Latest Post

சமகாலத்தில் சில பள்ளிகளில் மகான்கள், அவ்லியாக்கள் என்று சொல்லி அவர்களது உடல்களை பள்ளியிலேயே அடக்கம் செய்து கொள்ளக்கூடிய செயல்கள் இடம்பெற்று வருவதை காணமுடிகின்றது.
இந்த செயற்பாடானது மார்க்கம் தடுத்த ஒரு செயற்பாடாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன் பின்வரும் செயலுக்காக யூத நஸாராக்களை சாபம் செய்தார்கள்.
“யூதர்களையும் கிறிஸ்தவவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் நபிமார்களது கப்றுகளை வணங்கும் இடங்களாக எடுத்துக் கொண்டார்கள்” புஹாரி: 1/446 | முஸ்லிம்: 1/386
முன் வாழ்ந்த ஒரு சமூகம் இந்த காரியத்தை செய்ததனால் அல்லாஹ்வுடைய சாபத்தை பெற்றிருக்கிறது. அல்லாஹ்வுடைய சாபத்தை பெற்றத்தரக் கூடிய எந்த காரியமாக இருந்தாலும் ஒன்று அது இணைவைப்பாக இருக்கும் அல்லது பெரும்பாவமாக இருக்கும்.
இந்தடிப்படையில் பள்ளிகளில் கப்றுகளை எடுத்துக் கொள்வதானது மனிதனை நேரடியாக இணைவைப்பின் பக்கம் இட்டு செல்லக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது. 
இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்
பள்ளிவாசல்களில் மரணித்தவர்களை அடக்கம் செய்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்த காரியமாகும். கப்றுகள் மீது பள்ளிகளைக் கட்டுவதும் தடுக்கப்பட்ட காரியமாகும். மரணித்தவர்களது விடயத்தில் இப்படி நடந்து கொள்பவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாபம் செய்து விட்டு தன்னுடைய சமூகத்தையும் அவ்வாறு செய்வதை விட்டும் எச்சரித்தார்கள். அதே போன்று இந்த செயல் யூத கிறிஸ்தவர்களது செயலென்றும் சொல்லித் தந்திருக்கின்றார்கள். 
மேலும் இந்த செயல் இணைவைப்பின் பக்கம் இட்டு செல்வதற்குறிய சாதனமாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. ஏனெனில் பள்ளிகளில் மரணித்தவர்களை அடக்கம் செய்வதும் அல்லது கப்றுகளின் மீது பள்ளிகளைக் கட்டுவதும் மரணித்தவர்களது விடயத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைத்தப்பதற்குறிய ஊடகமாக ஆகிவிடும். பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் பிரயோசனங்களையும் தீங்கினையும் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்பட்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்படாமல் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களுடைய நெருக்கத்தையே பெறவேண்டுமென்ற சிந்தனையையும் ஏற்படுத்திவிடும்.
எனவே ஒவ்வொரு முஸ்லிம்களும் வெளிப்படையான இந்த அபாயகரமான செயலிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரியான அகீதாவுக்காகவும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்காகவும் நிறுவப்பட்ட பள்ளிகள் கப்றுகளை விட்டும் பிறிந்தவைகளாகவே இருக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான் “பள்ளிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் சேர்த்து வேறு எவர்களையும் அழைக்காதீர்கள்” (ஸூரதுல் ஜின்:18)
ஆகவே அல்லாஹ்வுடைய எல்லாப் பள்ளிகளும் இணைப்பினுடைய செயலை விட்டும் நீங்கியதாக இருக்க வேண்டும். அந்த பள்ளிகளில் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் அவன் மாத்திரமே வணங்கப்பட வேண்டும். இது ஒவ்வொரு முஸ்லிம்கள் மீதும் வாஜிபான ஒன்றாகும்.” (பதாவா அல் அகீதா: பக்கம் 26)
எனவே அன்புள்ள என் இஸ்லாமிய சகோதரர்களே!
பள்ளிகளில் கப்றுகளை கட்டி அவைகளை கண்ணியப்படுத்துகின்ற வண்ணம் நம்முடைய செயல்களை அமைத்துக் கொள்வதானது பகிரங்கமான இணைவைப்பாக இருந்து கொண்டிருக்கின்றது.
அல்லாஹ் எம்மனைவரையும் இந்த இணைவைப்பான காரியங்களிலிருந்து பாதுகாப்பானாக!
                                                                   பர்ஹான் அஹமட் ஸலபி

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :ஒவ்வொரு இரவும் சூரா வாகிஆவை யார் ஓதி வருகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரழி) – நூல் : பைஹகீ 2392
இந்த செய்தி பலவீனமானது என்பதாக இமாம் இப்னுல் ஜௌஸி அவர்கள் தமது அல் இலலுல் முதனாஹியா (1/151) விலும், இமாம் இப்னு இராக் அவர்கள் தன்ஸீஹுஷ் ஷரீஆ (1/301) விலும், இமாம் ஷௌகானி அவர்கள் அல் பவாயிதுல் மஜ்மூஆ (972) விலும் பதிவு செய்துள்ளார்கள்.
இமாம்கள் கூறுவது போன்றே இந்த செய்தி பலவீனமானதாகும், ஹதீஸ்கலை அடிப்படை விதிகளின் படி பலவீனமான செய்திகளைக் கொண்டு புதிய ஒரு சட்டத்தையோ சிறப்பையோ நிறுவ முடியாது. இதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்தொற்றுமை காணப்படுகிறது.
பலமான ஒரு செய்தியின் மூலம் ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு விடயத்தின் சிறப்புக்களுக்காக பலவீனமான செய்திகளை பயன்படுத்தும் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேற்றுமை உள்ளது, அதனை ஆதரிக்கின்ற அறிஞர்கள் கூட சில நிபந்தனைகளை விதித்துள்ளனர் என்பதனை இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் மிகச் சுருக்கமாக ஏனைய அறிஞர்களின் கருத்துக்களுக்கமைய முன்வைத்துள்ளார்கள். அதனை இமாம் ஸஹாவி அவர்கள் தமது “அல் கவ்லுல் பதீஃ” 195 ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
  • குறித்த பலவீனமான ஹதீஸ் மிகவும் பலவீனமான நிலையில் (ழஈபுன் ஜித்தன்) ஆக இருத்தல் கூடாது.
பொய் சொல்பவர்களோ, அதிக குளறுபடி உள்ளவர்களோ, பொய்யன் என சந்தேகிக்கப்படுபவர்களோ அந்த இஸ்னாத் – அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறக்கூடாது.
  • குறித்த அந்த ஹதீஸ் அமுல்படுத்தப்படுகின்ற அடிப்படையான ஒரு சட்டத்தின் கீழ் அமையப் பெற்றதாக இருக்க வேண்டும்.
  • குறித்த அந்த ஹீஸை அமல் செய்கின்ற போது அது அடிப்படையானது என்ற எண்ணத்தை தவிர்த்து அதன் போது பேணுதலை கடைப்பிடித்தல்.
மேலுள்ள சூரா வாகிஆவின் குறித்த சிறப்பை நிறுவுவதற்கு எந்த ஒரு ஸஹீஹான ஹதீஸ்களும் கிடையாது என்ற வகையில் இப்படியான ஒரு சிறப்பே வஹியில் சொல்லப்படவில்லை என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
                                                                அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி

கேள்வி : ஹிஜாமா என்பது நபிவழிமுறையா அல்லது நபியவர்களின் காலத்தில் காணப்பட்ட சிகிச்சை வழிமுறைகளில் ஒன்றா?
பதில் : ஹிஜாமா தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் இருவகையான கருத்துகள் நிலவுகின்றன;
முதலாவது கருத்து : ஹிஜாமா என்பது ஆகுமாக்கப்பட்ட உபாியான சுன்னாவாகும்.
“ஹிஜாமா செய்வது ஒவ்வொருவரின் மீதும் விரும்பத்தக்கதாகும்.” (அல்பதாவா அல்ஹின்திய்யா : 5/355)
இப்னு முப்லிஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : “ஹிஜாமாவைப் பொருத்தவரை அதனை செய்வது தொடர்பாகவும், அதன் சிறப்பு பற்றியும், அதனுடைய காலம் பற்றியும் அதிகமான பிரபல்யமான செய்திகள் உள்ளன. அவைகளில் ஒன்று நபியவர்களின் கூற்றாகவும் செயலாகவும் இருந்தது தான் 17, 19, 21 ஆம் தினங்களில் செய்வது.” (அல்ஆதாப் அஷ்ஷரஇய்யா : 3/87)
இக்கருத்துக்கு ஆதாரமாக ஹிஜாமா மற்றும் அதனால் நோய்நிவாரணம் உள்ளது போன்ற பொதுவாக வந்துள்ள ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
இரண்டாவது கருத்து : ஹிஜாமா என்பது இஸ்லாமிய ஷரீஆ முறையிலான பித்தியேகமான நன்மை தரக்கூடிய சிகிச்சையல்ல. மாறாக அது ஆகுமாக்கப்பட்ட சிகிச்சை வழிமுறைகளில் ஒன்று மாத்திரமே.
அல்காஸானீ அல்ஹனபீ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள் : “ஹிஜாமா என்பது விரும்பத்தக்க விடயமாகும்” (பதாஇஉஸ் ஸனாஇஃ : 4/190)
அல்கத்தாபீ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள் : “ஹிஜாமா என்பது ஆகுமான விடயமாகும். அத்துடன் அதிலே பயன்கள் இருப்பதுடன் உடலுக்குரிய நல்லவிடயங்களும் அடங்கியுள்ளன.” (மஆலிமுஸ் ஸுனன் : 4/103 , ஷரஹு இப்னு பத்தால் : 9/404 , அந்நிஹாயா பீ கரீபில் ஹதீஸி : 2/5)
இவ்விரண்டாவது கருத்திலிருந்து பின்வரும் விடயங்களை ஆதாரமாக எடுக்கலாம்;
  1. ஹிஜாமா என்பது இஸ்லாத்திற்கு முன்பு அரபிகள் அறிந்திருந்த ஒரு கிசிச்சை முறைகளில் ஒன்று மாத்திரமில்லாமல் வரலாற்று புத்தகங்களில் அறியப்பட்டது போன்று பிர்அவ்னுடைய காலம் போன்று அதற்கு முன்னைய சமூகங்களிலும் இச்சிகிச்சை முறை அறியப்பட்டிருந்தது. எனவே, இதற்கு இஸ்லாத்தில் என்று சிறப்பம்சம் கிடையாது. ஆகவே, ஹிஜாமா என்பது விரும்பத்தக்க ஒன்றாக இருப்பதுடன், மருத்துவத்திற்கான தேவை ஏற்படும்போது இதனை செய்யலாம்.
  2. வழமையான விடயங்கள், வாழ்க்கையின் பொதுவான செயற்பாடுகளாக கருதப்படக்கூடிய விடயங்களை பண்பாடுகளின் சிறப்புக்களுடன் தொடர்புபடுத்தாமல் வழமையான விடயம் என்ற வட்டத்தில் இருக்கின்றவரை அவைகள் அடிப்படையிலேயே ஆகுமானதாகும். எனவே, அவைகள் தொடர்ந்தும் ஆகுமானது என்ற வட்டத்திலேயே இருந்துகொண்டிருக்கும்.
  3. ஹிஜாமா செய்வதினால் பிரத்தியேகமான நன்மை கிடைக்கும் என்றோ, அல்லது அதனை செய்யாமல் விட்டுவிட்டால் தண்டனையோ, இழிவோ ஏற்படும் என்று நபியவர்களைத் தொட்டும் ஒருவிடயங்களும் வரவில்லை.
  4. ஹிஜாமாவினால் வணக்கவழிபாடு என்பதற்கோ அல்லது அதன் மூலம் அல்லாஹுத்தஆலாவை நெருங்குவதற்கு என்றோ எந்த நிலைப்பாடுகளும் கிடையாது. மாறாக அது மனிதர்களின் வழமையான வாழ்க்கை விடயங்களைப்போன்ற ஒரு விடயமாகவே உள்ளது.
எனவே இதன் மூலம் விளங்குவது என்னவென்றால்; இரண்டாவது கருத்தே மிகவும் ஏற்றமான கருத்தாகும். ஏனெனில், ஹிஜாமா என்பது மருத்துவ வழிமுறைகளில் ஒன்றாக இருக்கின்றது. ஆதலால் அதன்பால் தேவையுடையவன் வணக்கவழிபாடு என்ற அடிப்படையில் இல்லாமல் மருத்துவம், சிகிச்சை என்ற அடிப்படையில் அதனை செய்வான்.
அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : “ஹிஜாமா என்பது சுன்னாவல்ல அது ஒரு மருந்துவ கிசிச்சையாகும். எனவே, அதன்பால் மனிதர்கள் தேவையுடையவர்களாக இருந்தால் ஹிஜாமா செய்வார்கள். அதன்பால் தேவையில்லை என்று கருதக்கூடியவர்கள் ஹிஜாமா செய்யமாட்டார்கள்.” (மஜ்மூஉ பதாவா வ-ரஸாஇலில் உஸைமீன் : 23/96)
மேலும், ஹிஜாமாவின்பால் தேவையுடைய நோயாளிக்கு ஹிஜாமா சுன்னா என்று கூறுவதில் எந்தவித தடையும் கிடையாது. ஏனெனில் அவன் இரண்டு விடயங்களை ஒன்று சேர்ப்பவனாக இருப்பான்;
  • ஒன்று : மருத்துவம்
  • மற்றையது : ஹிஜாமாவின் மூலம் நோய்நிவாரணம் உள்ளது என அல்லாஹ்வின் தூதர் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், அவன் ஹிஜாமாவை பிரத்தியேகமாக தேர்ந்தெடுத்தான்.
இமாம் அந்நப்ராவீ அல்மாலிகீ (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : “ஹிஜாமாவின்பால் தேவை ஏற்படுகின்ற போது ஹிஜாமா செய்துகொள்வது விரும்பத்தக்கதாகும்.” (அல்பவாகிஹ் அத்தவானீ : 2/338) , (அல்-அதவீ பீ ஹாஷியதிஹி : 2/493)
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜாமாவின்பால் தேவையில்லாத சந்தர்ப்பங்களில் ஹிஜாமா செய்தார்கள் என்று ஹதீஸ்களில் கண்டு கொள்ளமுடியாது. மாறாக, நபியவர்கள் தனக்கு ஏற்பட்ட தலைவலி மற்றும் இதுபோன்ற வேறு நோய்களினால் பீடிக்கப்பட்டால் ஹிஜாமா செய்பவர்களாக இருந்துள்ளார்கள். எனவே, ஹிஜாமா என்பது அதன்பால் தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் செய்யப்படும் ஒன்றாக இருப்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே!
அரபியில் : https://islamqa.info/ar/answers/269871
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)

மையத்தை அடக்கி விட்டு மையத்தின் தலைமாட்டில் உட்கார்ந்து தல்கீன் என்ற பெயரில் ஓதுவது கூடுமா.?

                                                             மௌனவி அப்துல் ஹமீட் ஷரஈ 

"பெண்களை மதிப்போம்! அவர்களுக்கான உரிமைகளை வழங்குவோம்!" என்று சிலர் இன்றைக்கு பேசிக்கொண்டிருப்பதை நாம் காண முடிகிறது. ஆனால், இத்தகைய பேச்சுக்கு உயிரோட்டம் கொடுக்கக்கூடியவர்களை இச்சமுதாயத்தில் நாங்கள் காண இயவில்லை! 

ஒருபுறம் பெண்ணுரிமையை பேசக்கூடிய இவர்கள், இதற்கு ஊறுவிளைவிக்கும் காரணியை மறுபுறத்தில் இருந்து கணகச்சிதமாக செய்துவிடுகின்றனர். இதிலும், "சமூக சீர்திருத்தவாதிகள்" என்று இவர்கள் தங்களை அழைத்துக்கொள்வதுதான் பெரும் வேடிக்கையாக உள்ளது. 

ஆதி மார்க்கமான இஸ்லாமோ கல்வி, இல்லறம், குழந்தை பங்கீடு, சொத்துரிமை என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான உரிமைகளை முறையாக வழங்கி அவர்களை சிறப்பித்து போற்றுகிறது. 

பெண் குழந்தைகளை சாபக்கேடாக நினைத்து அவர்களை கொல்லக்கூடிய அறியாமை நிலை இன்றைக்கும் சமூகத்தில் தொற்றிக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ நடவடிக்கைகளை அரசாங்கமும், தனி மனிதர்களும் மேற்கொண்டும்கூட இவ்விடயத்திற்கு முழு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. இந்நிலையை முழுமையாக மாற்றியமைத்து, பெண் பிள்ளை பிறப்பதை நற்செய்தியாக கூறச்செய்த ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! 

"வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்." (அல்குர்ஆன் 17:31)

"அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்."

"எதைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காகத் தம் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா.? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?"
(அல்குர்ஆன் : 16: 58,59)

பெண் குழந்தைகள் பிறப்பதை இச்சமூகம் வெறுப்பதற்கான பிரதான காரணம் "வரதட்சணையே!". இதனால்தான் இன்றைக்கு திருமண வயதை தாண்டியும் திருமணமே ஆகாமல் பல பெண்கள் இச்சமூகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஒருகணம் இதை நினைக்கும்போது மிகக்கவலையாக உள்ளது. 

சீர்த்திருத்தவாதிகள் என்று மார்தட்டிக்கொள்வோர் இவ்விடயத்தை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். அது ஏனென்றுதான் தெரியவில்லை(?) 

இஸ்லாத்தில் வரதட்சணை எனும் முறை தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்ணுக்கான தேவையை மணமகனே பூர்த்திசெய்து அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென இஸ்லாம் கட்டளை பிறப்பித்துள்ளது. இதற்கு "மணக்கொடை" என்றும் பெயரிட்டுள்ளது.

"நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடைகளை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள்!"
(அல்குர்ஆன் : 4:4)

அடுத்ததாக, ஒரு பெரும் குற்றச்சாட்டு இஸ்லாமிய சமூகத்தை நோக்கி வைக்கப்படுகிறது. அது என்னவென்றால்,  'ஆடை முறையின் மூலம் இஸ்லாமிய பெண்கள் அடிமைப்படுகிறார்கள்' என்பதே! 

இஸ்லாம் கூறும் கண்ணியமான ஆடைமுறையை 'அடிமைத்தனம்' என்று விமர்சிக்கக் கூடியவர்கள் யாரென்றால் மேற்கத்திய ஆடை கலாச்சாரங்களை அப்படியே சரிகாணக்கூடியவர்கள்தாம்! 

ஆடைச் சுதந்திரம் என்கிற பெயரில் அறைகுறை ஆடையணிந்து உலாவுவதால்தான் கற்பழிப்பும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் இன்றைய சமூகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது (!)  

உண்மையில் இஸ்லாம் கூறும் ஆடைமுறையான "ஹிஜாப்" மட்டுமே பெண்களை பல தீய விளைவுகளிலிருந்து காக்கக்கூடிய கேடயமாக உள்ளது. 

முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்..." (அல்குர்ஆன் : 24:31)

இப்போது கூறுங்கள்... பெண்களுக்கு பாதுகாப்பான ஆடைமுறை எது?
கண்ணியமான ஹிஜாப் ஆடையா.?? (அல்லது) மேற்கத்திய அறைகுறை ஆடையா..??

அடுத்ததாக, பெண் பிள்ளைகளை ஆண் பிள்ளைகளுடன் ஒப்பிட்டு தாழ்வாகக் கருதக்கூடிய நிலை இன்றைக்கு சில மக்களிடத்தில் காணப்படுகிறது. இவ்வாறான செயல்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :"ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும், கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தைகளுடன் ஒப்பிட்டு வேறுபாடு காட்டாமலும் இருந்தால், இறைவன் அவனைச் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்”. (நூல்: அபூதாவூத்)

மேலும், ஆண் - பெண் ஒப்பீட்டின் மூலம் பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்படும் இடத்தில்கூட பெண்களுக்கான உரிமைகளை இஸ்லாம் வழங்கச் சொல்லியுள்ளது. 
‏ 
"பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்." (அல்குர்ஆன் : 4:7)

இஸ்லாம் பெண்களை கல்வி கற்க தூண்டுவதில்லை என்று ஒருபுறத்தில் சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இஸ்லாத்தை முறையாக படிக்காமலே இத்தகைய நச்சுக்கருத்துகளை சமூகத்தில் விதைக்கிறார்கள். 

கல்விக்கான முக்கியத்துவத்தை இஸ்லாம் கொடுத்துள்ளதை போன்று உலகில் வேறு எந்த மார்க்கத்திலும் கொடுக்கப்படவில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.?

இதோ நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

"கல்வியை தேடிப்பெறுவது ஒவ்வொரு முஸ்லிமான (ஆண், பெண்) மீதும் கட்டாயக் கடமையாகும்! (நூல் : இப்னுமாஜா)

இவ்வாறாக எல்லா ரீதியிலும் பெண்களுக்கான உரிமைகளை இஸ்லாம் குறைவில்லாமல் வழங்கி போற்றியுள்ளதை நாம் மேற்கண்ட செய்திகளின் வாயிலாக அறியமுடிகிறது.  மேலும், 'இஸ்லாமிய பெண்ணடிமைத்தனம்' என்பது ஓர் போலியான வாதம் என்பதும் நமக்கு கண்கூடாக விளங்குகிறது. 

பெண்களை கண்ணியப்படுத்திய இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி நீங்களும் வாருங்கள்! எல்லாம் வல்ல இறைவன் நமக்கு ஈருலகத்திலும் வெற்றியை தருவானாக...

                                                                                     ஆக்கம் : R. ரய்யான் 

விபச்சாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் – பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.திருமணம உறவிற்குப் பாலமாக அமைவது திருமணம் தான். ஆனால் பெரும் பாலான இஸ்லாமி யர்களுக்கு மத்தியில் இந்தத் திருமணங்கள் தான் ஓரிறைக் கொள்கை யைக் குழிதோண்டிப் புதைக்கும் களங்களாகத் திகழ்கின்றன. அதை விடக் கொடியதான இணை வைப்புக் காரியங்கள் தான் நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களின் ஒவ்வொரு நிகழ்விலும் நிறைந்து காணப் படுகின்றன.

இத்தகைய காரியங்கள் நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளி விடும் என்பதை அறியாமல் ஆண்களும், பெண்களும் இவற்றைச் செய்கின்றனர்.


குடும்பம் என்பதே, ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கோப்பு ஆகும். குடும்ப வாழ்க்கை தழைத்தால்தான், சமூகம் வளரும், நாடு சுபிட்சம் பெறும், உலகம் தழைக்கும்..! அத்ததைகய குடும்ப வாழ்வின் உன்னத தாத்பர்யங்களை அழகாய் வடிவமைத்திருக்கின்றது. அதனை பேணி நடைமறைப்படுத்தக்கூடிய வழிமுறைகளையும் தனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாகக் காட்டித் தந்துள்ளது..!அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும்அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்அன்னாரின் குடும்பத்தினர்அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.  


“ரஜப் மாதமும் அதில் கூறப்பட்டவைகளும்” என்ற இந்த கையேட்டுப்பிறதியின் அரபியின் மூலவடிவம் அஷ்ஷெய்க் அலவி பின் அப்துல் காதிர் அஸ்-ஸக்காப் அவர்களின் மேற்பார்வையின் கீழ் அத்துரர் அஸ்ஸனிய்யாவின் அறிவியல் பிரிவால் தொகுக்கப்பட்டு அவர்களின் உத்தியோகபூர்வமான இணையதளமான “அத்துரர் அஸ்ஸனிய்யா” என்ற வலைதளத்தில் காணக்கிடைத்தது.
இது 05 பக்கங்களை கொண்ட சிறிய நூலாக இருந்தாலும் அதில் பலவிடயங்கள் காலத்திற்கு தேவையான அமைப்பில் தொகுக்கப்பட்டிருந்தன. எனவே இவைகளை தமிழ் பேசும் சசோதரர்களும் இதன் பயனை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் 18-03-2018 (ஹிஜ்ரி 1439 ரஜப் 01) ஆம் திகதி தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
இதில் உள்ள விடயங்கள் எனது சக்திக்குற்பட்ட விதத்தில் அல்லாஹ்வின் உதவியால் “மொழிபெயர்ப்பு” என்பதை விட “மொழியாக்கம்” செய்துள்ளேன். ஏனெனில் இரண்டுக்கும் மத்தியில் வேறுபாடுகள் இருக்கின்றன. “மொழிபெயர்ப்பு” என்றால் ஒன்றில் கூறப்பட்ட விடயத்தை ஒவ்வொரு சொல்லாக (Word to Word) மொழிபெயர்ப்பு செய்யவேண்டும். இப்படி சொல்லுக்கு சொல் (Word To Word) மொழிபெயர்க்கின்றபோது சிலபோது அதன் ஆசிரியர் கூறவந்த விடயங்களை பெரும்பாலும் தெளிவாக எடுத்துக்காட்ட முடியாமல், “தொக்கிநிற்கும் வசனங்களாக” பெரும்பாலும் நின்றுவிடும். எனவேமொழியாக்கம் செய்கின்ற போது அதாவது நூலாசிரியர் அல்லது அதன் தொகுப்பாளர் கூறக்கூடிய விடயங்களை அப்படியாக எங்களின் தாய் மொழியில் வெளிக்கொணர்கின்றபோது வாசிப்பவர்களுக்கு இலகுவாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. -இன்ஷா அல்லாஹ்-
எனவேஇந்த சிறிய கையேட்டுப்பிரதியின் மூலம் “ரஜப் மாதம் சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைப்பாடு எப்படிப்பட்டது?” மற்றும் அதிலே “இஸ்லாத்தின் பெயரால் நிகழக்கூடிய பித்அத் (நூதண) செயற்பாடுகள் எவைகள்?” என்பதை விளங்கி நபியவர்களின் வழிகாட்டுதலில் அடிப்படையில் எம் வாழ்வை அமைத்துக்கொள்ள வல்லவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக!
முன்னுரை:
அல்லாஹுத்தஆலா சில நாட்களையும் இரவுகளையும் மாதங்களையும் சிலதை விட இன்னும் சிலதை சிறப்பித்து வைத்துள்ளான். இவைகள் அவனின் பாரிய ஞானத்தின் அடிப்படையிலாகும். அந்த அடிப்படையில் மாதங்களுக்கு மத்தியில் சிறப்பு மிக்க மாதங்களாக 04 மாதங்களை அல்லாஹுத்தஆலா தெரிவு செய்துள்ளான். இதனை அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகிறான் :
“வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் (ஒரு வருடத்திற்கு) 12 மாதங்களாகும். அவற்றில் 04 மாதங்கள் புனிதமானவையாகும். (இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுதவற்குரிய) அதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே அவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்.” (அத்தவ்பா : 36)
எனவே துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய 04 மாதங்களும் புனிதமிக்க மாதங்களாகும். அவைகளில் நான்காவது புனிதமிக்க மாதமாக ரஜப் மாதம் இருக்கின்றது. அந்த மாதம் இஸ்லாமிய வருட அடிப்படையில் 07 ஆவது மாதமாக கருதப்படுகிறது.
அபீ பக்ரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜின்போது பிரசங்கம் நிகழ்த்தினார்கள் அவர்களின் பிரசங்கத்தில் கூறினார்கள், அல்லாஹுத்தஆலா வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை துல்கஃதா, துல்ஹஜ்,முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானிக்கும் ஷஃபானுக்கும் இடையிலுள்ள முழர் குலத்து “ரஜப்” மாதமாகும். (புஹாரி : 4662)
இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: 
“புனிதமிக்க மாதங்களாக 04 மாதங்கள் உள்ளன. அவைகளில் 03 மாதங்கள் தொடர்ந்து வரக்கூடிய அடுத்த அடுத்த மாதங்களாகும். அவைகளில் ஒன்று மாத்திரம் தனித்துவரக்கூடிய மாதமாக உள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளை நிறைவேற்றுவதற்காக ஹஜ்ஜுடைய மாதத்திற்கு முன்னரான துல்கஃதா மாதம் புனிதமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் துல்கஃதா மாதத்தில் போராடுவதை விட்டும் தவிர்ந்துகொள்வார்கள். இன்னும் துல்ஹஜ் மாதத்தில் ஹஜ்ஜுடைய கிரியைகளில் ஈடுபடுவார்கள். மேலும் அதன்பிறகு வரக்கூடிய மாதமான முஹர்ரம் மாதம் புனிதமாக்கப்பட்டுள்ளது. 
ஏனெனில்அந்த மாதத்தில் ஹஜ்ஜிற்காக உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்த மனிதர்கள் தங்களுடைய நாடுகளுக்கு பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என்ற அடிப்படையிலாகும். இன்னும் வருடத்தின் நடுப்பகுதியல் வரக்கூடிய ரஜப் மாதத்தில் கஃபாவை தரிசிப்பதற்கும் அங்கே உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கும் அரபியதீப கற்பத்தின் தூரபகுதியிலிருந்து வரக்கூடியவர்கள் வந்து தரிசித்துவிட்டுபாதுகாப்பாக தங்களுடைய நாடுகளுக்கு திரும்பவேண்டும் என்ற அடிப்படையிலும் ரஜப் மாதம் புனிதமாக்கப்பட்டுள்ளது. 
(தப்ஸீர் இப்னு கஸீர் 4-148)
இன்னும் சில அறிஞர்கள் கூறுகின்றார்கள், ரஜப் மாதத்தில் நிகழக்கூடிய பாவங்கள் பாரிய விடயமாக கருதப்படும். ஏனெனில்அது புனிதமிக்க மாதங்களில் ஒன்றாக உள்ளது. அதேபோன்று இந்த மாதத்தில் மனிதனால் நிகழக்கூடிய அநியாயங்கழும் பாரிய விடயமாகவே கருதப்படும். அதனை மனிதன் தனக்குத்தானே செய்துகொண்ட அநியாயமாகவும் இருக்கலாம் அல்லது பிறருக்கு செய்த அநியாயமாகவும் இருக்கலாம். இதனை அல்லாஹுத்தஆலா இப்படியாக குறிப்பிடுகின்றான்:
“வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் (ஒரு வருடத்திற்கு) 12 மாதங்களாகும். அவற்றில் 04 மாதங்கள் புனிதமானவையாகும். (இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுதவற்குரிய) அதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே அவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்.” (அத்தவ்பா : 36)
இதில் நாடவருவது புனிதமிக்க 04 மாதங்களில்ல மாறாக 12 மாதங்களாவும் இருக்கலாம்.
அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மானம் அஸ்ஸஃதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது தப்ஸீரிலே “அவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்.” என்ற வசனத்தை குறிப்பிடுகின்ற போது : இதில் வரக்கூடிய கூட்டுப்பெயர் 12 மாதங்களை சுட்டிக்காட்டக்கூடியதாக இருக்க வாய்ப்பு உள்ளது ஏனெனில் அவனை கட்டுப்படுவதின் மூலம் வாழ்க்கையை கொண்டு செல்லவும் அவைகளை 12 மாதங்களைக் கொண்டு அவனுக்கு வழங்கிய அருளுக்கு நன்றிசெலுத்தும் பொருட்டும் இன்னும் அதிலே அடியார்களின் நலன்களுக்கு தீர்வு கொடுப்பதற்கான நிர்ணயிக்கப்பட்ட காலமாக அந்த 12 மாதங்களையும் தனது அடியார்களுக்கு ஆக்கியதாக அல்லாஹுத்தஆலா தெளிவுபடுத்துகின்றான். எனவே அதிலே நீங்கள் உங்களுக்கு அநீதமிழைத்துக் கொள்வதை தவிர்ந்து கொள்ளுங்கள்.
இன்னும் இதில் வரக்கூடிய சுட்டுப்பெயர் புனிதமிக்க 04 மாதங்களையும் சுட்டிக்காட்டக்கூடியதாகவும் இருக்க சந்தர்ப்பம் உள்ளது. ஏனெனில் பொதுவாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் அநீதி இழைப்பது என்பது தடுக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருக்கின்றது. அதிலும் இந்த 04 மாதங்களில் அநீதி இழைப்பது என்பது குறிப்பாக தடுக்கப்பட்டதாக உள்ளதுடன் அனுமதிக்கப்படாத ஒன்றாகவும் காணப்படுகின்றது. எனவேஇந்த 04 மாதங்களில் அநீதி இழைப்பது என்பது மற்ற மாதங்களில் அநீதி இழைப்பதை விட மிகவும் பாரதூரமான விடயமாகும்.
“ரஜப்” என்று பெயர் சூட்டப்படுவதற்கான காரணம்:
ரஜப் என்றால் “கண்ணியப்படுத்தப்பட்டது” என்ற கருத்தைத்தரும். ஏனெனில் ஜாஹிலிய்யா காலத்தில கூட இந்த மாதத்தை கண்ணியப்படுத்தினார்கள். இதிலே போரிடுவதை ஆகுமாக்கிக்கொள்ளவில்லை.
ரஜப் மாதத்தை “முழர் கோத்திரத்து” ரஜப் என்றும் “காதுகேலாத ரஜப்” என்றும் கூறக் காரணம்:
முழர் கோத்திரத்துடன் இணைக்கப்பட்டதற்கான காரணம்: ஏனெனில் அந்த கோத்திரம் இந்த மாதத்ததை அதிகமாக கண்ணியப்படுத்துவதுடன் புனிதப்படுத்தியது. ஆதலால்தான் இந்த ரஜப் மாதம் அந்த முழர் கோத்திரத்துடன் ஒன்றினைத்து கூறப்பட்டது.
இப்னு கஸீர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: ஜுமாதஸ்ஸானிக்கும் ஷஃபானுக்கும் இடையிலுள்ள முழர் குலத்து “ரஜப் மாதம்” என்ற வார்த்தையை விளக்குகின்றபோது, “அது முழர் கோத்திரத்துடன் இணைக்கப்பட்டது ஏனென்றால் அது தான் ஜுமாதுஸ்ஸானிக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் உள்ள மாதம் என்பதை தெளிவுபடுத்துவதற்காகவேயாகும்.

மாறாக ரபீஆ கோத்திரம் நினைப்பதைப் போன்று புனிதமிக்க ரஜப் என்பது ஷஃபானுக்கும் ஷவ்வாலுக்கும் மத்தியில் வரக்கூடியதல்ல. அவைகளுக்கு மத்தியில் வரக்கூடியது இன்றைய ரமழான் மாதமாகும். எனவே அதனை தெளிவுபடுத்தும் நோக்கத்திலேயே “அது ரபீஆ கோத்திரத்து ரஜபில்லை மாறாக அது முழர் கோத்திரத்து ரஜபாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகக் கூறினார்கள். (தப்ஸீர் இப்னு கஸீர் 03-148)
காதுகேலாத ரஜப் என்று கூறப்பட்டதற்கான காரணம் : ஏனெனில் இந்த மாதத்தில் ஆயுதங்களின் சப்தங்கள் கேட்கப்படாது என்ற காரணத்தினாலாகும்.
ரஜப் மாதத்தில் ஏதேனும் சிறப்பான வணக்கவழிபாடுகள் உள்ளனவா?
ரஜப் மாதத்தில் மாத்திரம் குறிப்பான பிரத்தியேகமான வணக்கவழிபாடுகள் என்ற ஒன்று குறிப்பிடப்பட்டதாக வரவில்லை. அதிலே சில ஸலவாத்துக்கள் என்றும் பிரார்த்தனைகள் என்றும் வரக்கூடிய அறிவிப்புக்கள் அனைத்துமே ஆதாரபூர்வமற்றது. அவைகளைப் பற்றி கீழே விளக்கமாகப் பார்ப்போம்.
அல்ஹாபில் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ரஜப் மாதத்தின் சிறப்பு சம்பந்தமாகவோ அல்லது அதிலே நோன்பு நோற்பது சம்பந்தமாகவோ அல்லது அவைகளில் குறிப்பிட்ட சில நோன்புகள் நோற்பது பற்றியோ அல்லது அதிலே குறிப்பிட்ட இரவில் நின்று வணங்குவது சம்பந்தமாகவோ எந்தவித ஆதாரபூர்வமான ஹதீஸ்களோ வரவில்லை. மேலும் “அல்ஹாபில் அபூ இஸ்மாஈல் அல்ஹரவி” அவர்களும் எனக்கு முன்னர் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள்.” (தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் – இப்னு ஹஜ்ர் – பக்கம் 23)
இன்னும் கூறினார்கள்: ரஜப் மாத சிறப்பைப் பற்றியோ அல்லது அதில் நோன்பு நோற்பது பற்றியோ அல்லது அதில் சில நாட்கள் தெளிவாக நோன்பு நோற்பது பற்றி வரக்கூடிய ஹதீஸ்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்: ஒன்று பலவீனமானது மற்றையது இட்டுக்கட்டப்பட்டது. (தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் – இப்னு ஹஜ்ர் – பக்கம் 23)
ரஜப் மாதத்தில் செய்யக்கூடிய பித்அத்தான செயற்பாடுகள் :
மக்கள் மத்தியிலும்அதிகமான இஸ்லாமிய நாடுகளிலும் இந்த மாதத்துடன் தொடர்பான சில பித்அத்கள் மக்கள் மத்தியில் பரவியுள்ளன. அவைகளில் சில பித்அத்கள்
முதலாவது : அர்-ரஆஇப் தொழுகை (صلاة الرَّغائب)
இது வெறுக்கத்தக்க ஒரு பித்அத்தான தொழுகையாகும். இமாம் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : “வெறுக்கத்தக்க விடயங்கள் நிரம்பிய அருவருப்பான மிகவும் வெறுக்கத்தக்க பித்அத்தான தொழுகையாகும். எனவே அதனை விடுவதும் அதனை புறக்கணிப்பதும் அவசியமாவது போல் அதனை செய்பவர்களையும் வெறுக்கவேண்டும்.” (பதாவா அல்இமாம் அந்நவவி – பக்கம் 63)
இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : (அர்-ரஆஇப் தொழுகையைப் பொருத்தவதை அது எந்தவித அடிப்படையும் கிடையாது. அதுமாத்திரமின்றி அது ஒரு பித்அத் ஆகும். அத்தொழுகையை தனியாகவோ கூட்டாகவோ தொழுவதற்கு விரும்பத்தக்கதல்ல) (மஜ்மூஉல் பதாவா 23-132)
இரண்டாவது : ரஜப் மாதத்தை நோன்பைக் கொண்டோ அல்லது இஃதிகாப் இருப்பதைக் கொண்டோ சிறப்பிப்பது.
சில மனிதர்கள் ரஜப் மாதத்தை நோன்பைக் கொண்டும் அல்லது இஃதிகாபைக் கொண்டும் சிறப்பிப்பது சில பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையிலேயாகும்.
இப்னு ரஜப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ரஜப் நோன்பைப் பொருத்தவரை நபியவர்கள் மூலமகவோ அல்லது ஸஹாபாக்கள் மூலமாகவோ ரஜப் நோன்பின் சிறப்பு என்று குறிப்பிட்டு வரக்கூடிய எவைகளும் ஆதாரபூர்வமற்றதாகும்.” ( லதாஇபுல் மஆரிப் – பக்கம்118)
இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ரஜப் மற்றும் ஷஃபான் மாதங்களை நோன்பைக் கொண்டோ அல்லது இஃதிகாபைக் கொண்டோ சிறப்பிப்பது சம்பந்தமாக நபியவர்களைத் தொட்டோ அல்லது ஸஹாபாக்களைத் தொட்டோ அல்லது இமாம்களைத் தொட்டோ ஒருவிடயமும் வரவில்லை.” (மஜ்மூஉல் பதாவா : 25-290)
எச்சரிக்கை: குறிப்பாக ரஜப் நோன்பு சிறப்பு பற்றி வரவில்லை என்பதின் கருத்து என்னவென்றால் அம்மாதத்தில் மேலதிக சுன்னத்தான நோன்புகள் கிடையாது என்பதல்ல மாறாக ஆதாரங்களின் அடிப்படையில் வேறு மாதங்களில் நோற்கக்கூடிய சுன்னத்தான உபரியான நோன்புகள் இம்மாதத்திலும் நோற்கப்படும். அந்த உபரியான நோன்புகள் ரஜப் மாதம் மற்றும் ஏனைய மாதங்களில் நோற்கப்படக்கூடிய பொதுவான நோன்புகளாகும்.
மேலும் இம்மாதத்தில் நோன்பு நோற்பது தடுக்கப்படுவதை 03 அடிப்படைகளில் பார்க்கலாம் :
1- முஸ்லிம்கள் ஒவ்வொரு வருடமும் இம்மாதத்தில் நோன்பு நோற்பதை பிரத்தியேகமானதாக ஆக்கியிருந்தால்.
2- உபரியான சுன்னத்தான நோன்புகளைப்போன்று இம்மாதத்திலும் பிரத்தியேகமான சுன்னத்தான நோன்புகள் நபியவர்களின் ஆதாரபூர்வமான வழிகாட்டலின் அடிப்படையில் வந்துள்ளன என்று உள்ளத்தால் ஏற்றுக்கொண்டு செயற்படுதல்.
3- இம்மாதத்தில் நோற்கப்படக்கூடிய நோன்புகளுக்கு மற்ற மாதங்களைவிட பிரத்தியேகமான சிறப்பான கூலிகள் உள்ளன என்று உறுதிகொள்ளல்.
மூன்றாவது : அல்-இஸ்ராஃ வல்-மிஃராஜ் தினத்தை அடிப்படையாகக் கொண்டு விழா கொண்டாடுதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவிலிருந்து அக்ஸா பள்ளிவாயல் வரை இரவோடிரவாக இஸ்ராஃ பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்து ஏழு வானங்களுக்கு மேல் உயர்த்தப்பட்டது அவர்களுக்கு அல்லாஹ்வால் நிகழ்த்தப்பட்ட பாரிய அற்புதங்களில் ஒன்றாகும். இத்தினத்தை (இஸ்ராஃ – மிஃராஜ்) ஞாபகப்படுத்தும் நோக்கில் சில நாடுகளில் ரஜப் மாதம் 27 ஆம் இரவன்று விழா கொண்டாடுவது பரவிக்காணப்படுகின்றது.
இப்னு தஹிய்யாவைத் தொட்டும் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “இஸ்ராஃ பயணம் ரஜப் மாதத்தில் நடைபெற்றது என்று சில கதை கூறுபவர்கள் கூறுகின்றார்கள் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள் : அது பொய்யாகும் என்றார்கள்.” (தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் – இப்னு ஹஜ்ர் – பக்கம் 23)
இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “(இஸ்ராஃ – மிஃராஜ் நிகழ்வு) ரஜப் மாதத்திலோ அல்லது அதன் பத்திலோ அல்லது அதிலே குறிப்பிட்ட ஒரு தினத்திலோ நடைபெற்றது என்பதற்கான எந்தவித அறியப்பட்ட ஆதாரங்களும் இல்லை. மாறாக அது சம்பந்தமாக வரக்கூடியவைகள் வித்தியாசமாக அறிவிப்பாளர்கள் துண்டிக்கப்பட்டதாக இருக்கின்றது. இவைகளைக் கொண்டு தீர்க்கமான முடிவை எடுக்கமுடியாது. இன்னும் இஸ்ராஃ இரவு என்று எண்ணிக்கொண்டிருக்கும் இரவில் நின்று வணங்குவதைக்கொண்டோ அல்லது வேறு விடயங்களைக்கொண்டோ அவ்விரவை பிரத்தியேகமாக சிறப்பிப்பது முஸ்லிம்களுக்கு ஆகுமாக்கப்படவில்லை.” (ஸாதுல் மஆத் இப்னுல் கையிம் 1-58)
நான்காவது : ரஜபில் அறுத்துப்பலியிடுவது (அல்அதீரா) அல்லது (அர்ரஜபிய்யா)
அல்அதீரா : அல்அதீரா என்றால் ரஜப் மாதத்தின் முதல் 10 இல் சிலைகளுக்காக அறுக்கப்படும் பிராணியைக் குறிப்பிடப்படும். இன்னும் அதன் இரத்தத்தினை தலையில் ஊற்றிக்கொள்ளப்படும். இந்த செயற்பாடுகள் ஜாஹிலிய்யா கால செயற்பாடுகளாகும். அவர்களில் சிலர் ஒரு விடயத்தை வேண்டினால் அந்த வேண்டுதல் நிறைவேற்றப்பட்டால் தனது செம்மறி ஆடுகளில் இப்படி இப்படியாக ரஜபில் அறுப்பேன் என்று நேர்ச்சை வைப்பார்கள்.
நிச்சயமாக இஸ்லாம் இந்த அதீராவை நீக்கிவிட்டது அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள் : “இனி தலைக் குட்டியைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கையும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில் பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை.”
(ஆதாரம்: புஹாரி – 5473)
அல்ஹஸன் அவர்கள் கூறினார்கள் : “இஸ்லாத்தில் அதீரா இல்லை நிச்சயமாக அதீரா என்பது ஜாஹிலிய்யா காலத்தில் இருந்தது. அவர்களில் ஒருவர் ரஜபில் நோன்பு நோற்று அதன் முதல் பத்தில் அறுத்துப்பலியிடுவார்கள்.”
 (லதாஇபுல் மஆரிப்இப்னு ரஜப் – பக்கம் : 118)
இப்னு ரஜப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : “ஒரு விஷேட தினத்திலோ அல்லது பெருநாள் தினத்திலோ இணிப்புப்பண்டங்களை சாப்பிடுவதைப் போன்று அருப்புப் பிராணியை ரஜபில் காட்சிப்படுத்துவார்கள் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டது ரஜபை பெருநாள் தினமாக எடுத்துக்கொள்வதை அவர்கள் வெறுத்தார்கள்.” (லதாஇபுல் மஆரிப்இப்னு ரஜப் – பக்கம் : 118)
என்றாலும் மற்ற மாதங்களில் அறுப்பதைப்போன்று இம்மாதத்திலும் பொதுவாக அறுப்பது என்பது தடுக்கப்பட்ட ஒன்றாகாது.
ஐந்தாவது : ரஜபில் உம்ரா
சில மனிதர்கள் ரஜபில் உம்ரா கடமையை நிறைவேற்றுவதில் மிகவும் கரிசணை செலுத்துகின்றார்கள். ஏனெனில் அந்த மாதத்தில் நிறைவேற்றப்படும் உம்ராவிற்கு அதிகமான நன்மைகள் கிடைப்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்ற காரணத்தினாலாகும். இந்த நிலைபாட்டிற்கு எந்தவித அடிப்படையும் கிடையாது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜபில் உம்ரா செய்யவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத்தொட்டும் ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “-நபியவர்கள்- ஒருபோதும் ரஜபில் உம்ரா செய்தது கிடையாது.” (ஆதாரம் : புஹாரி -1775)
இப்னுல் அத்தார் அவர்கள் கூறினார்கள் : “மக்காவாசிகளின் செயற்பாடுகளில் ஒன்றாக அவர்கள் ரஜபில் அதிகமாக உம்ரா செய்யும் வழமையுடையவர்கள் என்ற செய்தி என்னை வந்தடைந்தது. அதனைப் பொருத்தவரை அதற்கு எந்தவித அடிப்படையும் இருப்பதாக நாம் அறியமாட்டேன்.” (முஸாஜலா இல்மிய்யா பைனல் இமாமைனில் ஜெலீலைனி அல்-இஸ்ஸ{த்தீன் பின் அப்துஸ் ஸலாம் வ இப்னுஸ் ஸலாஹ் பக்கம் : 56)
ஆறாவது : இந்த மாதத்தில் நிகழ்ந்த ஏதேனும் நிகழ்வுகள் உள்ளனவா?
இப்னு ரஜப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : “ரஜப் மாதத்தில் பாரிய நிகழ்வுகள் நிகழ்ந்தன என்று அறிவிக்கப்படுகின்றன. என்றாலும் அவைகளில் எவையுமே ஆதாரபூர்வமானதல்ல. இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மாதத்தின் முதல் தினத்தில் பிறந்தார்கள் என்றும் இதன் 27 ஆவது தினத்திலே அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்தது என்றும் கூறப்படுகின்றது (சில இடங்களில்) 25 ஆவது தினம் என்றும் கூறப்படுகின்றது. இவைகளில் எவையும் ஆதாரபூர்வமானதல்ல.”(லதாஇபுல் மஆரிப் – இப்னு ரஜப் பக்கம் : 121)
அல்லாஹ் எமது பணியை பொருந்திக்கொள்வனாக…………

அரபியில் : அஷ்ஷெய்க். அலவி பின் அப்துல் காதிர் அஸ்-ஸக்காப் அவர்களின் மேற்பார்வையின் கீழ் அத்துரர் அஸ்ஸனிய்யாவின் அறிவியல் பிரிவால் தொகுக்கப்பட்டது.
(من إعداد القسم العلمي بمؤسسة الدرر السنية وتحت إشراف الشيخ علوي بن عبدالقادر السقاف)
தமிழில் : ரஸீன் அக்பர் மதனீ (அழைப்பாளர், தபூக் அழைப்பு நிலையம் – சவூதி அரபியா)
ترجمة: محمد رَزِين محمد أكْبر (خريج كلية الحديث الشريف والدراسات الإسلامية والدبلوم العالي في التوجيه والإرشاد بالمدينة المنورة)

இன்றைய காலகட்டத்தில் எமது ஒட்டு மொத்த மனித சமுதாயமும் நவீன உலகின் புதுமைகளை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது .
அவைகளை அடியொட்டி பின்பற்ற வேண்டும் என்ற விடயத்தில் ஆர்வமுள்ளவர்களாகவும், அதுவே தங்களின் வாழ்க்கையின் இலட்சியம் போல் வாழ்பவர்களாகவும் முஸ்லிம்களும் உள்ளனர் என்பது கவலைக்குரிய விடயம்.
இதனால் அவர்களுக்கென்று அல்லாஹ்வால் வழங்கப்பட்ட நன்னடத்தைகள் , செயற்பாடுகள் மற்றும் அவனுடைய அருள்கள், ஏன் அவனால் வழிகாட்டப்பட்ட நேர்வழியைக் கூட மாற்றிக்கொள்வதற்கு எம் சமுதாயம் தயாராகின்றது என்பதும் ஆச்சரியப்படவேண்டிய விடயமல்ல.
இவ்வாறான இவர்களின் மாற்றங்களுக்கும், புதுமைகளுக்கும் இவர்கள் சூட்டிய பெயர்தான் “ நாகரீகம் “ .. . இதனாலோ என்னவோ இந்த நாகரீகத்தை விட்டும் அல்லாஹ் விடம் பாதுகாப்புத் தேடி, அவனது நேர்வழியைத் தேடிச் செல்லும் மனிதர்களை “நாகரீகம் இல்லாதவன்” என்று இவர்கள் வாய் கூசாமல் சொல்லிக் கொள்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் தன் உயிர் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன் எவ்வாறெல்லாம் ஆடம்பரமான, நாகரீகமான வாழ்க்கையை வாழ முடியுமோ அவ்வாறு வாழ்ந்து இவ்வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆளுக்காள் போட்டிபோட்டு; சண்டையிட்டு சுயநலத்திற்காக பிரிவுகளையும் பகைமைகளையும் உருவாக்க எம் சமூதாயம் தயாராகிவிட்டது.
இவ்வாறான இந்த மாற்றங்களினதும், புதுமைகளினதும் மையம் என்ன? இவை எங்கிருந்து ஆரம்பமானது? என்பதை எம்மில் பலர் சிந்திக்கத் தவறிவிட்டோம்.
ஆனால் சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் எம் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்யத் தவறவில்லை:
உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றுவீர்கள் எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள். அதற்கு சஹாபாக்கள்: “அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “வேறு யாரை” என்று கேட்டார்கள். (புகாரி – 7320)
எவர்களின் வாசனை கூட எம்மில் படக் கூடாது என எம் தூதர் (ஸல்) அவர்கள் எமக்கு எச்சரிக்கை செய்தார்களோ அந்த யூத கிறிஸ்தவர்களின் வழிமுறையைத் தான் இன்று நாகரீகம் என்ற பெயரில் நாம் எம் மத்தியில் அரங்கேற்றுகிறோம்.
மக்கள் சாரை சாரையாக புனித மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவதை தாங்கிக்கொள்ள முடியாத அந்த சமூகம் முஸ்லீம்களை இந்த மார்க்கத்தை விட்டும் திசை திருப்ப பல முயற்சிகளை மேற்கொண்டனர், பல சதி வலைகளை விரிக்கத்தொடங்கினர்.
நேரடியாக ஒரு முஸ்லிமிடம் சென்று “ உன் மார்க்கத்தை விட்டு விடு , ஹிஜாபை கழற்று , இவ்வாறெல்லாம் கூறினால் எந்த முஸ்லிமையும் இஸ்லாத்தின் கலாச்சாரத்தை விட்டு திருப்ப முடியாது என அவர்கள் நன்றாகவே விளங்கியிருந்தனர் .
. இதனால் தொலைக்காட்சி, தொலைபசி போன்ற சாதனங்களை அறிமுகப் படுத்தி சமூக வலயத்தலங்களினூடாக கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்களின் இஸ்லாமிய சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி இறை தூதரின் வழிமுறைகளை அநாகரிகமாகக் காட்டினர் .
அவர்கள் (யூத,கிறிஸ்தவர்கள்) காட்டிய கலாச்சாரங்கள், மேம்பாடுகள் நம்மில் அதிக தாக்கத்தை செலுத்தி அது முஸ்லிம் ஆண்கள், பெண்கள் , சிறார்கள் என அனைவரிலும் மேலும் முஸ்லிம் பாடசாலைகள் , வீடுகள் என அனைத்து இடங்களிலும் வெளிப்படத் தொடங்கின .
இன்று எமது பெண்கள் தன்னுடைய புருவம் கவர்ச்சியாக இல்லை என்று புருவங்களை சிரைக்கின்றனர், பற்கள் அழகாக இல்லை என்று பற்களை கூர்மையாக்குகிறார்கள், ஒட்டு முடி வைக்கின்றனர், இவ்வாறு அல்லாஹ்வின் அழகான படைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக கையடிக்கத் தொடங்கிவிட்டனர்.
அதுமட்டுமல்லாமல் தன்னுடைய நிறமும் கூட ஏனையவர்களை கவர வேண்டும் என்பதற்காக இன்று புதிது புதிதாக வெளியிடப்படும் வயிட்னிங் கிரீம் (whitening cream) கள் பயன்படுத்தப்படுவது பெரும்பாலும் எமது முஸ்லீம்களின் வீடுகளில் தான் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை.
“நான் அவர்களுக்கு ஏவுவேன் அப்போது அவர்கள் அல்லாஹ்வின் படைப்பை மாற்றுவார்கள்” என சைத்தான் அல்லாஹ்விடத்தில் சபதமிட்டது எங்களில் பலருக்கு மறக்கடிக்கப்பட்டதாக மாறியதே இதற்குக் காரணம்.
அதுமட்டுமல்லாமல் பெண்களின் மானத்தைப் பாதுகாப்பதற்காக அணியப்படும் ஆடைகளிலும் அவர்களது சூழ்ச்சியை உட்செலுத்த அவர்கள் தவறவில்லை.
ஒரு இஸ்லாமியப் பெண்ணின் சின்னமாகவும், அவளது மானத்தையும், கௌரவத்தையும் பாதுகாப்பதற்காகவும் எமது பெண்களுக்கு மத்தியில் அணியப்பட்டு வந்த ஹபாயா, பர்தாக்கள் இன்று அந்தப் பெண்ணையே ஒரு காட்சிப் பொருளாக மாற்றக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.
அதை விட பரிதாபம் என்னவென்றால் “ இஸ்லாமிய ஹிஜாபை தூய்மையாக அணியும் முஸ்லிம் பெண்கள் சில அநாகரிக வாதிகளிளாலும் அறிவிலிகளாலும் தூற்றப்படுவதுதான் .
அத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தான் அணியும் ஷோல்(shole) மற்றவர்களை கவரக்கூடியதாக இருப்பதற்காக தங்களுடைய கொண்டைகளை ஒட்டகத்தின் திமில்களைப் போன்று உயர்த்திக்கட்டுவது தான் நாகரீகம் என்று அவர்களின் ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كاسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை (முதலாவது பிரிவினர் யாரெனில்) மக்களில் சிலர் பசு மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து நடந்து (அந்நிய ஆண்களின் கவனத்தை) தன் பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்கத்தில் நுழையமாட்டார்கள்,சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிகொண்டிருக்கும். (முஸ்லிம் – 4316)
அன்பின் சகோதரிகளே !!! இறை தூதர் ( ஸல் ) அவர்கள் “சுவனத்தின் வாடையைக் கூட நுழைய மாட்டார்கள் “ என்ற பெண்களின் பட்டியலிலா வீழ்ந்து விட்டோம் ???? சற்று சிந்தியுங்கள் . அல்லாஹ் பாதுகாப்பானாக .
இந்த மாற்றம் எங்களது இளைஞர்களையும் காவுகொள்ளாமல் விட்டுவிடவில்லை. சினிமா நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் முன்மாதிரிகளாக எடுத்துக்கொண்டு பேச்சு, நடவடிக்கை போன்ற அனைத்து விடயங்களிலும் தங்களை மாற்றிக்கொள்ள முனைந்துவிட்டனர்
.அதற்கு ஓர் சிறிய உதாரணம் தான் தங்களது தலை முடியை அலங்கரிப்பதற்காக முடியின் ஒரு பகுதியை விட்டு விட்டு மறு பகுதியை மட்டும் மளிக்கின்றனர்.
அதே போல் இறைதூதரின் வழிமுறைகளான தாடியை வளர விடுவது , கரண்டைக் கால் கீழ் ஆடை அணிவது போன்றவைகளை கேவலமாக நினைத்து பெஷன் ஆடையும் அணிந்து தாடியை சிரைக்கின்றனர். அல்லது கத்தரிக்கின்றனர் .
அதை விட அநியாயம் என்னவென்றால் இறை தூதரின் வழிகாட்டலான தாடி சில நாகரீக தாய்மார்களுக்கும் மனைவிமார்களுக்கும் வெறுப்பாகத் தெரிவது. இத்தகைய பெண்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும் .
இவ்வாறு அல்லாஹ், ரசூலால் எச்சரிக்கப்பட்டு, சுவனத்தின் வாடையைக் கூட நுகரமுடியாத அளவுக்கு எம்மை மாற்றக்கூடிய விடயங்களைத் தான் இன்று நாம் நாகரீகம் என்ற பெயரில் அரங்கேற்றி அதற்கு அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இவ்வாறான கெட்ட சூழ்ச்சிகளுக்கு நாம் அடிமையாகிப் போய், நரகவாதியின் செயல்களை செய்வதற்கு துணிந்து செல்வதற்கான முக்கிய காரணம் போதுமென்ற மனப்பாங்கு எங்களுக்குள் இல்லாமல் போனமையும் நரகத்தையும், அல்லாஹ்வின் தண்டனையைப் பற்றிய அச்சமின்மையும்தான்.
. “(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். (முஸ்லிம் – 6446)
என்ற அல்லாஹ்வின் தூதரின் கூற்றிற்கேற்ப, எவர் ஒருவர் தனக்கு அல்லாஹ் அருளியவற்றை முழு மனதோடு போதுமாக்கிக்கொண்டு நாகரீகம் என்ற பெயரில் உலாவருகின்ற அநாகரீகமான செயல்களை விட்டும் தூரமாகிக்கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வும், தூதரும் எச்சரித்த பாவமான பாதையில் செல்வதற்கு அவருடைய மனச்சாட்சியே அவருக்கு தடைக்கல்லாக அமையும்.
எனவே அல்லாஹ் அருளிய அருட்கொடைகள்: சொத்து, சுகம், ஆரோக்கியம் அனைத்தையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு, அவற்றை அல்லாஹ் ஏவியபடி ஹலாலான முறையில் அனுபவித்து, இந்த போலியான உலகின் அலங்காரத்திற்காக எந்த உறுப்பிலெல்லாம் கை வைத்தோமோ அதே உறுப்பே நாளை மறுமையில் எமக்கெதிராக சாட்சி சொல்லக்கூடிய கைசேதமான நிலைமையிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வோமாக!
                                                                     மௌலவியா:- ஹஸ்னா அன்சார் ஷரஈயா 

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget