்டுள்ளது. ஒன்று நோன்பு திறக்கும் நேரத்தில் அவன் அடையும் மகிழ்ச்சி. இதனை எல்லா நோன்பாளிகளும் அனுபவித்து வருகின்றனர். மற்றையது மறு உலகத்தில் அல்லாஹ்வை அவன் சந்திக்கும் போது அவன் அடையும் மகிழ்ச்சியாகும். இது நாளை மறுமை நாளில் நோன்பாளிக்கு அல்லாஹ்வை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும், என்ற சுப செய்தியைத் தருகிறது. இந்த பாக்கியம் நம்மனைவருக்கும் கிடைக்க அல்லாஹ் அருள் புறிவானாக.

பொதுவாக வாயின் துர்வாடையை யாவரும் வெறுக்கின்ற போதிலும், நோன்பாளி அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, அவன் மீது அன்பு கொண்டு நோன்பு வைத்ததன் காரணமாக அவனின் இரைப்பை காய்ந்து விட்டது. அதன் விளைவு, வயிற்றின் வெப்பம் வாய் மூலம் துர் வாடையாக வெளியேறுகிறது. எனவே தான் அந்த வாசத்தை கஸ்தூரியை விடவும் மேலானது என்று அல்லாஹ் பாராட்டுகின்றான். இதுவெல்லாம் மற்றெல்லா நற்கிரியைகளை விடவும் நோன்பு மேலானது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

இது மாத்திரமின்றி நோன்பாளிகளை மேலும் கௌரவிக்கு முகமாக,அவர்கள் சுவர்க்கம் செல்ல அவர்களுக் கென்று தனி வாயல் ஒன்றைக் கூட அல்லாஹ் ஏற்படுத்தி, அதற்கு بَابُ الرَيان என்று பெயரும் இட்டுள்ளான். உலகத்தில் சிரேஷ்ட்ட பிரஜைகள் VIP என்று அழைக்கப் படுகின்றனர். அவர்களுக்கான எல்லா ஏற்பாடுகளும் விஷேசமாக மேற் கொள்ளப் படுகின்றன. 

அவர்கள் வந்து செல்வதற்குக் கூட தனி வாயல்கள் ஏற்பாடு செய்யப் படுகின்றன. அப்படியாயின் அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் சிரேஷ்ட்டமான நோன்பாளிகள் சுவர்க்கம் செல்ல அவர்களுக்கென்று தனியான ஒரு வாயலை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளான் என்றால் அதில் என்ன வியப்பு இருக்கிறது? இந்த வாயலைப் பற்றி நபியவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்,
عن سهل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن فِي الْجَنةِ بَابًا يُقَالُ لَهُ الريان يَدْخُلُ فِيْهِ الصائِمُوْنَ يَوْمَ الْقِيامةِ لاَيَدْخُلُ مِنْهُ أَحدٌ غَيْرُهُمْ ُيقَالُ أيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لاَيَدْخُلُ مِنْهُ أحَدٌ غَيْرُهُمْ فَإذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أحَدٌ (سنن الترمذي والنسائي وابن ماجة ومسند الامام احمد)
“சுவர்க்கத்தில் “ரையான்” என்றழைக்கப் படும் ஒரு வாசல் உண்டு. அது மறுமை நாளில் நோன்பாளிகள் சுவர்க்கத்தில் பிரவேசிக்கும் வாசல். அவர்களைத் தவிர வேறு எவருக்கும் அதனூடாகச் செல்ல அனுமதியில்லை. நோன்பாளிகள் எங்கே? என்று வினவப்பட்டதும், அவர்கள் எழுந்து நிற்பார்கள். அவர்கள் அல்லாத எவருக்கும் அதனுள் செல்ல அனுமதி இல்லாத படியால், அவர்கள் உள்ளே பிரவேசித்ததும், அந்த வாயல் அடைக்கப்படும்” என்று நபியவர்கள் கூறினார்கள், என ஸஹ்ல் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதீ, நஸாஈ, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்)

நோன்பாளிகளுக்கு அல்லாஹ் எந்த அளவு மதிப்பளித்துள்ளான் என்பதற்கு இந்நபி மொழி சிறந்த அத்தாட்சியாகும். ஆனால் நோன்பை உரிய முறையில் நோற்ற நோன்பாளிகளுக்கே இந்த கௌரவம் உரித்துடையது என்பதை நினைவில் வைத்தல் வேண்டும்.

எனவே உண்மையான நோன்பாளிகளின் கூட்டத்தில் நம்மையும் சேர்த்து அவர்களுக்குரிய கௌரவத்தை நமக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget