ஒரு நோயாளியின் கடமையும் மரண வஸிய்யத்தும்

                      ஒரு நோயாளியின் கடமையும் மரண வஸிய்யத்தும்
 
1. அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்பதும், அவன் வைக்கும் சோதனையில் பொறுமையாயிருப்பதும், தன் அதிபதியான அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பதும் அவசிய மாகும்.
 
“நமிக்கையாளரின் செயல்களைப் பார்த்து வியப்படைகின்றேன். அவனுடைய எல்லாச் செயல்களும் நன்மையை தருகின்றன. இது நம்பிக்கையாளரை முஃமினைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. மகிழ்ச்சி ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான், அது அவனுக்கு நன்மை பயக்கிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமையைக் கையாள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையையே அளிக்கிறது” எனவும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவனாகவே அவிர யாரும் இறக்க வேண்டாம்” எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், அஹ்மத் பைஹகி)
2. நோயாளி அச்சத்திற்கும், ஆதரவுக்கும் மத்தியில் இருப்பது அவசியமாகும், தன் பாவங்களுக்காக அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சிக் கொண்டும், அவனருளை ஆதரவு வைத்துக் கொண்டும் இருக்க வேண்டும்.   நபி (ஸல்) அவர்கள் மரணத் தருவாயிலிருந்த ஒரு வாலிபனைக் காணச் சென்று “உன் நிலையென்ன? எனக் கேட்டார்கள். “இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீத ஆணையாக! நான் அல்லாஹ்வின் நல்லருளை விரும்புகிறேன், என் பாவங்களை எண்ணி அஞ்சிக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறினார்.

“இம்மாதிரியான மரண வேளையில் ஓர் அடியானின் உள்ளத்தில் இவ்விரண்டும் ஓன்று சேர்ந்தால் அல்லாஹ் அவன் விரும்பியதைக் கொடுத்து அவன் அஞ்சுவதை இல்லாமலாகுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (திர்மிதி, இப்னுமாஜா)
  1. நோய் கடுமையானால் மரணத்தை வேண்டுவது கூடாது, தேவையானால், “யா அல்லாஹ்! எனக்கு வாழ்கை நன்மை பயக்குமாயின் வாழச் செய்வாயாக! எனப் பிரார்த்திக்கலாம் (புகாரி, முஸ்லிம், ஹாகிம்)
  2. நோயாளிகளிடம் மற்றவர்களின் உடமைகள் இருந்தால் அவற்றை ஒப்படைத்து விட வேண்டும் அல்லது அது பற்றி “வஸிய்யத்” செய்து (விவரமான மரணசாசனம் எழுதி) விட வேண்டும். இது நபி (ஸல்) அவர்களின் கட்டளையாகும். (புகாரி, பைஹகி)
  3. நோயாளி “வஸிய்யத்” (மரண சாசனம்) செய்வது கட்டாயமாகும். எனெனில்“வஸிய்யத்” எழுதப்பட்ட ஓலையை தன் தலைக்கடியில் வைக்காது இரண்டு இரவுகளைக் கழிப்பது ஒரு முஸ்லிம்க்கு ஆகாத செயலாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த நபிமொழியைக் கேட்ட நாளிலிருந்து ஒவ்வொரு இரவும் நான் எனது மரண சாசனத்தை எழுதி வைத்துக் கொள்ளாது இருக்கவில்லை என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், அபுதாவூத், திர்மிதி)
  1. நோயாளியின் பொருட்களில் சொத்துரிமையற்ற இன, ஜனங்களுக்கு வஸிய்யத் செய்வது கட்டாயமாகும். ஏனனெனில், உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விட்டதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்) செய்வது விதியாக்கப் பட்டிருக்கிறது, (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள் (பயபக்தியுடையோர்) மீது கடமையாகும். (அல் குர்ஆன் 2:180)
  2. நோயாளி தன் செல்வங்களிலிருந்து மூன்றிலொரு பகுதியை மரண சாஸனம் செய்யலாம். இதைவிட அதிகப் படுத்துவது கூடாது. குறைத்துக்கொள்வது கூடும். ஸஃதிப்னு அபீ வக்காஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்.
நபியவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நானும் சென்றிருந்தேன், அவ்வேளை கடும் நோய்வாய்ப்பட்டேன். நபியவர்கள் என்னிடம் வந்து நலம் விசாரித்தார்கள். அப்போது நான் “இறைத்தூதர் அவர்களே! என்னிடம் அதிகம் செல்வங்கள் உள்ளன, எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே இருக்கிறது, ஆகவே என் செல்வங்களில் மூன்றில் இரு பங்கை மற்றவர்களுக்கு வஸிய்யத் செய்யட்டுமா?” எனக் கேட்டேன். “அவ்வாறு செய்ய வேண்டாம்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

 அப்படியானால் சரிபாதியையாவது “வஸிய்யத்” செய்யட்டுமா? எனக் கேட்டேன். “வேண்டாம்” என்றார்கள். மூன்றில் ஒரு பங்கையாவது “வஸிய்யத்” செய்யட்டுமா? என்று மீண்டும் கேட்டேன். மூன்றில் ஒரு பங்கு! மூன்றில் ஒரு பங்கும் அதிமமே. ஸஃதே! உன் வாரிசுகளை பணக்காரர்களாக இருக்கச் செய்வது அவர்கள் பிறர் உதவியை எதிர்பார்க்கும் பிச்சைக்காரர்களாய் ஆகி விடுவதை விட மேலானதாகும். ஸஃதே! அல்லாஹ்வுக்காக நீர் செலவு செய்வது உனக்கு நற்கூலியைத் தரும். உன் மனைவிக்குக் கொடுக்கும் ஒரு கவளம் உணவும் நன்மையையே தரும்! என்று நபியவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஒருவர் தன் செல்வங்களில் மூன்றிலொரு பகுதியை மரண சாசனம் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுவிட்டது. மூன்றிலொரு பங்கும் அதிகமே என நபியவர்கள் கூறியதை ஆதாரமாக வைத்து நான்கிலொரு பகுதியையும் வஸிய்யத் செய்யலாம் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
  1. மரண சாசனம் செய்யும்போது இரண்டு நேர்மையான முஸ்லிம் ஆண்கள் சாட்சிகளாக இருந்தல் வேண்டும். முஸ்லிம்கள் இல்லாதபோது வேறு இரு ஆண்கள் சாட்சிகளாக இருத்தல் வேண்டும்.
“ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரண சாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும், அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களை அல்லாத வேறு இருவர் சாட்சியாக இருக்கட்டும். (அல்-குர்ஆன் : 5:106)
  1. சொத்துரிமைக்கு தகுதியுள்ள பெற்றோருக்கும் உறவினருக்கும் மரண சாசனம் (வஸிய்யத்) செய்வது கூடாது. நபியவர்கள் கடைசி ஹஜ்ஜின்போது ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைகளை அல்லாஹ் கொடுத்துள்ளான். சொத்துரிமை உள்ளவர்களுக்கு வஸிய்யத் கூடாது எனக் கூறியுள்ளார்கள் (அபூதாவூத், திமிதி, பைஹகி)
  2. மரண சாசனத்தில் சங்கடங்களை ஏற்படுத்துவது ஹராமாகும். உதாரணமாக சொத்துரிமைக்கு தகுதி உள்ளவருக்கு சொத்து கிடைக்கக்கூடாது எனும் வகையில் “வஸிய்யத்” செய்வது கூடாது. அல்லது ஒருவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்து ஒரு பிள்ளையின் மீதே அன்பும், இரக்கமும் கொண்டு, அந்தப் பிள்ளைக்கு மட்டுமே சொத்துரிமை சேர “வஸிய்யத்” செய்வது கூடாது. இது இஸ்லாத்தில் விலக்கப்பட்டதாகும்.
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற சொத்தில் ஆண்களுக்கு பாகமுண்டு, அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பாகமுண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே( இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.
(இதுவும்) அவர்களின் மரண சாசனமும் கடனும் நிறைபெற்றிய பின்னர்தான், ஆனால் (மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக்கூடாது, (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:7,12)
“தீங்கிழைக்கவும் கூடாது, தீங்கிற்குப் பழி வாங்கவும் கூடாது. எவன் தீங்கிழைத்தானோ அல்லாஹ் அவனுக்குத் தீங்கிழைப்பான். எவன் பிறரைக் கஷ்டத்திலாக்குகிறானோ அவனுக்கு அல்லாஹ் கஷ்டத்தை உண்டாக்குவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
  1. அநீதமான (வரம்பு மீறிய – நூதனமான) மரண சாசனம் (வஸிய்யத்) நிராகரிக்கபப்பட வேண்டியதாகும். (இதை நிறைவேற்றக் கூடாது). ஏனெனில், “ நம்முடைய மார்க்கத்தில் அதில் இல்லாததை நுழைப்பவர்ளின் செயலானது நிராகரிக்கப்பட வேண்டியதாகும், என (நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி,, முஸ்லிம்)
  2. அதிகமான முஸ்லிம்கள் அநாச்சாரங்களில் (பித்அத்) மூழ்கியிருக்கும் இக்காலத்தில் குறிப்பாக மரணச் சடங்குகளில் அநாச்சாரங்கள் அதிகமாகியுள்ள இக்காலத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையின் (சுன்னத்தின்) படி தன்னைக் குளிப்பாட்டி தொழுவித்து அடக்கம் செய்ய வேண்டிய முறைகளை மரண சாசனம் (வஸிய்யத்) செய்தல் வேண்டும்.
மூஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும், அதில் கடுமையான பலசாலிகளான வானவர்கள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடிய அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 66:6)
இதனால்தான் நபிதோழர்கள் தங்கள் மரன சாசனத்தைக் கூறிவிட்டே மரணமடைபவர்களாக இருந்தனர். “நான் இருந்து விட்டால் யாருக்கும் அறிவித்து விடாதீர்கள்! அது எனக்குத் துக்கம் கொண்டாடுவதாக அமைந்து விடும். துக்கம் கொண்டாடுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள், என ஹுதைபா (ரழி) அவர்கள் கூறினார்கள் (திர்மிதி)
இவற்றை ஆதாரமாகக் கொண்டு “அல்அத்கார்” என்னும் நூலில் இமாம் நவவி அவர்கள் “மரண சாசனம்” கூறுவதும் அவ்வேளை பித்அத்களை ஒழித்து நபித் தோழர்கள் காட்டிய வழியில் தன்னை நல்லடக்கம் செய்ய வேண்டடுமென்று வலியுறுத்தி “வஸிய்யத்” கூறுவதும் மிகவும் முக்கியமாக விரும்பத்தக்கதாகும் எனக் கூறியுள்ளார்கள்.
                                                                          நூல் : இறப்பும் இறுதிச் சடங்கும்”
                                                                        ஆசிரியர் : அஷ் ஷேய்க் முஹம்மது நாஸிருதீன் அல்பானி,
                                                                        தமிழில் : மொலவி முஸ்தஃபா ஜமாலி..

மேலும்பார்க்க >
                   * வெள்ளிக் கிழமைகளில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்...
                   * அதிகரித்துவரும் ஷீஆக்களின் ஊடுருவலும் ஆதிக்கமும்.
                   * இஸ்லாம் போர்க்களத்தில் சிறுவர்களைக் கொல்லச் சொல...
                   * மஸ்ஜிதுந் நபவியில் நபி (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார...
                   * மாடு பேசியதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா..?
                   * சகாதுல்பித்ர் பருவ வயதை அடையாத சிறுவர்களுக்கு கடமை...

 

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget