உலக இன்பமும் மறுமை இன்பமும்..!


இந்த உலகத்தில் நன்றாக உழைக்கவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும், சொத்து சேர்க்கவேண்டும், ஆடம்பரமான வீடு கட்டவேண்டும், இப்படி இன்பமாக வாழவேண்டும் என்பதற்காகவேண்டி நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகள் வைத்தியராகவோ, பொறியியளாலராகவோ, சட்டத்தரணியாகவோ, ஆசிரியராகவோ, கனணித்துறையிலோ இது போன்ற கல்வித்துறையிலோ, பாடகராகவோ, இசையமைப்பாளராகவோ, நடனமாடுபவராகவோ வேறு ஏதாவது வியாபாரத்தையோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகளின் கல்வி நடவடிக்கைகள் எந்தளவுக்கு முன்நனறிவிட்டது என்றால், உலகக்கல்விக்கு கொடுக்கும் உற்சாகமும் முயற்சியும் நமது மார்க்கக் கல்விக்கு இல்லை. பாடசலைகளில் சாதாரணதரப் பரீட்சையோ, உயர்தரப் பரீட்சையோ வந்துவிட்டால் ஆண்களும் பெண்களுமாக காலையில் 6 மணியிலிருந்து இரவு 6 மணிவரைக்கும் கணிதப்பாட வகுப்பு, விஞ்ஞானப்பாட வகுப்பு சமூகக்கல்விப்பாட வகுப்பு, ஆங்கிலப்பாட வகுப்பு, கனணி வகுப்பு என்று சொல்லிக்கொண்டு ஓடி ஓடிப் படிக்கின்றார்கள்.

அதேபோன்று பெற்றோர்களும் பிள்ளைகள் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வந்து, பணம் சம்பாதித்து, ஆடம்பரமாக இன்பமாக வாழவேண்டும் என்பதற்காக தங்கள் பெண்பிள்ளைகளையும் இரவிலே ஆங்கில வகுப்பு கனணி வகுப்பு என்று அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய காலத்திலே கட்டப்படும் வீடுகள் பல கோடிக்கணக்கான ரூபாய்களை செலவுசெய்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கட்டப்படும் வீடுகள் 1மாடி அல்ல, 2 மாடி அல்ல 3 மாடிகளுக்கு மேலாகத்தான் கட்டப்படுகின்றது. அந்த வீட்டுக் கதவுகளிலும், ஜன்னல்களிலும், கூரைகளிலும், நிலங்களிலும், சுவர்களிலும், தூண்களிலும் பல விதமாக அலங்கரித்து அது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொறு நிறம் பூசுகின்றார்கள்.

வீட்டிலே ஒரு அறைக்குள் சுவர்களிலே இராக்கைகள், பல மின்குமிழ்கள், அந்த மின்குமிழ்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதமாக தொங்கவிடப் பட்டிருக்கும், இப்படியாக ஒரு வீட்டை அலங்கரித்து கட்டி முடித்து விடுவார்கள். பின்னர் அந்த வீட்டுக்குள்ளே அலங்கரிப்பதற்கு கதிரை, மேசை, கட்டில், விரிப்பு, தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, துணி சலவை செய்யும் இயந்திரம், ஏ.சி, அல்மாரி, அல்மாரிக்குள்ளே வைப்பதற்கு கண்ணாடிகளால் ஆன பூக்கொத்துக்கள், உருவச்சிலைகள், கோப்பைகள், பீங்கான்கள், பூ போட்ட சட்டி, முட்டி இது போன்ற அலங்காரப்பொருட்களை பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவுசெய்து வாங்கிவைத்து இன்பமடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய காலத்திலே நமது முஸ்லிம்களுடைய திருமணங்கள், திருமணம் நடப்பதற்கு முன் அடையாளம் போடுவது, திருமணம் பேசுவதற்கு, கத்னா வைப்பது, பிறந்த நாள், பிள்ளைக்கு பெயர் சூட்டுவது, பெண்பிள்ளைகளுக்கு காதுகுத்துவது, பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்தால், குடும்பத்தில் யாராவது இறந்த நாள், புதிய வீட்டுக்கு குடி புகுவதற்கு இன்னும் இதுபோன்ற விடயங்களுக்கு உறவினர்கள், அண்டைவீட்டார்கள், நண்பர்கள் போன்றவர்களை அழைத்து, மண்டபத்தையோ அல்லது வீடுகளையோ அலங்கரித்து, விருந்து வைத்து, மிக பிரமாண்டமான விழாக்களாகக் கொண்டாடி இன்பமடைந்து கொண்டிருக்கிறார்கள்.

 ஒருவர் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால், அந்த விடயத்தை கொண்டாடுவதற்காக விழா ஒன்றை ஏற்பாடு செய்து, ஊர்வலம், மேடைப்பேச்சு போன்ற காரியங்களை செய்வார்கள். முதலாவது ஊர்வலம் செல்வதற்காக பல வடிவமான மின்குமிழ்களையும், பல நிறமுடைய கொடிகளையும், தேர்தலில் வெற்றிபெற்ற தலைவருடைய படம் (photo) போட்ட பெரிய பெரிய பெனர்களையும், போஸ்டர்களையும் வீதியிலே சுவர்களில் ஒட்டி அலங்கரிக்கின்றார்கள், பின்னர் லொறி, வேன், கார், முற்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், பட்டாசுகள் வெடிக்கவைத்துக் கொண்டு ஊர்வலம் செல்வார்கள். 

பின்னர் மிகப்பிரமாண்டமான மேடைகளை அமைத்து, மேடையின் மீது ஏறிப்பேசுவார்கள். இப்படியான காரியங்களைச் செய்வதிலும், வேளைகளில் கலந்துகொள்வதிலும் இன்பமடைந்து கொண்டிருக்கிறார்கள். மேலே கூறியதுபோல இந்த உலக இன்பத்தை அடையவேண்டும் என்பதற்காக தமது வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். பணம் சம்பாதிக்கவும், சொத்து சேர்க்கவும், ஆடம்பரமான வீடு கட்டவும், நிறைய இலாபம் கிடைக்கக்கூடிய தொழில் தேவை. இந்தத் தொழில்களை நமது முஸ்லிம்கள் பல வழிகளிலே செய்துகொண்டிருக்கிறார்கள். 

நிறைய சம்பாதிப்பதற்காக இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட தொழில்களை செய்து சம்பாதிக்கின்றார்கள், இன்னும் சிலர் நிறைய சம்பாதிப்பதற்காக இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத, தடுத்த வட்டி, இலஞ்சம், அடகு, வியாபாரத்தில் கலப்படம், பொய், மோசடி, பதுக்கல் போன்ற தொழில்களை செய்து சம்பாதித்து நரகத்தில் விழுந்துகொண்டிருக்கின்றார்கள்.
இதுவல்ல இன்பம் அல்லாஹ் கூறியதையும், அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய பிரகாரம் வாழ்ந்து, மறுமையிலே சொர்க்கத்தை அடைந்து சொர்க்கத்தில் உள்ளவற்றை அனுபவித்து வாழ்வதுதான் இன்பம்.

  மறுமை இன்பம்.  
அல்லாஹ் கூறுகின்றான், (இறைவனை) அஞ்சியோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை! அதில் மாற்றமடையாத தண்ணீரைக்கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப்போகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும் இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தனது இறைவனிடத்திலிருந்து மண்ணிப்பும் உண்டு. (இவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா?’ (அல்குர்ஆன்- முஹம்மது 47: 15)

‘அவர்களுக்கு நிலையான சொர்க்கச்சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக்காப்புகள் அவர்களுக்கு அணிவிக்கப்படும். ஸுந்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப்பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். அதில் உள்ள ஆசனங்களில் அவர்கள் சாய்ந்திருப்பார்கள். இதுவே சிறந்த கூலி. அழகிய தங்குமிடம்.’ 
(அல்குர்ஆன்- அல்கஹ்ஃப் 18:31)

‘அவர்களுக்கு ஹுருல் ஈன்களை துணைகளாக்குவோம்.’ (அல்குர்ஆன்- அத்துகான் 44:54)

‘அவர்களும், அவர்களது துணைகளும் கட்டிலிலும் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள்.’ (அல்குர்ஆன்- யாஸீன் 36:56)

‘உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. ‘அல்லாஹ்வின் உதவி எப்போது?’ என்று (இறைத்)தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.’ (அல்குர்ஆன்- அல்பகரா 2:214)

‘தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் ‘உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!’ என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்.’ (அல்குர்ஆன்- அஸ்ஸுமர் 39:73)

‘(இறைவனை) அஞ்சியோர் சொர்க்கச் சோலைகளிலும், நதியிலும் இருப்பார்கள். வலிமை மிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் (அவர்கள் இருப்பார்கள்).’ (அல்குர்ஆன்- அல்கமர் 54:54,55)

‘மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீறமாட்டான்.’ (அல்குர்ஆன்- அஸ்ஸுமர் 39:20)

‘அந்நாளில் சொர்க்கவாசிகள் அழகிய தங்குமிடத்திலும், சிறந்த ஓய்விடத்திலும் இருப்பார்கள்.’ (அல்குர்ஆன்- அல்புர்கான் 25:24)

‘அங்கே ஸலாம் என்பதைத் தவிர எந்த வீணானதையும் அவர்கள் செவியுறமாட்டார்கள். அங்கே காலையிலும், மாலையிலும் அவர்களுக்குரிய உணவுகள் உள்ளன.’ (அல்குர்ஆன்- மர்யம் 19:62)

‘முதலில் அடைந்த மரணத்தைத் தவிர அங்கே மரணத்தைச் சுவைக்கமாட்டார்கள். நரக வேதனையிலிருந்து அவர்களை அவன் காப்பான்.’ (அல்குர்ஆன்- அத்துகான் 44:56)

‘நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. (1) நோன்பு திறக்கும்போது மகிழ்ச்சியடைகிறான்; (2) தன் இறைவனைச் சந்திக்கும்பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.’ (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி: 1904)

‘சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில், அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும்; உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத்தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும்: அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!’ (அறிவிப்பவர்: ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி: 1896)

மேலே உள்ள குர்ஆன் வசனங்கள் கூறுவதும், ஹதீஸ்கள் கூறுவதும் போல் பாலாறுகள், தேனாறுகள், மது ஆறுகள், கனிகள், தங்கக் காப்புகள், பட்டாடைகள், துணைகள், மரணம் இல்லாமல், வீண்பேச்சுக்கள் இல்லாமல், அல்லாஹ்வைப் பார்த்துக்கொண்டு சொர்க்கத்தில் வாழ்வது இன்பமா? நன்றாக உலகக்கல்வியைக் கற்று, பணம் சம்பாதித்து, சொத்து சேர்த்து, ஆடம்பரமான வீடுகளைக்கட்டி, இஸ்லாம் காட்டித்தராத விழாக்களை, பித்அத்தான விடயங்களை செய்து, நாட்டை, ஊரை தனது ஆட்சிக்குள் கொண்டு வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகவும், இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராகவும் தொழில்களைச் செய்து மறுமையிலே நரகத்தை அடைவது இன்பமா?

                          !.....கவனியுங்கள்! படியுங்கள்! சிந்தியுங்கள்.....!

இதையும் பார்க்க >>


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget