June 2017

புனித மிக்க ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தை நாம் நெருங்கியிருக்கும் இவ்வேலையில் இந்த இறுதிப்பத்தின் மகத்துவத்தையும், கண்ணியத்தையும் மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இன்று நமது ஊர்களில் ரமழான் மாதம் முழுவதும் தூய்மையான முறையில் மார்க்கக் கடமைகளை செயல்படுத்த வேண்டியவர்கள் மார்க்கத்திற்கு முரனான பல காரியங்களை செய்து கொண்டிருப்பதை கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
அதிலும் குறிப்பாக இந்த ரமழானின் இறுதிப் பத்தில் லைலதுல் கத்ர் இரவை அடையப் போகின்றோம் என்று கூறி 27 வது இரவில் மாத்திரம் நின்று வணங்கி தவ்பா என்ற பெயரில் ஆலிம்கள் சொல்லிக் கொடுக்கும் வாசகங்களை கிளிப் பிள்ளை போல் மனப்பாடத்தில் சொல்லிவிட்டு ஒரு வருடம் செய்த பாவமும் இந்த 27 வது நாளில் கேட்ட தவ்பாவினால் மண்ணிக்கப்பட்டு விட்டது என்று எண்ணிக் கொண்டு குதூகலிக்கிறார்கள்.
இறுதிப்பத்து நாட்களின் மகிமையும், லைலதுல் கத்ர் இரவின் மகத்துவமும் தெரிந்தால் இவர்கள் இப்படி இந்த குறிப்பிட் நாட்களை வீனாகவும், மார்க்கத்திற்கு முரனாகவும் கழிக்க மாட்டார்கள்.
இதோ கடைசி பத்து நாட்களின் தூய்மையையும், மகத்துவத்தையும் பாருங்கள்.
ஆயிரம் மாதங்களின் நன்மை ஒரே இரவில்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)
முன் செய்த பாவங்கள் அழிக்கப்படுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (35)
ஆயிரம் மாதங்களுக்கு நிகரான நாள் எது?
லைலதுல் கத்ர் என்ற இரவுக்கு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்ற சிறப்பிருந்தாலும், அதை அல்லாஹ் எந்த நாள் என்று அறிவித்துத் தரவில்லை. நபியவர்களுக்குக் கூட அது இத்தனையாவது நாள் தான் என்பது தெரியாது. காரணம் அல்லாஹ் அவர்களுக்கு மறக்கடிக்கச் செய்துவிட்டான்.
நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)
நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997
கடைசிப் பத்தில் ஒற்றைப் படை இரவில் தேடுங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)
மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
27 வது இரவில் தான் லைலதுல் கத்ர் வருமா?
லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத் (1178)
இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றை பாருங்கள்.
ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: அஹ்மத் (15466)
இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2021
இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2022
இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், “நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722)
அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.
லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் அதில் தேடுவது தான் மிக சிறந்தது  அல்லாஹ் மிக அறிந்தவன் 

விசுவாசிகளே! நீங்கள் கலப்பற்ற தூய மனதுடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்…. (அல்குர்ஆன் 6:8)      
எவர் பாவமன்னிப்புக் கோரவில்லையோ அவர்கள் அநியாயக்காரர்களே (அல்குர்ஆன் 49:11)
அன்புள்ள சகோதர சகோதரிகளே! மனிதர்களாக பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே. பாவத்தை விட்டும் பாவமன்னிப்பை விட்டும் அப்பாற் பட்டவர் எவருமில்லை. நாம் செய்த பாவத் திற்கு பச்சாதப்பட்டு, அழுது கண்ணீர் வடித்து அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை வைத்தவர்களாக மன்னிப்புக் கோரவேண்டும்.
நபியே நீங்கள் கூறுங்கள்| தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்து விட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பு கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் அருள்பாளிப் போனுமாக இருக்கிறான். (39:53)
நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவத்திற்கு உடனே அந்த நிமிடத்திலே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும். மீண்டும் அந்தப் பாவத்தை செய்யமாட்டேன் அதன் பக்கம் நெருங்கமாட்டேன் என்று உறுதிகொள்ள வேண்டும். நமது பிரார்த்தனைக்கும், பாவமன்னிப்புக்கும் பதிலளிக்கக் கூடிய ஒரே கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே அவனிடமே கையேந்த வேண்டும்
அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தை செய்து விட்டாலும், அல்லது தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்து கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, தங்களுடைய பாவங்களுக்கு அவனிடமே பிழை பொறுக்கத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? இவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்துகொண்டால் (அதில்) நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதிலிருந்து விலகிவிடுவார்கள்) (அல்குர்ஆன் 3:135)
தவ்பா வருடத்திற்கு ஒரு முறை கேட்க வேண்டுமா?
சகோதர சகோதரிகளே! பாவமன்னிப்பு கேட்பதற்கென்று விஷேடமான ஒரு தினம் இஸ்லாத்தில் கிடையாது! இடைத்தரகர் ஒருவரை நியமித்து அவர் மூலமாக தவ்பா கேட்க வேண்டும் என்ற நடைமுறையும் இஸ்லாத்தில் கிடையாது. தான் செய்த பாவத்தை உணர்ந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து தனக்கு தெரிந்த பாஷையில் உடனே பாவமன்னிப்புக் கேட்டு அல்லாஹ்விடம் மன்றாட வேண்டும் என்பதை மேலேயுள்ள இவ்வசனங்கள் கூறுவதை கவனத்தில் கொள்ளுங்கள். அவ்வாறே ஐவேளை தொழுகைகள் முடிந்த பின்பும் பாவமன்னிப்பு கேட்பதற்கான முறையில் துஆக்களை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அவைகளை பாடமாக்கி கருத்துக்களை உணர்ந்து ஓதுவதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
ரமழான் 27ல் தவ்பா கேட்பதா?
பெரும்பாலான மக்கள் ரமழான் மாதம் நோன்பு 27 நள்ளிரவில் பள்ளிவாசலில் (ஆண்கள், பெண்கள்) ஒன்று கூடி இமாம் சொல்லிக் கொடுக்கும் தவ்பாவை கிளிப் பிள்ளை மாதிரி திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று செய்த பாவம், இன்று செய்த பாவம், நாளை செய்யும் பாவம், முன் செய்த பாவம், இருட்டில் செய்த பாவம், வெளிச்சத்தில் செய்த பாவம்… என்று பாவத்தை கோர்வை செய்து ஒரு வருடத்திற்கான பாவமன்னிப்பை மொத்தமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் கேட்டுவிட்டு அடுத்த வருடம் ரமழான் நோன்பு 27ல் மீண்டும் பள்ளிக்கு வந்து நள்ளிரவில் தவ்பா கேட்கிறார்கள். இப்படியான ஒரு வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் தனது உம்மத்திற்கு காட்டித்தரவில்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தராத எந்த வழி முறையும் மார்க்கமாக மாட்டாது. எனவே முஸ்லிம்கள் இந்த வேடிக்கையான பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.
எந்த நாளும் மன்னிப்புக் கோர வேண்டும் :-
பகலில் பாவம் செய்தவர் தனது பாவத்திற்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதற்காக, நிச்சயமாக அல்லாஹ் தனது கையை இரவில் விரித்து (பாவம் செய்தவன் கேட்கும் தவ்பாவை ஏற்றுக்) கொள்கிறான். இரவில் பாவம் செய்தவர் தனது பாவத்திற்காக பாவமன்னிப்புக் கோருவதற்காக நிச்சயமாக அல்லாஹ் தனது கையை பகலில் விரித்து (பாவம் செய்தவன் கேட்கும் தவ்பாவை ஏற்று) கொள்கிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை (அதாவது கியாமத் நாள் வரும் வரை) அல்லாஹ் இவ்வாறு செய்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமூஸா (ரலி) நூல் முஸ்லிம்.
ஒருவன் செய்த பாவத்திற்கு எந்நேரமும் மன்னிப்பு வழங்க தவ்பாவை ஏற்றுக்கொள்ள கருனையுள்ள அல்லாஹ் தயாராக இருக்கும் போது நாங்கள் வருடத்திற்கு ஒரு முறை தவ்பா செய்ய முயல்வது தவறான வழிமுறையாகும். கிழமைக்கு ஒருமுறை மாதத்திற்கு ஒருமுறை வருடத்திற்கு ஒரு முறை தவ்பா செய்யும் பழக்கம் இஸ்லாத்தில் இல்லை.
மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு 100 முறை பாவமன்னிப்பு கோருகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அஹர் பின் யஸார் (ரலி) நூல் முஸ்லிம்.
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபியவர்களே எந்த நாளும் பாவமன்னிப்புத் தேடும் போது நாங்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பாவமன்னிப்பு தேடுவது சரிதானா என்பதை சிந்தியுங்கள்.
                                                                                                   மெளலவி எம். எஸ். எம் இம்தியாஸ் யூசுப் ஸலபி

“கியாமுல்லைல்” என்றால் இரவுத் தொழுகை என்பது அர்த்தமாகும். பொதுவாக, இரவின் சுன்னத்திலிருந்து ஃபஜ்ர் வரை தொழப்படும் நபிலான வணக்கத்திற்கே இவ்வார்த்தை பயன்படுத்தப்படும். இது ரமழான் மற்றும் ரமழான் அல்லாத அனைத்துக் காலங்களிலும் ஆர்வமூட்டப்பட்ட ஆன்மீகப் பக்குவத்திற்கு அடிப்படையாக அமையக் கூடிய முக்கிய தொழுகையாகும். ரமழான் காலங்களில் இந்தத் தொழுகைக்கு அதிகூடிய முக்கியத்துவம் உள்ளது. பொதுவாக ரமழானில் தொழப்படும் கியாமுல்லைல் தொழுகைதான் “தராவீஹ்” என அழைக்கப் படுகின்றது.  
இந்தத் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதில் அபிப்பிராயப் பேதம் உள்ளது. ஆரம்ப காலத்தில் அநேக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பதினொன்றா? இருபத்தி மூன்றா என்ற இரண்டு கருத்து வேறுபாடுகள் தற்போது உள்ளது.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget