பதவி ஓர் அமானிதம் பாகம்......2

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

கலந்து ஆலோசித்து முடிவெடுத்தல் ஆட்சியில் இருப்பவர்கள் தன்னிச்சையாக  முடிவெடுக்காமல் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து  முடிவெடுப்பது சிறந்த தலைவருக்கு எடுத்துக் காட்டாகும்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மக்களுடன் ஆலோசித்து முடிவெடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையே பிறப்பிக்கிறான்.
தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும்.(அல் குர்ஆன் 42:37:38)


(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.(அல் குர்ஆன் 3:159)

அதே போல் ஒரு முடிவு எடுக்கும்போது தொலைநோக்கு பார்வையுடனும் அதனால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டும் விபரமாக செயல்பட வேண்டும்.

திடவுறுதி, பொறுமை, வீரம்

பதவி வகிப்பவர்கள் தாம் எடுத்த முடிவில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.அதுமட்டுமில்லாமல் நாம் பொறுமையையும் மேற்கொள்ள வேண்டும்.நபிகள் நாயகத்தை அல்லாஹ் பாராட்டி கூறும்போது “நீங்கள் மக்களிடம் நளினமாக நடந்துக் கொள்ளாமல் இருந்தால் உங்களை விட்டு அவர்கள் ஓட்டம பிடித்திருப்பார்கள்” என்பதாக குறிப்பிடுகிறான்.

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். .(அல் குர்ஆன் 3:159)

மன உறுதியும் வீரமும் உள்ளவர்களாக இருப்பதும் பதவி வகிப்பதற்க்குள்ள முக்கிய பண்புகளாகும்.எடுத்த முடிவில் பின்வாங்காமலும் வளைந்து கொடுக்காமலும் இருப்பது மிக முக்கியம்.நேர்மையாக பதவி வகித்தால் எதிர்ப்பு வருவது இயற்கைதான். அதை எதிர்கொள்ள மனவலிமையும் வீரமும் அவசியமாகும். நபிகள் நாயகம் மக்களுடன் போர்கலங்களில் பங்கெடுத்தும் மக்களுக்கு பாதுகாவலராக இருந்து தமது வீரத்தை நிறுபித்திருக்கிறார்கள்.பதவி வகிப்பவர்களுக்கு நபி(ஸல்) அவர்களே மிகப் பெரிய முன் உதாரணமாக இருக்கிறார்கள்.

தகுதியும் திறமையும் 

ஒரு பதவியை வகிப்பதாக இருந்தால் அவருக்கு நிச்சயம் தகுதியும் திறமையும் இருக்க வேண்டும்.தகுதியற்ற ஆட்சியாலர்கலாலேயே கலிஃபத் எனக் கூறப்படுகிற இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அழிந்த வரலாற்றை பார்க்கிறோம்.தகுதி என்பது இறையச்சம்,திறமை,வீரம் மற்றும் ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அனைத்து பண்புகளையும் குறிக்கும்.

அவர்களுடைய நபி அவர்களிடம்“நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்”என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்;மேலும்,அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!”என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்;இன்னும்,அறிவாற்றலிலும்,உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் அரச அதிகாரத்தை வழங்குகிறான்;இன்னும் அல்லாஹ் விசாலமான கொடையுடையவன்; யாவற்றையும் நன்கறிபவன்” என்று கூறினார்.
(அல் குர்ஆன் 2:247)

'ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்த போது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார்.'மறுமை நாள் எப்போது எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள் . அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்;எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர். முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு , 'மறுமை நாளைப் பற்றி என்னிடம் கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே கேட்டவர்' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்." அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்( ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.   புஹாரி  59

பாரபட்சம் இருக்கக் கூடாது

பதவியில் இருப்பவர்கள் அதிகமாக தவறு செய்வது பாராட்சம் காட்டுவதில் தான்.தன்னுடைய சொந்ததுக்கும் நண்பர்களுக்கும் ஒரு நியாயமும் மற்றவர்களுக்கு நியாயமும் நீடிப்பதால்தான் மக்களுக்கு பதவியில் உள்ளவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது.தன் சமூகத்தாருக்காகவும் தன் சொந்த பந்தங்களுக்காகவும் , தன்னுடய நண்பர்களுக்காகவும் வளைந்து கொடுக்கக் கூடாது என்பதை திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கையும் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது.இதை படிக்கவும் சிந்திக்கவும் இனிதாக இருந்தாலும் இதை நடைமுறை படுத்த நமக்கு கடினமாக இருக்கிறது.என் சொந்தக்காரன் பதவியில் இருந்தும் எனக்கு உதவாமல் போய்விட்டான் என்று கோபம் வருகிறதே தவிர அதில் உள்ள பாரபட்சத்தையும் அதனால் மற்ற மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை சிந்திக்க மணம் மறுக்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். 
(அல் குர்ஆன்-5:8)

மக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும்? நபி (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) , 
நூல்: புஹாரி 6787

உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண் மூக்குக்கு மூக்கு காதுக்குக் காது பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.(அல் குர்ஆன்-5:45)

பதவி என்பது பொறுப்பு

பதவியினால் ஏற்படும் விளைவுகளை ஒரு மனிதன் நன்கு அறிந்தால் அதை அவன் விரும்பவே மாட்டான்.ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு அளிக்கக் கூடிய அநீதியை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.அநீதி இழைக்கப்பட்ட மனிதன் அந்த தவறை மன்னிக்காத வரை அந்த தவறை அல்லாஹ் மன்னிப்பதில்லை.நாம் வகிக்கும் பதவியால் நம்மை சார்ந்தவர்களும் பாதிப்படைவதால் நாம் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.நம்மால் நம்மை சார்ந்தவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் மன்னிக்காதவரை நாம் அந்த தவிரிளிருந்து மீள முடியாது என்பதை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்.நாம் செய்தவற்றுக்காக மறுமை நாளில் நாம் விசாரிக்கப் படுவோம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை. (அல்குர்ஆன் 17:36)

பதவி என்றால் ஆட்சியாளர் என்பது கிடையாது.நமக்கு ஒரு பொறுப்பு வழங்கப் பட்டு நம்மை நம்பி மக்கள் இருந்தாலே நாமும் பதவி வகிப்பவர்கள் தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.ஆட்சியாளர்கள் முதல் வீட்டில் உள்ள குடும்பத் தலைவர் வரை அனைவரும் பதவி வகிப்பவர்கள் என்பதையும் அவர்கள் நிர்வாகத்தில் உள்ள அனைத்தையும் பற்றி கேள்வி கேட்கப் படுவார்கள் என்பதையும் இஸ்லாம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.”(புஹாரி 7138)

நம்பிக்கை

பதவி வகிக்கக் கூடியவர் நம்பகத் தன்மையுடயவராக இருப்பது மிக முக்கியம்.தம்மை நம்பி இருப்பவர்களிடம் பொய் உரைக்காமலும் பணம் விஷயத்தில் நேர்மையாளராக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார். அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ (ரலி)  நூல்: அஹ்மத் 18836

தம் கட்டுப்பாட்டில் உள்ள செல்வதினாலேயே பலர் தடுமாறி விடுகின்றனர்.நாம் எப்படிப் பட்ட நம்பிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதை திருக்குரானில் கூறப்பட்டுள்ள இந்த சம்பவம் நமக்கு தெளிவு படுத்தும்.

'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!"  என அப்துல்லாஹ்வின் உமர்(ரலி) அறிவித்தார். புஹாரி 2272

வழிகாட்டி

பதவி வகிப்பவர்கள் தம்மை சார்ந்தவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக செயல்பட வேண்டும்.நம்முடைய தலைவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார்கள்.உலக விஷயத்திலும் முக்கியமாக மார்க்க விஷயத்தில் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்தால் நம்மால் பாதிக்கப் பட்டவர்களின் பாவத்தையும் சேர்த்து நாம் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.எனவே நமக்கு கிடைக்கும் பதவியில் மிகவும் எச்சரிக்கையாகவும் நாம் ஒரு நல்ல முன் உதாரணமாகவும் விளங்கினால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறலாம்.

“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குரான் 33:67)

ஆட்சிக்கு ஆசைப் படுவது

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி 7148 

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி(ஸல்) அவர்கள் அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி(ஸல) அவர்களிடம் பதவி கேட்டார்கள்; நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை! (முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருககவே மாட்டேன்!)" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் 'பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி கொடுக்கமாட்டோம்!" என்று பதிலளித்தார்கள்.
புஹாரி 2261

'இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்” என்று அவர் கூறினார் (அல் குர்ஆன் 12:55)

இவ்வசனத்தில்  என்னை இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரி யாக நியமியுங்கள் என்று யூஸுஃப் நபி கேட்டதாகக் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதிகாரத்தைக் கேட்காதே! நீ கேட்டு அது உனக்கு வழங்கப்பட்டால் அது உன் பொறுப்பிலேயே விடப்படும். கேட்காமல் உனக்குக் கொடுக்கப்பட்டால் நீ (இறைவனால்) உதவி செய்யப்படுவாய்' என்று கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 6622)

மேற்கண்ட வசனத்திற்கு முரண்படும் வகையில் இந்த நபிமொழியைப் புரிந்து கொள்ளக் கூடாது.யூசுஃப் நபியின் வரலாற்றைப் பற்றிக் கூறும் போது, அதில் கேள்வி கேட் போருக்குத் தக்க சான்றுகள் உள்ளன என்று அல்லாஹ் கூறுகின்றான்.

(விளக்கம்) கேட்போருக்கு யூஸுஃபிடமும் அவரது சகோதரர் களிடமும் பல சான்றுகள் உள்ளன. (அல் குர்ஆன் 12:7)

கருவூல அதிகாரியாக நியமியுங்கள் என்று யூசுஃப் நபி கேட்ட இந்தச் சம்பவத்திலும் நமக்கு முன்மாதிரி இருக்கின்றது.பதவி ஆசைக்காகவோ, தகுதியற்ற நிலையிலோ பதவியைக் கேட்கக் கூடாது என்பது தான் மேலே நாம் காட்டியுள்ள நபிமொழியின் கருத்தாக இருக்க முடியும்.

ஒரு பணியை மற்றவர்களை விட நம்மால் சிறப்பாகச் செய்ய முடியும்;அதற்கான தகுதி நமக்கு உள்ளது என்று ஒருவர் கருதினாலோ, அல்லது தகுதி யற்றவர்களிடம் ஒரு பணி ஒப்படைக்கப் பட்டு அது பாழ்படுத்தப்படுவதைக் கண்டாலோ அப்பதவியை நாம் கேட்டுப் பெறுவதில் தவறில்லை என்பதற்கு இவ்வசனம் சான்றாகும்.மேலும் அந்த ஆட்சி, யூஸுஃப் நபியின் மீது பழி சுமத்திச் சிறையில் தள்ளிய ஆட்சியாக இருந்தும், அத்தகைய ஆட்சியில் தமது உரிமையை யூஸுஃப் நபி கேட்டிருக்கிறார்கள்; பதவியும் கேட்டிருக்கிறார்கள்.இஸ்லாமிய ஆட்சி நடக்காத பகுதிகளில் இது போன்ற பதவிகளையும்,உரிமைகளையும் முஸ்லிமல்லாத ஆட்சி யாளர்களிடம் கேட்டுப் பெறலாம் என்ப தற்கு இது சான்றாக அமைந்துள்ளது.

பதவியில் இருப்பவர்களே ! உங்களுக்குப் பின் மக்கள் கூட்டம் கூட்டமாக உங்களிடம் வந்தால் தற்பெருமை கொள்ளாதீர்கள் இறைவனை அதிகதிகம் புகழுங்கள்.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான். (அல் குர்ஆன் 110:1-3)


இதையும் பார்க்க:-
                     * மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல்!
                     * இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்.
                     * ரமழான் இரவுத நேரத் தொழுகை...(தராவீஹ்)
                     * கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா?
                     * ஆஷுரா நோன்பின் சிறப்புகள்


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget