ரமழானைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவோம்...!!

                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ரமழான் மாதம் வந்துவிட்டது. மாதங்களின் தலைவன், அனைத்து விதமான சிறப்புக்களுக்குமுரிய மாதம். எனவே, அந்த மாதத்தின் சில சிறப்புக்களைப் பட்டியல்படுத்துவது, இந்தத் தடவை பொருத்த மான ஒரு செயல் எனக் கருதுகிறோம். இந்தக் கட்டுரை அனைத்தையும் உள்ளடக்கி விட்டது என்று சொல்லமாட்டோம். எமது பார்வைக்குட்பட்ட  சிலவற்றையே                      வார்த்தைகளாக்கியிருக்கிறோம்.

1.ரமழான் மாதத்தில் நன்மையை எதிர்பார்த்து ஈமானுடன், நோன்பு நோற் பவனுக்கும் இரவில் நின்று வணங்குகின்ற வனுக்கும் பாவமன்னிப்பு இருப்பதாக நபியவர்கள் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். ~~யார் ரமழானில், நன்மையை எதிர்பார்த்து, ஈமானுடன் நோன்பு நோற்கின்றானோ அவன் முன்னர் செய்துள்ள அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடும்|| என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (புஹாரி, முஸ்லிம்)

இதேபோல் மற்றொரு தடவை இரவு வணக்கத்தைப் பற்றி கூறுகிற பொழுது: ~~யார் ரமழானில், நன்மையை எதிர்பார்த்து, ஈமானுடன் இரவுத் தொழுகையில் ஈடுபடுகின்றானோ அவன் முன்னர் செய்த அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடும்|| (புஹாரி, முஸ்லிம்) என்றார்கள்.

2.நோன்பு அல்லாஹ்வுக்குரியது. எனவே அதற்குரிய கூலியும் வரையறை யற்றது. ஒரு செயலை அல்லது பொருளை அல்லாஹுத்தஆலா இது என்னுடையது என்று சொல்வது அந்த செயலின் அல்லது பொருளின் மகத்துவத்தை உணர்த்தப் போதுமான சான்றாகும். அல்குர்ஆ னில் அல்லாஹ் ~~பள்ளிவாயல்கள் அல்லாஹ்வுக்குரியன|| என்கிறான். அதேபோல் ஸமூத் கோத்திரத்திற்கு அனுப்பப்பட்ட ஒட்டகையைப் பற்றிக் கூறும்பொழுதும் ~~அல்லாஹ்வின் ஒட்டகம்|| என்று குறிப் பிட்டுள்ளான். அதேபோல்தான் அல்லாஹுத்தஆலா நோன்பைப் பற்றியும் கூறி யுள்ளான். அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூறுகிறார்கள்: ~~மனிதனுடைய அனைத்து செயல்களும் அவனுக்குரியது. நோன்பைத் தவிர, அது எனக்குரியது. அதற்குரிய கூலியை நானே கொடுக்கி றேன்.|| (புஹாரி, முஸ்லிம்)

நோன்பு அல்லாஹ்வுக்குரியது. எனவே அதனது சிறப்பு அளப்பரியது. எனவேதான் அவனே கூலி கொடுக்கிறான், ஏனைய செயல்களுக்கும் அல்லாஹ்தான் கூலி கொடுக்கிறான். ஆனால் இங்கு குறிப்பாகக் கூறக் காரணம் என்ன? அதனைப் பன்மடங்காய்க் கொடுக்கிறான் என்பது தான். அதாவது ஏனைய செயல்களின் கூலி இவ்வளவுதான் என எழுதி வைக் கப்பட்டுள்ளது. மனிதன் அதனை செய்கிற போது அந்த உரிய கூலி அவனுடைய ஏட்டில் பதிவாகிறது. 

ஆனால், நோன்பைப் பொறுத்தவரை அல்லாஹ் அதனை வழமையான முறைமைக்கு விடவிரும்ப வில்லை. நோன்புக்குரிய கூலியை நானே இறுதியில் தீர்மானித்து கொடுத்துக் கொள்கிறேன் என்கிறான். அல்லாஹ் கொடுக்கின்றான் என்றால் குறைவாகவா கொடுக்கப் போகிறான்? நிச்சயமாக இல்லை. வாரி வழங்கப் போகிறான். இது தான் நோன்பின் சிறப்பு.

3. நோன்பாளியின் துஆ மறுதலிக்கப்பட மாட்டாது. நபியவர்கள் கூறினார் கள்: மூன்று மனிதர்களுடைய துஆ மறுதலிக்கப்பட மாட்டாது. முதலாமவர் நீதியான ஆட்சியாளர். இரண்டாமவர் நோன்பாளி, நோன்பு திறக்கும் வரை. மூன்றாமவர் அநியாயம் இழைக்கப்பட்டவன், அவனது துஆவை அல்லாஹ் மேகங்களின் மேலால் உயர்த்துவான். அதற்காக வானத்தின் கதவுகள் திறந்து கொள்ளும். பின்னர் அல்லாஹ் கூறுவான்: ~~எனது கண்ணியத்தின் மீது சத்தியமாக, சிறிது காலத்தின் பின்னரேனும் நான் உனக்கு உதவி செய்வேன்|| என்பான்|| (அஹ்மத், திர்மிதி)

4.நோன்பு மறுமைநாளில் நோன்பாளிக்காய் ஷபாஅத் செய்யும். நபியவர்கள் கூறினார்கள்: அல் குர்ஆனும் நோன்பும் மறுமைநாளில் அடியானுக்காய் பரிந்துரை செய்யும். நோன்பு அல்லாஹ்வைப் பார்த்து, எனது இரட்சகனே நான் அவனை உண விலிருந்தும் இச்சைகளில் இருந்தும் தடுத்து விட்டேன். எனவே அவனுக்காக ஷபாஅத் செய்யும் உரிமையைக் கொடு|| என்று சொல்லும். அல்குர்ஆன் அல்லாஹ்விடம் அவனை நான் இரவில் தூங்கவிடாமல் தடுத்தேன். எனவே அவனுக்காய் ஷபா அத் செய்யும் உரிமையைக் கொடு|| என்று சொல்லும். (அஹ்மத், தபரானி)

5.ஒரு நோன்பாளியை நோன்புதிறக்க வைப்பதனூடாக இரட்டிப்பு நன்மை களைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. நபியவர்கள் கூறினார்கள்: யார் ஒரு நோன்பாளி நோன்புதிறக்க உதவி செய்கிறாரோ அவருக்கு, அந்த நோன்பாளிக்குரிய அதே அளவு நன்மைகள் கிடைக்கும். அந்த நோன்பாளியின் நன்மைகளில் இருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது.|| (அஹ்மத், திர்மிதி) 

அதாவது அந்த நாளில் அந்த நோன்பாளி செய்துள்ள நன்மைகள் அனைத்தும் இவனுக்கும் கிடைக்கும். குறைந்தபட்சம் இரண்டு நோன்புகள் நோற்ற நன்மையாவது கிடைக்கும்.

6. சுவர்க்கத்திற்கு ரய்யான் எனும் வாயிலினூடாக நுழையும் பாக்கியம் நோன் பாளிகளுக்கு மாத்திரமே உயரிது. நபியவர்கள் கூறியுள்ளார்கள்: சுவர்க்கத்தில் ஒரு வாயில் காணப்படுகிறது. அது ரய்யான் என அழைக்கப்படுகிறது. மறுமை நாளில் நோன்பாளிகள் மாத்திரம் அந்த வாயிலினூடாக நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. நோன்பாளிகள் எங்கே என அழைப்பு விடுக்கப்படும். அப்போது அவர்கள் எழுந்து சென்று அவ்வாயிலினூடாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாயில் மூடப்பட்டுவிடும். பின்னர் ஒருவரும் நுழைய மாட்டார்கள்.|| (புஹாரி, முஸ்லிம்)

7.ரமழானில் சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான் விலங்கிடப்படுகிறான். இதனை நபியவர்கள் இப்படிக் கூறினார்கள்: ரமழான் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான் விலங்கி டப்படுகிறான்|| (புஹாரி, முஸ்லிம்)

மற்றொரு அறிவிப்பில்: ரமழானில் ஒரு மலக்கு தோன்றி இவ்வாறு அழைப்பு விடுப்பார்: நன்மைகளைக் கொள்ளையடிப்பவனே முந்திக்கொள், தீமைகளைக் கொள்ளையடிப்பவனே சுருக்கிக் கொள்| இந்த அழைப்பு ரமழான் முடியும் வரையில் காணப்படும்|| என நபியவர்கள் கூறினார் கள். (அஹ்மத்)

இந்த ஹதீஸ்களின் பொருள் என்ன? சுருக்கமா கக்கூறினால் இப்படிக் கூறலாம்: நன்மையான உணர்வுகளே எழுந்து கொள்ளுங்கள். தீமையான உணர்வுகளே அடங்கி விடுங்கள்|| என்பதுதான். தீமைகளின் முதல் தூண்டுதல் ஷைத்தான். அவன் சிறை வைக்கப்படுகிறான். ஷைத்தான் மனிதனுள்ளே வர முடியுமான மிக முக்கிய வழி, அதிகரித்த உணவும் பானமும். இவை அனைத்தும் கட்டுப்படுத்தப் படுகிறபோது, அங்கு தீமைக்கு வழியேதும் இல்லாது போய்விடுகிறது. சுவர்க்கம் செல்வதற்கான வாய்ப்புக்கள்தான் அதிகரித்துக் காணப்படும். நரகம் செல்வதற்கான வாய்ப்புகள் இல்லாமலாக்கப்படும். எப்பொழுதும் நன்மைக்கான அழைப்பு இருக்கும். மனிதனில் நன்மை உணர்வுகள் தூண்டப்பட்டும் தீமை உணர்வுகள் அடக்கப்பட்டு இருக்கும் அந்தளவு சிறப்பு மிக்க ஒரு மாதம். மனிதனை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லவென்றே வருகின்ற மாதம். அந்த மாதத்தைப் பயன்படுத்தத் தவறிவிடாதீர் கள்.

8.முன்னைய சமூகங்களுக்கு வழங்கப்படாத சில விஷேடங்களை அல்லாஹ் ரமழானில் நபியவர்களுடைய உம்மத்திற்கு வழங்கியுள்ளான். நபியவர்கள் கூறியுள்ளார்கள்: எனது உம்மத்திற்க்கு ரமழானில் ஐந்து சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் ஒரு சமூகத்திற்கும் அவை வழங் கப்படவில்லை.

(1)நோன்பாளியின் வாயில் வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரி வாசனையை விடவும் சிறந்தது.

(2)நோன்பு திறக்கும் வரை மலக்குமார்கள் அவர்களுக்காக இஸ்திஃபார் செய்கிறார்கள்.

(3)அல்லாஹுத்தஆலா தினமும் சுவர்க்கத்தை அலங்கரித்து விட்டு, அத னைப் பார்த்துக் கூறுவான்: எனது நல்லடியார்கள் சில சமயம் தமது வாழ்க்கை கஷ்டத்தில் இருந்து விடுபட்டு உன்னிடம் வந்து சேர முடியும்|| என்பான்.

(4)ஷைத்தான் விலங்கிடப்படுவான். எனவே ஏனைய மாதங்களில் அவன் செய் யும் வேலைகளைச் செய்ய முடியாதிருக் கும்.

(5) ரமழானின் கடைசி இரவில் அனைவருக்கும் பாவமன்னிப்பு வழங்கப் படும்.
அப்போது நபியவர்களிடம் அது லைலதுல்கத்ர் எனும் இரவா? என வினவப் பட்டது. அதற்கு நபியவர்கள்: இல்லை ஒரு உழைப்பாளிக்கான கூலி அவனது வேலை நிறைவுற்றதன் பின்னர்தான் வழங்கப் படும்|| என்றார்கள். (அஹ்மத்)

9.இந்த மாதத்தில் அல்லாஹுத்தஆலா வானமும் பூமியும் சந்திக்கின்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி பூமியில் உள்ளவர்களை கௌரவப்படுத்தினான். அது தான் அல்குர்ஆன் இறங்கியமை. இதனைத்தான் அல்குர்ஆன் இப்படிக் கூறி யது. அது மக்களுக்கான நேர்வழியாகவும் நேர்வழிக்கான ஆதாரமாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டு வதாகவும் காணப்படுகிறது.|| (பகரா:185)

10.இந்த மாதம் ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த ஒரு இரவை தன்ன கத்தே கொண்டிருக்கிறது. இது இந்த மாதத்திற்கான சிறப்பு மாத்திரமின்றி, இந்த உம்மத்திற்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய கண்ணியமாகும். நபியவர்கள் கூறினார்கள்: உங்களை வந்தடைந்துள்ள இந்த மாதத்தில் ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த ஒரு இரவு இருக்கிறது. அதன் நன்மைகள் யாருக்கு கிடைக்காமல் போகின்றனவோ அவன் அனைத்து நன்மைகளையும் இழந்தவனாவான். (இப்னுமாஜா)

11.ரமழானில் அனைத்து அமல்களுக்கும் நன்மைகள் பன்மடங்காக வழங் கப்படும். இது பற்றி நபியவர்கள் கூறியுள்ள நீண்ட வார்த்தைகளைப் பாருங்கள்.மனிதர்களே உங்களிடத்தில் பரகத் பொருந்திய ஒரு மகத்தான மாதம் வந்திருக்கிறது. இந்த மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு காணப்படுகிறது. இந்த மாதத்தில் அல்லாஹ் நோன்பை வாஜிபாக்கினான். இரவுத் தொழுகையை சுன்னத்தாக்கினான். இதில் யார் ஒரு நன்மையான செயலை செய் கிறாரோ அவர் ஏனைய மாதங்களில் ஒரு வாஜிபை நிறைவேற்றிய நன்மையைப் பெற்றுக் கொள்வார். இதில் யார் ஒரு வாஜிபை நிறைவேற்றுகிறாரோ அவர் ஏனைய மாதங்களில் எழுபது வாஜிபுகளை நிறைவேற்றிய நன்மைகளைப் பெற்றுக் கொள்வார். 

இது பொறுமையின் மாதமாகும். பொறுமைக்குரிய கூலி சுவர்க்கமாகும். இது சமத்துவத்தின் மாதம். இது ஒரு முஃமினின் ரிஸ்க் அதிகரிக்கின்ற மாதம். இதில் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைத்தால் அது அவனது பாவங்கள் மன்னிக்கப் படவும், நரகில் இருந்து விடுதலை பெறவும் காரணமாக அமைந்து விடும். அதே வேளை அவனுக்கு அந்த நோன்பாளிக்குரிய அதே அளவு நன்மைகளும் கிட்டும். அந்த நோன்பாளியின் நன்மைகளில் இருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது.

அப்போது சிலர்: அல்லாஹ்வின் தூதரே! ஒருவரை நோன்புதிறக்க வைக்க எங்கள் எல்லோராலும் இயலாதே எனக்கூற, அதற்கு நபியவர்கள்: அல்லாஹ் அந்த நன்மையை ஒருவன் ஒரு நோன்பாளியை ஒரு பேரீத்தம் பழத்தினூடாகவோ, ஒரு மிடல் தண்ணீரின் ஊடாகவோ அல்லது ஒரு சொட்டு பாலினூடாகவோ நோன்பு திறக்க வைத்தாலும் தருவான் என்றார் கள்.

இந்த மாதத்தின் ஆரம்பம் அருளுக்குரியது. மத்திய பகுதி பாவ மன்னிப்புக்குரி யது. இறுதி நரக விடுதலைக்குரியது. இதில் யார் தனது அடிமைகளின் வேலைப் பளுவைக் குறைக்கின்றாரோ அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து விடுகின் றான். நரகிலிருந்து விடுதலை அளிக்கின் றான். இந்த மாதத்தில் நான்கு விடயங் களை அதிகம் செய்யுங்கள். அவற்றில் இரண்டு விடயங்களினூடாக உங்களுக்கு அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும்.
மற்றைய இரண்டு விடயங்களும் உங் களுக்கு இன்றியமையாதவையாகக் காணப்படும். முதல் இரு விடயங்கள்: லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவும், இஸ்திஃபாருமாகும். இரண்டாவது இரு விடயங்கள்: அல்லாஹ்விடம் சுவர்க்கத்தைக் கேட்டலும் நரகிலிருந்து பாதுகாப்புத் தேடுதலுமாகும்.

யார் ஒரு நோன்பாளிக்கு நீர் கொடுக்கின்றானோ, அவனுக்கு அல்லாஹ், எனக் குரிய பிரத்தியேகமான தடாகத்திலிருந்து நீர் கொடுப்பான். அதன் பிறகு அவன் சுவர்க்கம் நுழையும் வரை அவனுக்குத் தாகமே தோன்றாது.||               (இப்னுகுஸைமா)

12.ரமழானில் செய்யும் உம்ரா, நபியவர்களுடன் ஹஜ் செய்த நன்மையைப் பெற்றுத்தரும். இது பற்றிக் கூற வந்த நபியவர்கள்: ரமழானில் செய்யும் உம்ரா, என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமானது|| என்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)

இவை ரமழானின் சில சிறப்புகள். இன்னும் இந்தப் பட்டியலை நீட்டிக் கொண்டே போக முடியும். ஆனால் சிறப்புப் பட்டியல் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பதை விடவும், அந்த சிறப்புக்களை அறிந்து அதன்படி செயற்படுகிறோமா என்பதுதான் முக்கியம். செயற்படுவதற்கு ஒரு பட்டியல் சிறப்புகள் தேவையில்லை. ஒரு சிறப்பு மாத்திரமே போதுமானது.

சகோதரர்களே, எத்தனை சிறப்புகளை நபியவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்றேனும் எம்மை செயற்படத் தூண்ட வேண்டும். ரமழானின் செயல் என்பது, நோன்பும் தொழுகையும் குர்ஆனும், இஸ்திஃபாரும், ஸதகாவும் என அனைத்து நன்மையான செயல்களும் அடங்கும் முழுமையாக பயன் படுத்த அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் தௌபீக் செய்தருள வேண்டும். ஆமீன்.

 இதையும் பார்க்க:-


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget