சாந்தி மார்க்கம் போதிக்கும் ஸலாம்…!

                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
  • அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்குணங்களை முழுமைபடுத்தவே அனுப்பப்பட்டார்கள். நற்குணங்களின் முழு வடிவமாகத் திகழ்ந்த அவர்கள், மனித நேயத்தையும், பண்பாட்டையும், உயரிய ஒழுக் விழுமியங்களையுமே உலகிற்கு போதித்தார்கள். அவர்கள் போதனைகளுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் தான் போதித்தவைகளை முதிலில் செயல்படுத்துபவர்களாக அவர்களே திகழ்ந்தார்கள். அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுமாறு தூதருக்கு பணிக்கின்றான்:
நபியே! இன்னும்) ‘மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்.’ என்றும் கூறுவீராக. ‘அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்’ (என்றும் நீர் கூறுவீராக). (39: 11,12).
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)               நூல்: திர்மிதீ 2613

அஸ்ஸலாமு அலைக்கும் என்ற இந்த வார்த்தை முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓரு பெரிய அருட்கொடை என்றே சொல்ல வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்: ஸலாம் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும். (அல்குர்ஆன்: 36:58). 
பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், குட்மார்னிங் போன்ற ஒரு வார்த்தை என்று தான் பலர் நினைத்து கொண்டுள்ளனர். நாம் சொல்லும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தையை சாதாரண மனிதர்களோ,பண்டிதர்களோ இயற்றவில்லை.  மாறாக மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் இந்த அஸ்ஸலாமு அலைக்கும். நாம் இதை மொழியும் போதெல்லாம் நிச்சயம் இறைவனின் அருள் மழை பொழியும். இந்த ஸலாத்தின் மூலம் சண்டை சச்சரவுகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு பிரியத்தையும், சமாதானத்தையும் உண்டாக்க அல்லாஹ் விரும்புகிறான்.

உங்களில் ஈமான் (விசுவாசம்) கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை ஈமான் கொண்டவர்களாக ஆகமாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை நான் கற்றுத்தரட்டுமா? என்று கேட்ட நபி(ஸல்) அவர்கள், உங்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்வதைப் பரவலாக்குங்கள் (பிரியத்தை ஏற்படுத்த இதுவே மிக சிறந்த வழியாகும்) என்று கூறினார்கள். (நூல்:முஸ்லிம்)

உங்களில் ஈமான் கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள் இதுதான் அந்த முதல் வாசகம். இதற்கு பொருள் என்ன? உலகில் யார் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்தாலும் அவர்களுக்கு ஈமான் (இறை நம்பிக்கை) கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் நற்செயல்கள் அனைத்தும் அழிந்து விடும்.

எனவே ஸலாம் சொல்லி அதன் மூலம் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள் அல்லாஹ்வையே ஏளனம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது நிம்மதி நிலவட்டுமாக! என்பது அதன் பொருள். அதாவது உங்கள் மனைவியிடத்தில், உங்கள் குழந்தையிடத்தில், உங்கள் உறவினர்களிடத்தில், உங்கள் பிரயாணத்தில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், உங்கள் மண்ணறையில் பின்பு மறுமையில் இவை எல்லா நிலைகளிலும் உங்கள் மீது நிம்மதி உண்டாகட்டுமாக! இது தான் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதின் பொருள். இவை அனைத்தையும் சுருட்டி மடக்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்பதில் அல்லாஹ் வைத்துள்ளான். மனித வாழ்வில் ஏற்படும் முக்கியமான தருணங்கள் அவை. 

'ஸலாம்' கூறுவதன் மூலம் சகோதரத்துவம், அன்பு, பாசம், நேசம் ஏற்படுகிறது.
இறைநம்பிக்கையும் அன்பும் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். இறைபக்தி மற்றும் இறைநம்பிக்கையுடன் செயல்படுவோர் தீமைகளைத் தவிர்ப்பர். நன்மை செய்வோருக்கு சுவனம் கிடைப்பது உறுதி இறைநம்பிக்கை கொண்டோரே! ஸலாத்தின் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள்! சகோதரப் பிணைப்பிற்கு அது ஒன்றே வழி!

''அல்லாஹ்விடம் மக்களிலேயே மிசச்சிறந்த நபர் முதலில் ஸலாம் கூறுபவராவார்''என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
ஸலாம் கூறுவதை மரியாதைக் குறைவாக கருதுவோரும் உண்டு; நமது அந்தஸ்திற்கு இவருக்குப் போய் ஸலாம் கூறுவதா? என்ற அகந்தை எண்ணத்துடன் தலை நிமிர்ந்து செல்வோரும் உண்டு; இது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அடுத்தவரது நல்வாழ்விற்காக செய்யும் பிரார்த்தனையே ஸலாம் ஆகும். அதைச் சொல்வதற்குக் கூட கஞ்சத்தனம் செய்வோர் மனித நலனை எவ்விதம் காப்பர்? 
அதனால் தான் நபியவர்கள் தாங்களாகவே முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள். இந்த நபி மொழியை செயல்படுத்துவதற்காக அப்துல்லாஹிப்னு உமர் என்ற நபித்தோழர் கடைவீதிக்குச் சென்று, ஏழை, எளியோர், வியாபாரிகள் மற்றும் வருவோர், போவோர் அனைவருக்கும் ஸலாம் கூறும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். முதல் மனிதர் ஆதமின் முதல் வார்த்தையே ஸலாம் தான்! ஒருவரையொருவர் வெறுத்து பிரிந்து வாழ்வோர் ஸலாம் கூறுவதன் மூலமாக ஒன்று சேர்வதற்கான அருமையான வழிமுறையை அண்ணல் நபியவர்கள் காட்டியுள்ளார்கள். திண்ணமாக அல்லாஹ் மென்மையானவன்; அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ, முஸ்லிம்

ஒரு மனிதன் தான் அறியாமலிருக்கும் ஒருவருக்கு 'ஸலாம்' கூறுவது அறிமுகத்தையும், சகோதர உணர்வையும் ஏற்படுத்துகிறது. அறிந்தோருக்கு ஸலாம் கூறுவது ஏற்கனவேயுள்ள தொடர்பையும் பாசத்தையும் வலுப்படுத்தி அகந்தை மற்றும் பெருமையை அகற்றுகிறது. உணவளிப்பது உடலுக்கு வலிமைåட்டுகிறது என்றால், 'ஸலாம்' கூறுவது மனநிம்மதிக்கும், அமைதி வாழ்விற்கும் வழிகோலுகிறது. 
மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி, நூற்கள் : திர்மிதீ, இப்னுமாஜா 3242, அஹ்மத், ஹாகிம்) 

அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சொர்க்கத்தை நிச்சயமாகப் பெற்றுத் தரும் ஒன்றை அறிவியுங்கள்! என ஹானீ (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நல்ல வார்த்தைகளைப் பேசு! ஸலாத்தைப் பரப்பு! என்றார்கள்.(அறிவிப்பவர் : ஷுரைஹ் இப்னு ஹானீ -ரலி, நூற்கள் : இப்னுஹிப்பான், ஹாகிம்) 

ஸூப்ஹானல்லாஹ் ஸலாம் சொல்வது எவ்வளவு பெரிய அருட் கொடை என்பதை மேலே சொன்ன நபிமொழி நமக்கு உணர்த்துகின்றது. எனவே நமக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்பவும் அந்த ஸலாத்தை தூய்மையான எண்ணத்துடன் சொல்லவும் அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

இதையும் பார்க்க >>


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget